மேனனிடம் நிலைகுலைந்த ராஜபக்ச

-

தந்திரிகளின் மறுமுகம் - 4

ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவரையும், ஏனைய மூத்த போராளிகளையும் சிக்கவைப்பதற்கு 2008ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியா வகுத்த பின்கதவுப் பொறி தொடர்பாக எமது கடந்த பத்தியில் நோக்கியிருந்தோம்.

இதற்கான தமது அதிகாரபூர்வ பதிலை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை ஊடாகவும், இந்தியாவின் பின்கதவுத் தொடர்புகள் வாயிலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கியிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை மையப்படுத்திய தனது அடுத்த கட்ட காய்நகர்த்தல்களை 2008 டிசம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியா தொடங்கியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்திய இந்தியாவின் இக்காய்நகர்த்தல்களுக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் வாய்ப்பாக அமைந்திருந்தன. எவ்வாறு நியூயோர் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்ரகன் தலைமையகம் மீது அல்கைடா நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதல்கள் தனது எதிரிகள் என்று கருதப்பட்ட அனைவர் மீதும் போர்தொடுப்பதற்கு அமெரிக்காவிற்கு வாய்ப்பை அளித்ததோ, அவ்வாறே தனது நலன்களுக்கு விரோதமாக செயற்படுவோர் எனக் கருதப்பட்ட சகல தரப்பினருக்கு எதிராகவும் இந்தியா காய்நகர்த்துவதற்கான வாய்ப்பை மும்பை தாக்குதல்கள் வழங்கியிருந்தன.

மும்பை தாக்குதல்களை சாக்காக வைத்து பாகிஸ்தான் மீது இந்தியா போர்தொடுக்கக்கூடும் என்ற அச்சம் அக்காலப்பகுதியில் நிலவியிருந்தாலும்கூட, மும்பை தாக்குதல்களுக்குப் பின்னரான அனுதாபச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் தொடக்கம் தென்னாசிய பிராந்தியத்தில் தனது நலன்களுக்கு விரோதமாக செயற்படுவதாகக் கருதப்படும் அமைப்புக்களை இலக்கு வைத்து நிழல் யுத்தம் ஒன்றை தொடங்கியிருந்தது.

இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி நோக்கிய சிங்களப் படைகளின் படை நடவடிக்கைக்கு தேவையான படைக்கல உதவிகளையும், செய்கோள் தொழில்நுட்ப புலனாய்வுத் தகவல்களையும் இந்தியா அதிகரித்துக் கொண்டதோடு, ஆயுதக் களைவை நோக்கித் தமிழீழ விடுதலைப் புலிகளை இட்டுச்செல்வதற்கான அழுத்தங்களையும் தனது பின்கதவுத் தொடர்பாளர்கள் ஊடாக முடுக்கிவிட்டிருந்தது.

இந்தியப் படைகளால் மும்பை தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து வித்தியாதரனுடன் தொடர்பு கொண்ட இந்திய உயர் அதிகாரி ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்தில் கடும் போக்கை இந்தியா எடுப்பதற்கான சூழலையே மும்பை தாக்குதல்களும், ரஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க மறுப்பதும் தோற்றுவித்திருப்பதாகவும், இதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தார்.

இதே காலப்பகுதியில் உருத்திரகுமாரனுடன் தொடர்பு கொண்ட இந்திய ராஜதந்தியான சிங், இதே தகவலையே அவருக்கும் வழங்கியிருந்தார். இதனையடுத்து உருத்திரகுமாரனின் பணிப்புரைக்கு அமைய வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்ட உருத்திரகுமாரனின் உதவியாளரான வழுதி, இந்தியாவை திருப்திப்படுத்தும் வகையிலான அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கான மாதிரி அறிக்கை ஒன்றும், உருத்திரகுமாரனால் தயாரிக்கப்பட்டு வழுதி ஊடாக வன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தியா தொடர்பிலான தமது நிலைப்பாட்டை தனது மாவீரர் நாள் உரை ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்த நிலையில், அதில் காணப்பட்ட விடயங்கள் வழுதி ஊடாக உருத்திரகுமாரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவரால் விளக்கப்பட்டதோடு, உருத்திரகுமாரனின் மாதிரி அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் உருத்திரகுமாரனை இந்தியாவிற்கு வருமாறு டில்லியில் இருந்து இரகசிய அழைப்பு ஒன்றும் அனுப்பப்பட்டிருந்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளருக்கு உரிய அதிகாரங்கள் உருத்திரகுமாரனுக்கு உள்ளனவா? என்று உருத்திரகுமாரனிடம் நேரடியாகவே இந்திய ராஜதந்திரியான சிங் விளக்கம் கோரியிருந்தார். இவ்வாறான அதிகாரம் தனக்குக் கிடையாது என்பதோடு, தமிழீழ தேசியத் தலைவருடன் தனக்கு நேரடித் தொடர்புகள் எவையும் இல்லை என்று உருத்திரகுமாரன் பதிலளித்த பொழுது, அவ்வாறான அதிகாரங்களையும், தொடர்பையும் உருத்திரகுமாரன் ஏற்படுத்திக் கொள்வதை டில்லி மேலிடம் விரும்புவதாகவும் உருத்திரகுமாரனிடம் இந்திய ராஜதந்திரி சிங் தெரிவித்திருந்தார்.

