ஐ.நா வல்லுநர்கள் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் - பகுதி 2

பான் கீ மூனின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தனித்துவமாக வழங்கியிருந்த 'ஐலண்ட்' பத்திரிகை சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதன் இதர- பொருத்தமான பகுதிகளை தொடராக வெளியிட்டு வருகிறது.


பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பொருத்தமான பகுதிகளை முன்னர் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது.

ஐ.நாவினது வல்லுநர்கள் குழு சிறிலங்காவிற்கு எதிரான ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அது தொடராக வெளியிடப்பட்டுவரும் ஐ.நாவின் அறிக்கையினது முதலாவது பாகத்தில் பொதுமக்கள் இழப்பு தொடர்பான விபரங்களை இணைந்திருந்தோம். இரண்டாவது பகுதியில் பொதுமக்கள் இலக்குகள் மீதுதான தாக்குதல்கள் தொடர்பான பகுதிகளைத் தந்திருந்தோம். மூன்றாவது பகுதி இங்கே தொடர்கிறது.

மருத்துவமனைகள் மீதான எறிகணைத் தாக்குதல்கள்:

மருத்துவமனைகளை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டமைதான் சிறிலங்காவிற்கு எதிராகச் சுமத்தப்பட்ட இரண்டாவது பிரதானமாக குற்றச்சாட்டாகும். பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவினது அறிக்கையில் மருத்துவமனைகள் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் தொடர்பாக கீழ்க்கண்டவாறு விபரிக்கிறது:

சனவரி 19 தொடக்கம் 21 வரையிலான காலப்பகுதியில் முதலாவது பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்திருந்த வள்ளிபுனம் மருத்துவமனையினை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடாத்தியிருந்தனர். வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும், அது நிரந்தர அல்லது தற்காலிக மருத்துவமனைகளாக இருக்கலாம், எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின. குறிப்பாக காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த மருத்துவமனைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டன (பக்கம் 23 தொடக்கம் 24).

87. கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்தன. சனவரி 24ம் நாளன்று முதலாவது பாதுகாப்புவலயப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தற்காலிக மருத்துவமனையின் கூரையில் மருத்துவமனை என அடையாளப்படுத்தப்பட்டிருந்தபோதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

4. புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான சிறிலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்

90.
சிறிலங்காவினது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட பெப்பிரவரி 04ம் நாளன்று புதுக்குடியிருப்பு நகரினைக் கைப்பற்றும் நோக்கில் 55ம் மற்றும் 58ம் படைப்பிரிவினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே உக்கிரமோதல்கள் வெடித்தன. அந்த வேளையில் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் அங்கீகரித்த வன்னிப் பிராந்தியத்தில் செயலாற்றிய ஒரேயொரு அரச மருத்துவமனை புதுக்குடியிருப்பு மருத்துவமனைதான். அந்த ஐந்து மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் தங்களாலான பணியினைச் செய்தார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் மீதான படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் ஒரு திரும்புமுனையாக அமைந்தது எனலாம். இதன் விளைவாக மக்கள் இழப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்துச் சென்றது. பாதுகாப்பு வலயப்பகுதியில் காயமடைந்த நூற்றுக்காணக்கான மக்களால் நிறைந்து வழிந்தது புதுக்குடியிருப்பு மருத்துவமனை.

பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கும் குறையாத நோயாளர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். ஆட்லறி எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோட்டார் குண்டுகளில் தாக்குதல்களால் மோசமான அல்லது உயிராபத்தான காயங்களுடனேயே பலர் இங்கு அனுமதிக்கப்பட்டனர். கைக்குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் என காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் அனைத்துக் கட்டங்களுக்குள்ளும் தங்கவைக்கப்பட்டனர். கட்டில்கள், கட்டில்களுக்கு கீழே, நடைபாதை அனைத்துப் பகுதிகளும் காயமடைந்தவர்ளால் நிறைந்து வழிந்தன.

91.
29 சனவரி 2009 அன்று வன்னிப் பகுதியில் தங்கியிருந்த ஐ.நாவின் இறுதி இரண்டு வெளிநாட்டுப் பணியாளர்களும் வவுனியாவினை நோக்கிப் புறப்பட்டனர். ஐ.நா அமைப்புக்களில் பணிசெய்த உள்ளூர் பணியாளர்கள் அனைவரும் வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்கவில்லை. குறித்த இதே தினத்தில் காயமடைந்த மேலும் 200 பேருடன் அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவினது தனியான தொடரணி வவுனியாவினை நோக்கிப் புறப்பட்டது. இதன் பின்னர்தான் நிலைமைகள் மேலும் மோசமாகிச் சென்றன.

