இப்போது அம்மா பறவாயில்லை. அக்காவின் தொடர்பு அவருக்கு கிடைத்துவிட்டது. அப்பாதான் எந்த முகாமில் நின்று திண்டாடுகிறாரோ தெரியவில்லை. பாவம் அக்காவும் அத்தானும்தான் அவரை முகாம் முகாமாக தேடி அலைவார்கள்.
இப்போது கதைத்தால்தான் அப்பாவை கண்டுபிடித்துவிட்டார்களா இல்லையா என்று தெரியும். அப்பாவால் தனியே தன்னை சமாளித்துக்கொள்ள முடியாது. அம்மாதான் அப்பாவுக்கு எல்லாம்.
சரி இதோ வரிசையில் தொலைபேசிக்கு அருகே நெருங்கி வந்தாயிற்று. அடுத்த ஐந்தாவது ஆளாக நானே நிற்கிறேன். கதைத்தால் பெற்றோரின் நிலைவரம் தெரிந்துவிடும். தங்கையும் வருகிறாள் என்று அறிவித்துவிட்டால் போதும். இனிமேல் அக்கா அவர்களை பார்த்துக்கொள்ளட்டும்.
“போன் வேலை செய்யுதில்லை. போயிட்டு பிறகு வாங்கோ” என்றான் ஒழுங்கு செய்து கொடுத்துக்கொண்டிருந்த பையன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. மணித்தியாலக் கணக்காய் காத்திருந்து கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனமாதிரி அல்லவா ஆகிவிட்டது. வரிசையில் நின்றவர்கள் ஒவ்வொருவராய் செல்லத் தொடங்கினார்கள்.
நான் அந்த பையனிடம் சென்று, ‘தம்பி எனக்கொரு உதவி செய்விங்களா ?’ என்றேன்.
‘சொல்லுங்க அக்கா’ என்றான் சிநேகப்புன்னகையுடன். ‘இந்த இலக்கத்துக்கு எடுத்து இண்டையான் கப்பலில இந்திரா வாறா எண்டு அறிவிச்சு விடுறிங்களா?’
‘சரியக்கா. பேரையும் இலக்கத்தையும் எழுதி தந்திட்டு போங்க. லைன் கிடைச்சால் அறிவிச்சு விடுறன் என்றான்.’
‘நன்றி தம்பி. சரியாய் செல்லடிக்கிறான். சிலவேளை என்னால இன்னொருக்கா வரமுடியாமலும் போகலாம். அதான்.’ என்றபடி தகவலை எழுதி நீட்டினேன். அந்த பையன் வேதனைச்சிரிப்போடு தலையை ஆட்டினான். சின்னப்பையன்தான். ஆனாலும் மனித உணர்வுகளை புரிந்து கொள்கின்றான்.
வலைஞர்மடத்தில் வைத்து சின்னக்காவின் சாவுச்செய்தியை பெரியக்காவிற்கு அறிவிக்கப்போனபோதும் இந்தப்பையன்தான் தொடர்பெடுத்து தந்தான். ஆனால் என்னிடம் கதைக்காமலேயே என் நிலையை விளங்கிக்கொண்டான் போலும்.
பலவாறும் சிந்தித்துக்கொண்டு தறப்பாள் விரிப்புகளை விலக்கிக்கொண்டு வீதியில் ஏறிய நான் திடீரென்று நிலத்தில் வீழ்ந்தேன். விழுந்துகிடந்த என்னைச்சுற்றிலும் சிதறுதுண்டுகள் பொலபொலவென கொட்டின. முகத்தை கையால் மூடிக்கொண்டு குப்புறக்கிடந்த எனது முதுகு கூசியது.
அடுத்த எறிகணை ஏவப்படுவதற்குள் தவழ்ந்தேன். வீதியோரம் நின்ற உழவியந்திர பெட்டியொன்றின் கீழ் ஊர்ந்து அதன் சில்லுகளுக்கிடையே படுத்துக்கொண்டேன். அந்தச் சுற்றயலிலேயே தொடர்ந்து விழுந்த ஐந்தாறு எறிகணைகளில் அன்று நான் உயிர்தப்பியது அதிசயமே.
அவ்விடத்தில் செத்திருந்தாலும் அனாதை பிணமென்று என்னை தூக்கி ஒரு ஓரத்தில்தான் எறிந்திருப்பார்கள். ஏனெனில் அந்த வீதியில் மக்கள் புழக்கம் மிகக்குறைந்திருந்தது. எல்லோரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டிருந்தார்கள்.