இதனைவிட ‘பிரபாகரனுக்குப் பின்னரான’ காலப்பகுதியில் செயற்படக்கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவருக்குரிய தகுதியுடையவராக வெளிநாட்டில் வேறு எவராவது உள்ளார்களா? என்ற கேள்வியும் உருத்திரகுமாரனிடம் இந்திய ராஜதந்திரி சிங் அவர்களால் நேரடியாகவே எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு உருத்திரகுமாரன் அளித்த பதிலையும், இதன் பின்னர் வன்னிக்கு உருத்திரகுமாரன் எழுதிய கடிதங்கள் தொடர்பாக தகவல்களையும் எமது அடுத்த பத்தியில் நோக்குவோம்.

இவ்வாறாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது பின்கதவுக் காய்நகர்த்தல்களை முடுக்கிவிட்ட இந்தியா, மறுபுறம் கிளிநொச்சி நோக்கிய சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை வேகப்படுத்துவதற்கு தேவையான உதவிகளையும் அதிகரித்திருந்தது. 2008 ஒக்ரோபர் மாதம் டில்லியில் தன்னை சந்தித்த பசில் ராஜபக்சவிடம் கருத்துக்கூறிய அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ, எப்பாடுபட்டாவது 2009 ஜனவரி இறுதிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அல்லது காத்திரமான அளவுக்கு பலவீனப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு முற்பட வேண்டும் என்றும், இதற்குத் தேவையான சகல உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்தியாவின் திட்டத்தின்படியும், உதவியுடனும் 2009 ஜனவரி 2ஆம் நாளன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டன. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்களவை மையப்படுத்திய தனது இராஜதந்திர அழுத்தங்களை இந்தியா முடுக்கிவிட்டது. இதன் ஓர் அங்கமாகவே கே.பியும், உருத்திரகுமாரனும் இணைந்து 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க இராஜதந்திரி ஒருவரை சந்தித்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை மையப்படுத்தி உரையாடியிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை மையப்படுத்திய அழுத்தங்கள், ஜெகத் கஸ்பார், கனிமொழி-கருணாநிதி ஆகியோர் ஊடாக இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களால் பிரயோகிக்கப்பட்டது.

இதேபோன்ற அழுத்தம் வித்தியாதரன் ஊடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பிரயோகிக்கப்பட்டது. 2009 பெப்ரவரி மாதம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வித்தியாதரன், ஆயுதங்களை கீழே போடுவதற்கும், ரஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை ஒப்புக் கொள்வதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வந்தால் அவர்களை காப்பாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இதுபற்றி தமிழீழ தேசியத் தலைவரினதும், பொட்டம்மானினதும் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் இந்தியா ஆவலாக இருப்பதாகவும் தனது உரையாடல்களின் பொழுது வித்தியாதரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வன்னிக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வித்தியாதரன் உரையாடுவது தொடர்பான தகவல் உதயன்-சுடரொளி நிறுவனத்தில் பணியாற்றிய ஈ.பி.டி.பியின் உளவாளி ஒருவரால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலை கோத்தபாய ராஜபக்சவின் கவனத்திற்கு டக்ளஸ் தேவானந்தா கொண்டு சென்ற பொழுது உடனடியாகவே வித்தியாதரனை தீர்த்துக் கட்டுவதற்கான திட்டம் கோத்தபாயவால் வகுக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் அனுமதியுடன் வகுக்கப்பட்ட இத்திட்டத்தின் படி, கோத்தபாயவின் பாதுகாப்புப் பிரிவினரும், ஈ.பி.டி.பியின் கொலைக் குழுவினரும் இணைந்து வித்தியாதரனைக் கடத்திப் படுகொலை செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி 26.02.2009 அன்று கல்கிசையில் வைத்து வித்தியாதரன் கடத்தப்பட்டார்.