சனவரி 29 தொடக்கம் பெப்பிரவரி 04 வரையிலான ஒருவார காலப் பகுதிக்குள் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. ஒன்பது எறிகணைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட தொகையுடையோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பெப்பிரவரி 04ம் நாளன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனை வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது செஞ்சிலுவைக்குழுவின் அனைத்துலப் பணியாளர்களும் மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்திருக்கிறார்கள். சிறிலங்கா அரச படையினரின் நிலைகளிலிருந்துதான் எறிகணைகள் ஏவப்பட்டிருந்தன.

92.
புதுகுடியிருப்பு மருத்துவமனையின் அமைவிடம் தொடர்பான ஆள்கூற்றுப் புள்ளிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அரச படையினருக்கு நன்கு தெரியும். அத்துடன் ஆளற்ற வேவு விமானங்களால் தெளிவாக அடையாளம்காணக்கூடிய வகையில் மருத்துவமனையின் கூரையில் அடையாளமிடப்பட்டிருந்தது.

"அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள் மற்றும் மருத்துவ வசதி வாய்ப்புகள் பாதுகாக்கப்படவேண்டும். எந்தச் சூழமைவிலும் இத்தகைய இலக்குகள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது" என பெப்பிரவரி 01ம் நாளன்று அனைத்துலக செஞ்சிலுவைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

93.
கள நிலைமைகள் தொடர்பான அறியாமையின் பால் அமைந்த அறிக்கை இது. மனித உரிமைகள் மற்றும் அனர்ந்த முகாமைத்துவ அமைச்சு செஞ்சிலுவைக்குழுவின் இந்த அறிக்கைக்குப் பதிலளித்திருந்தது. புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது தாக்குதல் நடாத்தப்பட்டதை அரசாங்கம் ஆரம்பத்தில் மறுத்திருந்த நிலையில் 02 பெப்பிரவரி 2009 அன்று பாதுகாப்புச் செயலாளர் ஸ்கைநியுஸ் தொலைக்காட்சிக்குக் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தார்:

"புதுக்குடியிருப்பு மருத்துவமனையினைக் குறிப்பிட்டே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறதெனில், தற்போது அங்கு எந்த மருத்துவமனையும் இல்லையே. நாங்கள் அந்த மருத்துவமனையினை எடுத்துவிட்டோம். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியாவிற்கு மாற்றப்பட்டுவிட்டார்கள். பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே எதுவும் இல்லை. பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் எந்த மருத்துவமனையும் செயற்படமுடியாது. இதனால்தான் நாங்கள் பாதுகாப்பு வலயத்தினை ஏற்படுத்தியிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

94.
கிளிநொச்சி நகரம் வீழ்ச்சிகண்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போரின்போது புதுக்குடியிருப்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகத் திகழ்ந்தது. இதன் விளைவாக புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுக்கூறக்கூடிய பிரசன்னத்தினைக் கொண்டிருந்தார்கள். அதேநேரம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் காயமடையும் போராளிகளுக்கென தனியான மருத்துவ விடுதிகளைப் புலிகள் கொண்டிருந்தபோதும் அங்கு ஆயுதம் தரித்த புலிகள் எவரும் இருக்கவில்லை. இந்த மருத்துவமனையிலிருந்து குறுகிய தூரத்திலேயே முன்னணிப் பாதுகாப்பு நிலை அமைந்திருந்தது. இந்த நிலையில் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் மோதல்கள் தீவிரம்பெற அதிகளவிலான காயமடைந்த புலிகளின் உறுப்பினர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். மருத்துவமனைக்கு அருகான பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளும் தங்களது மோட்டார் தாக்குதல்களை நடாத்தியபோதும், மருத்துவமனை வளாகத்தினை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவில்லை.

புதுக்குடியிருப்புப் பிராந்தியத்தினை எவ்வாறாயினும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் சிறிலங்கா அரச படையினர் மருத்துவமனை வளாகத்தின் மீதும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மீதும் மீண்டும் மீண்டும் தாக்குதலைத் தொடுத்தனர். எறிகணைத் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில், பிராந்திய சுகாதார சேவை அதிகாரிகள், ஐ.நா, அரச அதிபர் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்த 300 நோயாளர்களை அங்கிருந்து 6-8 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருந்த புதுமாத்தளனுக்கு இடம் மாற்றுவதற்குத் தீர்மானித்தனர். விடுதலைப்புலிகளாலும் பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை 6 பெப்பிரவரி 2009 எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது.