கால நேரமின்றி படையினர் எறிகணைகளை எறிந்துகொண்டேதான் இருந்தார்கள். அவை அடிக்கடி வானத்தை இருட்டாக்கி மறைத்துக்கொண்டிருந்தன. கடலில் இருந்து சீறிப்பாயும் கனோன்கள் நிமிடத்திற்கு நிமிடம் தமிழர்களின் உடல்களை குதறிக்குதறி எறிந்துகொண்டிருந்தன.
மரங்களுக்கெல்லாம் இலையுதிர்காலம் என்று ஒன்று இருப்பதைப்போல தமிழர்களுக்கும் இது உயிருதிர்காலம் போலும். பார்த்துக்கொண்டிருக்க மனிதர்கள் பிணங்களாய் சரிந்தார்கள். நிமிடத்திற்கு நிமிடம் சாவுச்செய்திகளை கேட்டுக்கேட்டு வாழ்க்கை சுரத்தற்றுப்போனது.
போரில் இனி வெல்லமுடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இந்த படுபயங்கரமான கொலைக்களத்தை பார்த்தாவது சர்வதேசம் தலையிடும் என்ற நம்பிக்கையோடு பலரும் தம் பசித்த வயிறுகளை தடவிக்கொண்டு பதுங்கு குழிகளுக்குள் கிடந்தார்கள்.
மழையெனப்பொழியும் சன்னங்களும் எறிகணைகளும் சிறிது ஓய்ந்தால்போதும் நானும் என் தோழிகளும் மக்களை தேடி அவர்களின் பதுங்குகுழித் தங்கிடங்களுக்கு சென்றுவிடுவோம்.
எல்லாவற்றையும் இழந்து கிடக்கும் அவர்களோடு கதைப்போம். பலவிதமான உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். ஆளாளுக்கு ஏறியிறங்கும் நியாயங்கள், கோபங்கள். எரிச்சல்கள்.
முன்பின் தெரியாத ஆயிரமாயிரம் முகங்களின் வேதனைகளையும் நம்பிக்கையீனத்தையும் பார்த்தபடி வீதியால் சென்றுகொண்டிருந்தேன்.
எதையெதையோ தேடி, எவர் எவரையோ தேடி வீதி முழுவதையும் நிறைத்தபடி அலைந்துகொண்டிருந்த மனிதர்கள் நடைப்பிணங்களாய்த்தான் தெரிந்தார்கள். மிளகாய் வெங்காயம் எல்லாம் எப்படி இருக்குமென்று மறந்துவிட்ட மக்கள், வெறும் பருப்பில்தான் வடை சுடுகிறார்கள்.
கடலை பருப்பை மட்டும் நசித்து உருட்டி, பொரித்த, எண்ணெய் வழியும் வடையை ஒன்று ஐம்பது ரூபாய் என்று விற்கும் வியாபாரியைகூட அதிசயமாகத்தான் பார்க்கமுடிந்தது. இந்த மீள்தல் உணர்வு தமிழர்களுடன் கூடப்பிறந்த ஒன்றுபோலும்.
சமாதான குலைவின் ஆரம்பநாட்களில் புதுக்குடியிருப்பு பாடசாலைமீது ஒருநாள் சிறிலங்கா விமானப்படையினர் குண்டுகளை வீசினர். அதன்போது எதிரே இருந்த ‘குமரன்’ காகிதாதிகள் விற்பனை நிலையமும் நொருங்கி தரைமட்டமாகிப்போனது. ஆனால் அடுத்த நாள் விடிந்தபோது அந்த கடை இருந்த இடத்தின் கருகிய சாம்பல்மேட்டின் முன்னாலேயே அக்கடையின் உரிமையாளர் ஈழநாதம் பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்தார்.
‘பத்திரிகையை எதிர்பார்த்து என்னிடம் வரும் வாடிக்கையாளரை நான் ஏமாற்றக்கூடாதுதானே’ என்றார். பொதுவாக வன்னி மாந்தர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். அகோர வீழ்ச்சியையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இதோ ஒரு வடையை ஐம்பது ரூபாய்க்கு விற்கின்ற வியாபாரி இதை தயாரிப்பதற்காக எத்தனை சவால்களை எதிர்கொண்டிருப்பார். நான்கு விறகுகளை சேகரிப்பதே எத்தனை கஸ்ரமானது. சீறிவரும் சன்னங்களையும் கூவிவரும் எறிகணைகளையும் பொருட்படுத்தாமல் வெளியே அலைந்துதிரிந்து ‘தேடினால்தான் பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இயந்திரம்போல இயங்கினால்தான் பணம்பண்ண முடியும். என்றாலும் இதுவுமொரு சேவைதான். மிளகாய் வெங்காயம் அறியாத வெறும் பருப்பு உருண்டைக்கே சனம் என்னபாடு படுகிறது. சுட்ட வடையை ஒரு மணித்தியாலத்திற்குள் விற்றுவிடலாம். அதற்குள் சனம் அடிபட்டு வாங்கிவிடுகிறது.