பொதுவாக வெள்ளை சிற்றூர்திக் குழுவினரால் கடத்தப்படுவோர் மறுநாள் சடலமாக மீட்கப்படுவது வழமையான நிகழ்வாக விளங்கிய நிலையில், இவ்வாறான கதியே வித்தியாதரனுக்கு நேரும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது என்னவோ நேர்மாறான பரிமாணங்களைக் கொண்ட நிகழ்வாகவே அமைந்தது.

வித்தியாதரன் கடத்தப்பட்ட மறுகணம் தமக்கு நெருக்கமான இந்திய ராஜதந்திரி ஒருவரைத் தொடர்புகொண்ட வித்தியாதரனின் மைத்துனரான சரவணபவன், தனது மைத்துனரை மீட்டுத் தருமாறு கோரினார். இதனையடுத்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து பசில் ராஜபக்சவிற்கு தொலைபேசி அழைப்புப் பறந்தது. வெள்ளை சிற்றூர்திக் குழுவினரால் வித்தியாதரன் கடத்தப்பட்டமை தமக்கு அதிருப்தியை அளிப்பதாகவும், வித்தியாதரனின் பாதுகாப்புக் குறித்து இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட இந்திய அதிகாரியால் பசில் ராஜபசவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை பசில் ராஜபக்ச சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது பற்றி உடனடியாக கோத்தபாயவிற்கும், மகிந்தவிற்கும் பசில் தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து ஏறத்தாள ஒருமணிநேரத்திற்கு நிகழ்ந்தேறிய திரைமறைவு நிகழ்வுகளை தொடர்ந்து, வித்தியாதரன் கைது செய்யப்பட்டார் என்ற அறிவித்தல் சிறீலங்கா காவல்துறையினரால் விடுக்கப்பட்டதோடு, வித்தியாதரன் தமது தடுப்புக் காவலில் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளார் என்ற தகவல் இந்திய தூதரக அதிகாரிக்கு பசில் ராஜபக்சவால் தெரிவிக்கப்பட்டது.

இதேநேரத்தில் கோத்தபாயவும், தானும் இணைந்து வித்தியாதரனை தீர்த்துக் கட்டுவதற்கு எடுத்த முயற்சி இந்தியாவால் தடுக்கப்பட்டமை டக்ளஸ் தேவானந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏஜன்ற் என்று தாம் கருதியிருந்த வித்தியாதரனைக் காப்பாற்றுவதில் இந்தியா முனைப்பாக இருந்தமை கோத்தபாயவிற்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வித்தியாதரனின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதன் பின்னணி பற்றி இந்திய தூதரக அதிகாரியிடம் பசில் ராஜபக்சவால் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, இது தொடர்பான விளக்கம் விரைவில் டில்லி மேலிடத்தில் இருந்து வழங்கப்படும் என்ற பதில் மட்டும் பசில் ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது விடுதலையை வேண்டி 25.03.2009 அன்று வித்தியாதரனால் சிறீலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எக்காரணம் கொண்டும் வித்தியாதரன் விடுதலை செய்யப்படக்கூடாது என்பதில் கோத்தபாயவும், டக்ளஸ் தேவானந்தாவும் உறுதியாக இருந்தனர். இதனால் வித்தியாதரன் விடுதலை செய்யப்படுவது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இவ்வாறான சூழலில் 24.04.2009 அன்று அப்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கொழும்புக்கு வருகை தர இருப்பதாக மகிந்த ராஜபக்சவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, தனது பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மகிந்தருடன் தொலைபேசியில் உரையாடிய சிவசங்கர் மேனன் வித்தியாதரனை விடுதலை செய்யுமாறு கோரியிருந்தார். அதிலும் ஏப்ரல் 24ஆம் நாளன்று தாம் கொழும்புக்கு வருகை தரும் பொழுது வித்தியாதரன் விடுதலை செய்யப்படுவதை இந்தியா விரும்புவதாகவும் மகிந்தரிடம் சிவசங்கர் மேனன் தெரிவித்திருந்தார்.

இந்திய பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த மறுகணமே தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான தாக்குதல்களை சிங்களப் படைகள் தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குவது குறித்து ஆராயும் நோக்கத்துடன் தமது கொழும்புப் பயணத்தை சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் ஆகியோர் வகுத்திருந்த பொழுதும்கூட, தமது நிகழ்ச்சித் திட்டத்தில் வித்தியாதரனின் விடுதலையை உள்ளடக்குவதற்கு அவர்கள் தவறவில்லை.