110.
பாதுகாப்பு வலயத்தின் வடபகுதியை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய பின்னர், போர் நடைபெற்ற பகுதியில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மட்டுமே எஞ்சியிருந்தது. அங்கு வைத்தியசாலையில் சீருடையில் எந்தவொரு விடுதலைப்புலி உறுப்பினரும் இருக்கவில்லை. அவர்கள் ஆயுதங்களுடனும் உள்நுழையவில்லை. வைத்தியசாலை நிலமைகள் மிகவும் மோசமாக இருந்தன. இந்த வைத்தியசாலையில் 4 மருத்துவர்களும் இரண்டு தற்காலிக சத்திரசிகிச்சைக் கூடங்களும் இருந்தன. மோசமான தலைக்காயங்கள் மற்றும் உயிர் தப்ப முடியாத காயங்களைக் கொண்டவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் வசதியாகப் படுப்பதற்கு மட்டும் வசதி செய்யப்பட்டது. மிகக்குறைந்தளவு படுக்கைகளே இருந்த நிலையில் காயமடைந்தவர்கள் வைத்திசாலையின் முன்புறத்தில் பாய்களிலும் தற்காலிக கூடாரங்களினுள் புழுதி நிலங்களிலும் படுக்கவைக்கப்பட்டனர். அவர்களின் உறவுகள் மட்டுமே அருகிலிருந்தனர். கையுறைகள் இல்லை, சுகாதாரமற்ற நிலமையே காணப்பட்டது. பழைய துணிகளும் புடவைகளும் மருந்து கட்டும் துணிகளாகப் பயன்பட்டன.

தொற்றுக்கள் ஏற்படக்கூடிய அபாயம் மிக அதிகமாகக் காணப்பட்டது. சத்திரசிகிச்சை உபகரணங்கள் அற்ற நிலையில், கசாப்புக் கடைக் கத்திகளைக் கொண்டு அவையவங்கள் துண்டிக்கப்பட்டன. அகற்றப்பட்ட அவையவங்கள் குவிக்கப்பட்டிருந்தன. பல சந்தர்ப்பங்களில், போதியளவு மருத்துவ வசதிகளில்லாத காரணத்தினால், உயிரைக் காப்பாற்றுவதற்காக அவையவங்கள் அகற்றப்பட்டன. மயக்கமருந்து பற்றாக்குறை காரணமாக இருந்த மயக்கமருந்தினுள் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கலந்தே பயன்படுத்தப்பட்டது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் மயக்கமருந்து இல்லாமலேயே அவையவங்கள் அகற்றப்பட்டன. சிலர் தொடர்ந்தும் இரத்த தானம் செய்தனர். ஆனால் பொதுவாக நிலவிய இரத்தப் பற்றாக்குறை காரணமாக, காயமடைந்தவரின் குருதியையே துணியினால் வடிகட்டி மீண்டும் அவருக்கே ஏற்றப்பட்டது.

111.
எண்ணற்ற தடவைகள் மருத்துவமனையினைத் தாக்கிய கடுமையான எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதிக்கு மாற்றப்பட்டது. மே 11 மற்றும் 12ம் நாள்களில் இரண்டாவது மருத்துவமனையும் சிறிலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் விளைவாக எண்ணற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த மருத்துவமனையும்கூட தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்தது. இரண்டாவது மருத்துவமனையும்கூட முதலாவது மருத்துவமனையைப் போலவே மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக மருத்துவமனை ஊழியர்கள்கூடக் கொல்லப்பட்னர் (பக்கம் 34).

119.
காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வழிசெய்யும் வகையில் மருத்துவமனைகள் மீதான எறிகணைத் தாக்குதல்களை உனடடியாக நிறுத்துமாறுகோரி உதவி அரசாங்க அதிபர் மற்றும் மருத்துவர்கள் தொடரான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலெதுவும் கிடைக்கவில்லை. மே 14ஆம் நாளுக்குப் பின்னர் எறிகணைத் தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு தீவிரமடைந்த நிலையில் மருத்துவர்களால் மருத்துவமனைக்குச் செல்லமுடியவில்லை. மருத்துவமனையினை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அங்கிருந்து நகர்த்தமுடியாத நிலையில் அங்கேயே விடப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பதுங்குகுழிகள் தஞ்சம்புகுந்தனர். சமைப்பது என்பது முடியாத காரியமானது. மலசலம் கழிப்பதற்கு பதுங்குகுழிக்கு வெளியேசெல்லவதுகூட ஆபத்துநிறைந்ததாக மாறியது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு மக்கள் பெருமெடுப்பில் வெளியேற முனைந்தபோதும் புலிகள் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு அவர்களைத் தடுத்தார்கள். அங்கிருந்து வெளியேறியவர்களைப் இராணுவத்தினர் அழைத்துச்சென்றார்கள்.