நித்தியா என்ற என் தோழி முதல் நாள் இரவு சொன்ன கதை வீதியில் சென்ற எனக்கு நினைவில் வந்தது. நித்தியா அவளின் வீட்டாரை சந்திக்க சென்றபோது தன் அக்காவின் மகளை தூக்கி கொஞ்சினாளாம்,
‘என்ர தங்ங்ங்கச் செல்லமே’ என்று. அவள் குழந்தையை முத்தமிட அவளின் அக்கா சொன்னாளாம், ‘அடியேய் என்ர பிள்ளைய தங்கமே பவுணே என்டெல்லாம் கொஞ்சாதையடி. அதெல்லாம் எங்களிட்ட தாராளமாய் இருக்கு. பச்சைமிளகாயே வெங்காயமே என்று கொஞ்சு’ என்று.
அந்தக்கதையை கேட்டு காப்பரணுக்குள் கிடந்த எல்லோருமே சிரித்தோம். உண்மைதான். என்ர மண்வெட்டியே, என்ர உரைப்பையே, என்ர சாக்கே என்று கொஞ்சினால்கூட அதிசயப்படுவதற்கில்லை. அருமைபெருமையானவற்றை சொல்லித்தானே குழந்தைகளை கொஞ்சுவார்கள். அத்தனை அவசியமான பொருட்களல்லவா மண்வெட்டி உரைப்பைகள்.
பதுங்குகுழிகள் அமைத்து அமைத்தே உரைப்பைகள், சாக்குகள், பனங்குற்றிகள் எல்லாம் அழிந்துவிட்டன. உடுக்கும் சேலைகளை நான்காக வெட்டி, பைகள்போல தைத்துவிட்டு அதில் மண்ணை நிரப்பி அடுக்கினால் அது மண்ணணை மறைப்பாகி விடும்தானே.
வட்டுவாகல் மண்ணணை மறைப்புகள் பல்லாயிரக்கணக்காய் முளைத்தன. முள்ளிவாய்க்கால் பகுதிகளெங்கும் சேலைகளில் தைக்கப்பட்ட பைகளாலான மண்ணணைகள் பல்லாயிரக்கணக்காய் முளைத்தன. பட்டுச்சேலைகள்கூட மண்ணணையாகின. கல்யாண வேட்டிகளும் கூடத்தான்.
மூலைக்குமூலை தையல் இயந்திரங்கள் கிடந்தாலும் அவை ஓயாமல் இயங்கிக்கொண்டுதான் இருந்தன. தையல் இயந்திரங்களை சொந்தமாய் வைத்திருந்தவர்களுக்கு தாராளமாய் உழைப்பு கிடைத்தது. ஆனாலும் ஓய்வொழிச்சல் இல்லாத சேவைபோலவே தைப்பவர்களும் செயற்படவேண்டி இருந்தது.
வீதியோரம் பிணமொன்று கிடந்தது. இப்போதொல்லாம் பிணங்களை தூக்கிச்சென்று புதைக்க எந்த வண்டியும் வருவதில்லை. எவருக்கும் நேரமிருக்கவுமில்லை. புதைக்க இடம் இருக்கவுமில்லை. சிலர் மட்டும் உறவுகள் இறந்துவிட்டால் தமது பதுங்குகுழிகளிலேயே போட்டு மூடிவிட்டு இடம் மாறினார்கள். புதைக்கத்தான் வேண்டும் என்ற அவசியமும் இருக்கவில்லை. அதுதான் பிணம் நாற்றமெடுக்கமுன் அவ்விடத்தைவிட்டே விரட்டியடிக்கப்பட்டு விடுவார்களே. வலிமிகுந்த உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவளாய் சென்றுகொண்டிருந்தேன் நானும்.