இந்நிலையில் வித்தியாதரனை விடுதலை செய்யுமாறு தன்னிடம் நேரடியாகவே சிவசங்கர் மேனன் கோருவார் என்று மகிந்தர் எதிர்பார்க்கவில்லை. இது பற்றி மகிந்தருக்கு விளக்கமளித்த சிவசங்கர் மேனன், வித்தியாதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆள் அல்ல என்றும், அவர் தங்களின் ஆள் என்றும் தெரிவித்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலில் இரா.சம்பந்தனைப் போன்று, வித்தியாதரனையும் முக்கியமான ஒருவராகவே இந்தியா பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி மகிந்த ராஜபக்சவிற்கும், சிவசங்கர் மேனனுக்கும் இடையில் தொலைபேசியில் எட்டப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில், 24.04.2009 அன்று அலரி மாளிகையில் சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் ஆகியோருடன் மகிந்தர் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஏககாலத்தில், வித்தியாதரன் மீதான குற்றச்சாட்டுக்கள் சிறீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீளப்பெறப்பட்டு, கொழும்பு நீதிமன்றத்தில் வித்தியாதரன் விடுதலை செய்யப்பட்டார்.

வித்தியாதரன் விடுதலை செய்யப்பட்டமை டக்ளஸ் தேவானந்தாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும்கூட, இந்தியாவைப் பகைத்துக் கொண்டு வித்தியாதரன் மீது கைவைப்பதற்கு டக்ளஸ் தேவானந்தா விரும்பவில்லை.

இது இவ்விதமிருக்க மே 18இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்களாக வித்தியாதரனும், சரவணபவனும் முளைத்தமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது. மறுபுறத்தில் மே 18வரை தன்னை ஓர் தமிழ்த் தேசிய ஊடகவியலாளராக அடையாளப்படுத்தி வந்த வித்தியாதரன், திடீரென தமிழீழ தேசியத் தலைவரைத் தூற்றியும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகப் பிரகடனம் செய்துகொண்ட கே.பியைப் போற்றியும் உதயன்-சுடெராளி நாளேடுகளில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்ட பொழுது, வித்தியாதரனின் சுயரூபத்தை தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். வித்தியாதரனின் அந்தர் பல்டி பற்றி 2009 யூலை மாத இறுதியில் வித்தியாதரனுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிய பத்தி எழுத்தாளர் ஒருவர், ‘புரூட்டஸ், நீயுமா?’ என்று தனக்கு துரோகமிழைத்த புரூட்டசிற்கு யூலியஸ் சீசர் கூறிய அதே வாசகத்தை வித்தியாதரனுக்கு சுட்டிக் காட்டியிருந்தார்.

வித்தியாதரன், சரவணபவன் போன்றோரின் தூண்டுதலால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ம.க.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் நீக்கப்பட்ட பொழுது, இரா.சம்பந்தர் மட்டுமன்றி, வித்தியாதரனும் இந்தியாவின் பின்னணியிலேயே இயங்குகின்றார் என்ற உண்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பலர் புரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். ஒருவகையில் இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தன் பின்னணியில் வித்தியாதரனும், சம்பந்தருமே இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக தகவல் ஒன்றும் உண்டு.

விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண வேட்பாளராக களமிறங்கவுள்ள வித்தியாதரன், கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த கருத்தை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்: ‘‘இந்தியாவை அரவணைத்து நடப்பதால் என்னை எவராலும் நெருங்க முடியவில்லை. என்னைப் போன்று பிரபாகரனும் நடந்து கொண்டிருந்தால் அவர் எப்பொழுதோ முதலமைச்சராகியிருப்பார்’’ என்பதே வித்தியாதரன் தெரிவித்த கருத்தாகும்.

இந்தியாவை அரவணைத்து நடப்பதால் வித்தியாதரன் முதலமைச்சர் ஆவாரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியா வழங்கவிருந்த பதவியையும், சலுகைகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்து தமிழீழ தேச விடுதலைக்காகக் களம்புகுந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இன்று உலகத் தமிழர்களின் இதயங்களில் வீற்றிருக்கும் இடத்தை எவராலும், எக்காலத்திலும் நெருங்க முடியாது என்பது மட்டும் உறுதி.

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு (29.04.2011)
சேரமான்

Comments