போர் இடம்பெற்ற பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் தொகையினைக் குறைத்துக் கூறியதன் ஊடாக அவர்களுக்குப் போதிய உணவுகள் மற்றும் மருத்துப்பொருட்கள் கிடைப்பதை சிறிலங்கா மறுத்தமை தொடர்பான விபரங்கள் இந்த நான்காவது பகுதியில் தொடர்கிறது.

தமிழ் பொதுமக்களின் எண்ணிக்கையினைக் குறைத்துக் கூறுதல்:

ஈ. போதிய மனிதாபிமான உதவிகளை மறுக்கும் வகையில் குழப்பம்தரும் இடம்பெயர்ந்தவர்களது எண்ணிக்கை

124.
போரின் இறுதிக் கட்டத்தில் குறிப்பாக சனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களின் தொகையினை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமென்றே குறைத்துக் கூறியிருக்கிறது. இதுபோல குறைந்தளவு பொதுமக்களே அங்கிருக்கிறார்கள் எனக் கூறியதன் ஊடாக அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியிருக்கிறது.

125.
இறுதிக்கட்டப் போர் தீவிரம் பெற்ற நிலையில், சுதந்திரமான உறுதிப்படுத்தல்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பொதுமக்களின் தொகை 150,000 க்கும் 250,000க்கும் இடைப்பட்டது என சிறிலங்கா அரசாங்கம் 13 சனவரி 2009 அன்று தனது இணையத்தளத்தின் ஊடாகத் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால் வன்னிப் பிராந்தியத்தில் 250,000க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்துவருகிறார்கள் என சனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் ஐ.நா கணக்கிட்டிருந்தது (இதன் பின்னர் ஐ.நா வெளியிட்ட விபரங்களில் மக்களின் தொகை மேலும் அதிகம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது). ஆனால் வன்னிப் பிராந்தியத்தில் வெறும் 75,000 பொதுமக்கள் மாத்திரமே எஞ்சியிருக்கிறார்கள் என சனவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உண்மையில் எத்தனை பொதுமக்கள் வசித்துவருகிறார்கள் என்பது தொடர்பான உண்மையான தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நன்கறியும். உலக உணவுத் ஸ்தாபனத்திடமிருந்து உலர் உணவுகளைப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட அரச அதிபர்கள் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை மாதாந்தம் திரட்டடிவந்தார்கள்.

செப்ரெம்பர் 2008க்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னிப் பிராந்தியத்தில் 420,000 பொதுமக்கள் இருந்ததை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்க அதிபர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். பொதுமக்கள் தொடர்பான இந்தத் தொகை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் வன்னிப்பிராந்தியத்தல் பதிவுசெய்யப்பட்ட பாடசாலைச் சிறார்களின் எண்ணிக்கை 70,000 என ஐ.நா சிறுவர் நிதியம் கணக்கிட்டிருந்தது. வன்னிப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் தொகையென சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட தொகையும் பதியப்பட்ட பாடசாலை மாணவர்கள் என சிறுவர் நிதியம் குறிப்பிட்ட தொகையும் ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கிறது.

126.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தொகை மாறுபட்டதாக அமைந்தது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவந்த மக்களின் தொகையென பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டவை எப்போதுமே மிகவும் குறைவானதாகத்தான் இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செயற்பட்டுவந்த அரச ஊழியர்கள் மக்களின் தேவை மதிப்பீடு உள்ளிட்ட இதர புள்ளிவிபரங்களை அரசாங்கத்திற்கு அனுப்பியபோது அரசாங்கத்தினால் கண்டிக்கப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக, 02 பெப்பிரவரி 2009 அன்று முல்லைத்தீவு மாவட்ட உதவி அரச அதிபர் பொதுநிர்வாக உள்நாட்டு விவகார அமைச்சுக்கு இரண்டாவது பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நிலமை அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 81000 குடும்பங்களைச் சேர்ந்த 330,000 பேர் அப்போது வசித்துவந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பதியில் 330,000 பேர் இருக்கிறார்கள் எனக் கூறுவது 'தன்னிச்சையானது மற்றும் ஆதாரமற்றது' எனவும் 'இடம்பெயர்ந்தவர்களது தொகை தொடர்பாக இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தொடர்ந்தும் வழங்குமிடத்து' ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்கவேண்டியது 'தவிர்க்கமுடியாதது ஆகிவிடும்' எனவும் மார்ச் 18ம் நாளன்று தேச நிர்மான மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினது செயலாளர் உதவி அரசாங்க அதிபருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

