![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja_Qj_gpUcAQEiu7mlCPJHGdntYqqm8lJSZRVgp4TK5IHoF3FnbTPEhjnu7Oc4wS_T0FDwxUFJAJ9bwxNils3D7D5jfB8dsa6GmqadXeqfwfZuZM2PXQFe_C0W9WqtPvuheNFuZCYEYCjd/s400/land+of+terror.jpg)
![Capture-D.S.Senanayakka](http://www.mullai.org/images/stories/Capture-D.S.Senanayakka.png)
தமிழரின் பலம் அழிக்கும், நிலப் பறிப்பு!
நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர், விடுவிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது சுமார் 70,000 தமிழர்கள் வாழ்வதாகவும், அதே சமையம் அங்கு ‘பாது காப்புக் கருதி’(?!) நிலை கொண்டிருக்கும் ‘சிங்கள’ அரசபடையினரின் எண்ணிக்கையும் எழுபதாயிரத்தை எட்டும் எனவும் ,ஓர் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஒரு தமிழ்க் குடிமகனுக்கு ஓர் அரசுப் படையினரைப் பாதுகாவலாக அனுப்பி வைத்திருக்கும் இன்றைய இலங்கை அரசின் பெருந்தன்மையைப்(!) பாராட்டுவதா, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்னும் ‘போர்வை’யில்; முன்பு விடுதலைப் புலிகள் வசம் இருந்த தமிழர்களது பிரதேசங்களில் வலிந்து சிங்கள மொழிபேசும் அரசுப் படையினரைக் குடியமர்த்தும் சாணக்கியத்தைக் கண்டிப்பதா என்று புரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது ஈழத் தமிழினம்!
இதனை, வழக்கம் போல் ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம்!
ஆனால், ஈழத்தில் வாழும் தமிழர்களது வாழ்விடங்களில் அவர்களைப் படிப்படியாகச் சிறுபான்மை இனத்தினராக மாற்றுவதன் மூலமே, இலங்கையை ஓர் வலிமையான ‘ஒற்றை ஆட்சி’யின் கீழ் வைத்திருக்க முடியும் என்னும் எண்ணம்; அந் நாடு பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே; சிங்களத் தலைமைகளிடம் உருவாகி இருந்தது.
ஆனால், இது போன்ற எண்ணம் பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்கள் மத்தியில் உருவாவதற்கு, ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய நிர்வாக அமைப்பே காரணம் என்பதில் சந்தேகம் இல்லை!
அந்நிய தேசத்தவரான ஆங்கிலேயர்கள் தமது நிர்வாக வசதிக்கேற்ப இலங்கையைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவை ஒவ்வொன்றினுக்கும் அரச அதிபர்களை நியமித்திருந்தார்கள்.
கி.பி 1833 ஆம் ஆண்டு கோல்புறூக்-கெமரோன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப்பட்ட ஒற்றை ஆட்சி நிர்வாக அமைப்பின் கீழ், இலங்கை; ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
வடமாகாணம்,கிழக்கு மாகாணம், மேல் மாகாணம், தென்மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என்னும் பெயரில் அமைந்த இம் மாகாணப் பிரிவுகளில் வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயகப் பிரதேசத்தையும், ஏனைய மூன்றும் சிங்களர்களது பிரதேசத்தையும் குறிப்பதாக இருந்தது.
உண்மையில், ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இந் நிர்வாகப் பிரிவுகள் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையின் மொத்தப் பரப்பளவில் சுமார் 35 விழுக்காடு தமிழர்களது வழிவழித் தாயகமாக இருந்திருக்கிறது. 1833ல் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களது பிரதேசங்களாக இருந்தாலும், அதன் பரப்பளவு இலங்கையின் மொத்தப் பரப்பளவில் 29 விழுக்காடாகச் சுருங்கி விட்டிருந்தது!
தொடர்ந்து இலங்கையின் மக்கட் தொகையும், வர்த்தகப் பெருக்கமும் அதிகரிக்கவே, நிர்வாக வசதிகளுக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஐந்து மாகாணங்களது எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
கி.பி 1845 ல் வடமேல் மாகாணம் என்னும் பெயரில் ஆறாவதாக ஓர் பிரிவினை ஏற்படுத்திய போது, வட மாகாணத்தின் சில தமிழ்ப் பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டு இப்புதிய மாகாணத்தோடு இணைக்கப்பட்டது.