‘தங்கச்சி தங்கச்சி’ என்ற குரல் என்னைத்தான் அழைக்கிறது என்று உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். நொந்து நூலாகிவிட்ட ராசகிளி அண்ணன் ஓட்டமும் நடையுமாக வந்தார். பாலும் தேனும் பணமும் வயலும் விளைந்துகிடந்த பரம்பரை பணக்காரர் அவர்.
‘சொல்லுங்கண்ணா. எவடத்தில இருக்கிறிங்க?’ என்றேன் பொதுவாக. ‘அந்தா வயலுக்க தெரியிது. அந்த தறப்பால்தான்.’ எனக்கொரு உதவி செய்வியாம்மா?’ என்றார்.
என்னால் உதவமுடியும் என்று அவர் நம்புகிறார். ‘ஏலுமென்டால் செய்யிறன் அண்ணா. சொல்லுங்க’ என்றேன். உள்ளே இதயம் படபடத்தது. எதை அவர் என்னிடம் கேட்டுவிடக்கூடாது என்று நினைத்தேனோ அதையே அவர் கேட்டார்.
‘எப்பிடியாவது எனக்கொரு ரெண்டு கிலோ அரிசி வாங்கித்தாம்மா. எவ்வளவு காசு வேணுமெண்டாலும் தாறன்’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரே சொன்னார்,
‘என்னட்ட காசு இருக்கம்மா. நிறைய இருக்கு. ஆனா காசை தின்ன ஏலாதே.’ அவர் அதை சொல்லி முடிக்கமுன் அவரது குரல் உடைந்தது.
‘வாங்கண்ணா. எல்லாரையும் பாத்திட்டு போறன். அதுசரி உங்கடையாக்கள் யாருக்கும் காயமா? அண்டைக்கு ஆஸ்பத்திரில நிண்டிங்களே.’ என்றேன்.
‘ஓமம்மா எங்கட குடும்பத்தில காவாசிப்பேர் சரி. அப்ப நீ வீட்ட வாறியாம்மா? வா வா வந்து எங்கட கோலத்தை பார்’. என்றபடி நடந்தார். குடும்பத்தின் கால்வாசிப்பேர் செத்துவிட்டதைகூட சாதாரண சம்பவம்போல சொல்வதற்கு அவராலும் முடிகிறதுதான் என்று நினைத்துக்கொண்டு நானும் அவர்பின்னால் நடந்தேன்.
சேறும் சகதியுமாய் கிடந்த சிறிய வாய்க்காலொன்றை தாண்டினார். பள்ளமும் திட்டியுமான ஈரலிப்பான தரையில், கிழிந்த தறப்பாள் கொட்டில். அதன் உஷ்ணமான நிழலின்கீழ் சகதித்தரையில் துணியை விரித்துவிட்டு ஆளையாள் ஒட்டிக்கொண்டு பலர் நெருக்கமாக கிடந்தார்கள்.
பசி மயக்கமும் இயலாமையும் அவர்களை தள்ளிவிழுத்தி விட்டிருந்தன. அரைத்தூக்கத்தில் கிடந்த அவர்கள், ‘யாரு?’ என்று தலைகளை தூக்கிப்பார்த்தார்கள். என்னை கண்டதும் மீண்டும் தலையை தரையில் போட்டுக்கொண்டார்கள். அவர்கள் இருக்கும் மன நிலையை ராசகிளி அண்ணன் அறிவார். ஆத்திரப்பட்டு எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற அவசரத்தில் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
‘அது நம்மட வேலய்யாட மகள்தான்.’ என்று அவர் சொல்லி முடிக்கமுன் ஆளுக்காள் வாய் திறந்தார்கள்.
‘காசும் பணமுமிருந்தும் பட்டினியாய் கிடந்து சாகிறம் நாங்கள்.’
‘உங்கட்டத்தான் கனக்க ஆயுதங்கள் இருக்கே. எங்கள சுட்டு சாக்கொல்லுங்க. நாங்க ஒரேயடியா செத்துப்போறம்.’
‘எல்லாரும் கொஞ்ச இடத்துக்கதானே இருக்கிறம். பெரிய குண்டொண்டை போடுங்க. எல்லாரும் நிம்மதியா செத்துப்போறம்.’ என்று மாறி மாறி பொரிந்து தள்ளினார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வசனத்தை சொல்லிவிட்டு நிலத்தில் சரிந்தார்கள். அவர்களால் நிதானமாக எழுந்திருக்கக்கூட முடியவில்லை.
அவர்களின் ஆற்றாமையின் தவிப்பு அது.
தொடரும்…………..
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 1
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 2
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 3
Comments