127.
வேல்ட் வியூ மற்றும் குயிக்பேட் ஆகிய செய்மதிகள் எடுத்த ஒளிப்படங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 267,618 பேர் இருக்கிறார்கள் என 2009ம் ஆண்டு பெப்பிரவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் சிறிலங்காவினது ஐ.நா அணி சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தகவல் வழங்கியிருந்தது. ஏப்பிரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 127,177 பேர் தொடர்ந்தும் வசித்துவருகிறார்கள் என ஐ.நா கணக்கிட்டிருந்தது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் வெறும் 10,000 பேர் மாத்திரமே அங்கிருக்கிறார்கள் என்றது சிறிலங்கா அரசாங்கம்.

ஈற்றில் மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து வெளித்தோன்றிய 290,000 பொதுமக்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு மாணிக்கம் பண்ணை முகாமில் தங்கவைக்கப்பட்டனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த மக்களின் தொகை தொடர்பான முன்பின் முரணான அரசாங்கத்தின் விபரங்கள் தொடர்பாக அது இதுவரை எந்த விளக்கத்தினையும் வழங்கவில்லை.

128.
இவ்வாறாக இடம்பெயர்ந்தவர்களின் தொகையினை அரசாங்கம் குறைவாக மதிப்பிட்டதன் விளைவாக, உண்மையில் வன்னிப் பிராந்தியத்தில் சிக்கியிருந்த மக்களுக்குத் தேவையான அளவு எதுவோ அதனைவிடக் குறைந்தளவிலான உணவு நிவாரணப் பொருட்களே உலக உணவு நிறுவனத்தினரால் வழங்கப்பட்டிருந்தது. இது பரந்துபட்ட போசாக்கின்மை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு வழிசெய்தது.

அதேபோலவே பெருந்தொகையான பொதுமக்கள் எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகக் காயமடைந்த நிலையில், வன்னிப் பிராந்தியத்திற்கு அனுமதிக்கப்பட்ட மருந்துப்பொருட்களின் அளவு அங்கு காணப்பட்ட பெரும் தேவையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. இரண்டாவது பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மையினைக் கருத்திற்கொண்டு, மயக்க மருந்துகள், இரத்தத்தினை ஏற்றுவதற்கான பைகள், நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், சத்திரசிகிச்சைக்குரிய பொருட்கள், கையுறைகள் மற்றும் தொற்றுநீக்கிகள் போன்றவற்றை மருத்துவர்கள் கோரியிருந்தார்கள்.

இவற்றில் மிகவும் குறைந்தளவான பொருட்களே அங்கு அனுப்பப்பட்டிருந்தன. அத்தியாவசியமான தேவையாக இருந்த இந்த மருத்துகளுக்குப் பதிலாக பனடோல், ஒவ்வாமைக்கு உரிய மாத்திரைகள் மற்றும் விற்றமின்களே அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டன.

மாச்ச் 2009ல் பொதுமக்கள் இழப்புகள் வேகமாக அதிகரித்துச்செல்ல தேவையான மருந்துப்பொருட்கள் இல்லாமல் இருந்தமையின் விளைவாக காயமடைந்தவர்கள் பெரும் துன்பத்தினைச் சந்தித்ததோடு தேவையற்ற பல மரணங்களும் சம்பவித்தன. கடிதங்கள் ஊடாகவும் செய்தி ஊடகங்களுடனான செவ்விகள் வாயிலாகவும் போர் இடம்பெற்ற பகுதியில் நிலவிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பாக மருத்துவர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தனர். இறந்த மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களையும் இவை தொடர்பான ஒளிப்படங்களையும் இந்த மருத்துவர்கள் அனுப்பியிருந்தார்கள்.