இதே போன்று, கி.பி 1873ல் வட மத்திய மாகாணம் உருவாக்கப் பட்டபோது; வட மாகாணத்தின் நுவர வாவியும்; கிழக்கு மாகாணத்தின் தம்பன் கடவையும் பிரித்தெடுக்கப்பட்டு புதிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
கி.பி 1886ல் ஊவா மாகாணம் உருவான சமையத்தில், கிழக்கு மாகாணத்தின் விந்தனைப் பிரதேசம் புதிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
கி.பி 1889ல் இலங்கையின் ஒன்பதாவது மாகாணமாக சப்பிரகமுவா உருவான போது ஆரம்பத்தில்-அதாவது- ஆங்கிலேய அரசு தனது நிர்வாக வசதி கருதி 1833ல் உருவாக்கிய மாகாணப் பிரிவுகளில் வடக்கு-கிழக்கு இவ்விரு மாகாணங்களும் பெற்றிருந்த 26,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவு 19,100 சதுர கி.மீ ஆகச் சுருங்கி விட்டிருந்தது!
அந்நியர்களான ஆங்கிலேயர்களுக்கு, இலங்கை அளித்த பொருளாதாரம் குறித்த அக்கறை இருந்த அளவுக்கு அந் நாட்டின் இரு பெரும் இனங்களது வரலாறு பற்றியும், அவர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு குறித்தும் எவ்வித கவலையும் இருக்கவில்லை என்பதை; அவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட அமைப்புகளே சான்றாகும்.
பூமிப் பந்தில் எங்கெங்கெல்லாம் வளம் நிறைந்த மண்ணும், அதனைத் தம் உழைப்பால் மேம்படுத்தும் மனிதரும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தமது ’வர்த்தகத் திறமை’யின் உதவியோடு கால் பதித்த ‘விதேசி’களுக்கு அவர்கள் செல்லும் நாடுகள் குறித்த பண்டைய வரலாற்றுப் பெருமைகளும், அவற்றின் மாந்தர்களுக்குரிய தன்மானமும் பற்றிய அக்கறை தேவையான ஒன்றல்ல.
ஆனால், இலங்கையின் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள இனமும், அந்நியர்கள் வகுத்துத் தந்த வழிமுறைகளையே கெட்டியாகப் பற்றிக் கொண்டது மட்டுமின்றி… அதிலும் சில படிகள் மேலே சென்று, அந் நாட்டில் காலங்காலமாகத் தங்களுக்கு என்றோர் அரசினையும், தாயகத்தையும்,கலாச்சாரத்தையும் கொண்டிருக்கும் தமிழர்களை; அவர்களது சொந்த மண்ணிலேயே அநாதைகளாகும் அரசியல் ‘வித்தையை’ அரங்கேற்ற முனைந்ததுதான் வேதனையானது!
ஆங்கிலேய அரசினால், இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது மந்திரி சபையில் (1931ல்) காணி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர் டி.எஸ்.சேனாநாயக்கா ஆவர்.இவரே பின்னர் சுதந்திர இலங்கையின் பிரதம மந்திரியாகும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார்.
இவர், காணி அமைச்சராக இருந்த காலப் பகுதியிலேயே; அபிவிருத்தித் திட்டங்கள் என்னும் பெயரில்; ஏற்கனவே தமிழர்களது பிரதேசங்களாக இனங்காட்டப்பட்டிருந்த பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைப்பதில் முனைப்புக் காட்டிவந்தார்.
1931 முதல் 1943 வரைக்குமான சுமார் 12 வருட காலப்பகுதியில், அன்றைய மதிப்புப்படி 33 இலட்ச ரூபாவைக் குடியேற்றத் திட்டத்திற்கும், 115 இலட்சம் ரூபாவினை விவசாய மேம்பாட்டுக்கும் என ஒதுக்கியதன் மூலம், கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்களில் சிங்களர்களைக் குடியமர்த்தும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்கள் உரிமைகோரும் பிரதேசங்களிலேயே அவர்களைக் ‘குரலற்ற’வர்களாக்கும் செயலில் முனைப்புக்காட்டியவர்கள் சிங்களத் தலைவர்களே!
1948ல் சுதந்திரம் அடைந்த இலங்கையில், சிங்களத்தலைமைகளின் திட்டமிட்ட தமிழின ஒடுக்கல்கள்….. சுதந்திரமாக மேற்கொள்ளப்படலாயிற்று…….
காலப்போக்கில், மாகாணங்கள்; மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்றிருந்த சில மாவட்டங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக முற்று முழுதாகச் சிங்களமயமாக்கப்பட்டது.
“சர்வசித்தன்”
(குமுறல்கள் தொடரும்……
(www.sarvachitthan.wordpress.com)
Comments