இதுபோல இழப்பு விபரங்களைச் சேகரிப்பதையோ அல்லது அதனை ஊடகங்களுக்குத் தெரிவிப்பதையோ உடனடியாக நிறுத்துமாறு மருத்துவர்களுக்குப் பணித்த சுகாதார அமைச்சு இல்லையேல் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தது. மார்ச் 16ம் நாளன்று மருத்தவர்களான சத்தியமூர்த்தி மற்றும் வரதராஜா ஆகியோர், 'முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துப் பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்ட தேவையற்ற மரணங்கள்' என்ற தலைப்பில் அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்கள்.

"மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் பல மரணங்கள் நிகழாமல் தடுத்திருக்கலாம். நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் எவையும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. மயக்கமருந்துகள் எதுவுமே அனுப்பப்படவில்லை. நோயாளர்களை மயக்குவதற்குப் பயன்படும் ஐ.வி திரவம் ஒரு போத்தலேனும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உயிர்காக்கும் அவசர சத்திரசிகிச்சைகள் எதனையும் மேற்கொள்ளமுடியாத நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்" என மருத்துவர்களின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

129.
முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் மயக்கமருந்துகளைக் கையாளுவதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர் எவரும் இல்லாத நிலையில் வலிநிவாரணிகளையும் ஐ.வி திரவங்களையும் மாத்திரமே அனுப்பமுடியும் என 19 மார்ச் 2009 அன்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. தங்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதிகளை இந்தியத் தூதரகத்திற்கோ அல்லது தமிழ்நாட்டு முதல்வருக்கோ அல்லது வேறு எவருக்குமோ பிரதியிட்டு அனுப்புவதன் ஊடாக வழிமுறைகளை மீறவேண்டாம் எனவும் தவறின் 'வழிமுறைகளை மீறயதற்காகவும் அரசாங்கத்தினைச் சங்கடத்தில் ஆழ்த்தியமைக்காகவும்' ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அனுப்பிய கடிதத்தில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

130.
ஈற்றில் மே 16ம் நாளன்று இந்த மருத்துவர்கள் போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து வெளியேறியபோது கைதுசெய்யப்பட்டதோடு பல மாதங்களாகத் தடுத்துவைக்கப்பட்டனர். யூலை மாதத்தின் முதற் பகுதியில் இந்த மருத்துவர்களை வைத்து உடகவியலாளர் மாநாடொன்று நடாத்தப்பட்டது. போர் இடம்பெற்ற வேளையில் மிகவும் குறைந்தளவிலான பொதுமக்களே கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்தனர் என்றும் இழப்புகள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்திக் கூறுவதற்கு தாங்கள் புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து மின்னஞ்சல்கள் வாயிலாகவும், செவ்விகள் மற்றும் அறிக்கைகள் ஊடாகவும் இந்த மருத்துவர்கள் வழங்கிய தகவல்களுக்கு முரணானதாக இந்த மருத்துவர்களின் புதிய கருத்து அமைந்தது. அரசாங்கத்தின் கடுமையான அழுத்தத்தின் காரணமாகவே ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த மருத்துவர்கள் இவ்வாறு கருத்துரைத்திருக்கிறார்கள் என வல்லுநர்கள் குழு வெகுவாக நம்புகிறது. அத்துடன் மருத்துவர்கள் முன்னர் வெளியிட்ட அறிக்கைகளின் உண்மைத் தன்மையினை இந்தப் ஊடகவியலாளர் மாநாடு எந்தவகையிலும் பாதிக்காது என்றும் குழு நம்புகிறது.

131.
பொதுமக்களின் அளவு தொடர்பான உண்மையான தகவல்களைப் பெறக்கூடிய வசதி அரசாங்கதிற்கு இருந்தபோதும் வன்னிப்பிராந்தியத்திற்கான அத்தியாவசிய வழங்கல்களைக் குறைப்பதற்கான திட்டமிட்டதொரு நடவடிக்கையாகவே, பொதுமக்களின் தொகை தொடர்பாக அரசாங்கம் குறைத்துக் கூறியிருக்கிறது.

இதன் காரணமாகவே பொதுமக்களின் எண்ணிக்கை அரசதரப்பினரால் குறைத்துக்கூறப்பட்டது என்பதை அரசாங்கத்தின் மூத்த அலுவர் ஒருவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதுபோல பொதுமக்களின் தொகையினை அரசாங்கம் குறைத்துக்கூறியதானது போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றே என அரசாங்கம் கருதியிருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

Comments