சர்வதேசத்தின் நிஜமுகமும் இந்தியாவின் மறைமுகமும்

ஐந்து வருடங்களாக சமாதான அனுசரணை வேடமிட்டு ஸ்ரீலங்காவில் வலம் வந்த இணைத்தலைமைக் கூட்டம், தமது சுயரூபத்தைக் காட்டுகிறது.

நோர்வே ஊடாக மேற்குலகம் விரித்தபொறிக்குள் விடுதலைப் புலிகள் அகப்படமாட்டார்களென்று முன்பு எழுதியதை கிண்டல் செய்த பரபரப்புச் செய்தி வெளியிடுவோர், தற்போது அக் கூற்றின் தாற்பரியத்தை புரிந்து கொள்வார்கள்.

பிரபாகரனின் படத்தைப் போட்டு என்னைப் பிடித்துப் பாரென குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் பாணியில் வெளியிடும் தலைப்புச் செய்திகள், மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாது.

தற்போது சிங்கள தேசத்தின் குரலை, இணைத்தலைமை நாடுகள் எதிரொலிக்கின்றன.

ஆனாலும் அவர்களுக்கென்று ஆசியா குறித்த தனியான வேலைத் திட்டம் இல்லையாவென்றும் கேள்வி எழுப்பலாம்.அவ்வாறு இருந்த பிராந்திய நலன் பேணும் மூலோபாய நகர்வுகளை இலங்கை அரசு முறியடித்ததால் வந்த தப்பிக்கும் தந்திரோபாய நகர்வு இது.

அதாவது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் இந்த வாரம்
வெளியிட்ட பரிந்துரைப்பான அறிக்கை பல அதிர்வுகளை உலகெங்கும் ஏற்படுத்தியது.

பல பிரதேசங்களை இழந்து வரும் விடுதலைப் புலிகள், அரசுடன் கலந்துரையாடி,ஆயுதங்களைக் கையளித்து பொது மன்னிப்பை ஏற்று சமாதான அரசியல் வாழ்வில் கலக்க வேண்டுமென இணைத்தலைமை கூட்டணியினர் கூறிய அறிவுரையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் இணைத்தலைமைக்கு பதில் கூறவில்லை. அதற்கும் ஒரு பலமான காரணமுண்டு. அதாவது இந்த இணைத் தலைமை காட்டிய சமாதான முகமான நோர்வே வரைந்த ஒப்பந்தத்தை அரசு கிழித்து பிடரியைப் பிடித்து வெளியேற்றியபோது சொல்லாமல் விடை பெற்றுச் சென்றவர்கள் இன்று எந்த முகத்துடன் ஆயுதங்களைக் கீழே போடும்படி புலிகளைக் கோருகிறார்களென்பது தான் ஆச்சரியம் கலந்த உண்மை.

நோர்வே கொடி எரிக்கப்பட்டு வெள்ளைப் புலியென பச்சை குத்தப்பட்டு அசிங்கப்பட்ட முன்னாள் அனுசரணைக் கோமான்களும் இணைத்தலைமை கூட்ட அறிக்கையில் கையொப்பமிட்டதையிட்டு அதிர்ச்சி அடையத் தேவையில்லை.

ஈழத் தமிழினத்தின் இருப்போடு விளையாடும் இந்த ஜனநாயக முகமூடியணிந்த ஏகாதிபத்திய வல்லரசுகள், தமது நலன் பேண உத்திகளை மாற்றும் வல்லமை கொண்டவர்கள். ஆகவே தமிழினத்தின் தலைவிதியை அம்மக்களிடமே மறுபடியும் ஒப்படைத்துள்ளது. இந்த இணைத்தலைமை என்கிற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சினைக்கு முகங் கொடுக்காமல் இலகுவாகத் தப்பிச் செல்லும் வழி ஒன்றினைத் தேடியலைந்து ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென்கிற அற்புதமான பரிந்துரையினைக் கண்டு பிடித்த மேற்குலகம், ஆக்கிரமிப்பாளன் நோகடிக்கப்படக் கூடாதென்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளதென்று கணிக்கலாம்.

ஐரோப்பிய தெருக்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இறங்கியவுடன் தொலைக்காட்சிகளும் நாடாளுமன்றங்களும் வன்னி அவலங்களைப் பற்றி பேசத் தொடங்குகின்றன.

ஓட்டுப் பொறுக்கி அரசியல் ஒரு பக்கமாகவும், உண்மையான உணர்வு பூர்வமான
போராட்ட அரசியல் இன்னொரு புறமாகவும் தமிழகத்தில் ஈழப் பிரச்சினை குறித்த தளங்கள் விரிகின்றன.

நெடுமாறன் தலைமையில் "இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை' என்றொரு இறுக்கமான ஈழ ஆதரவு இயக்கமொன்று ஆரம்பித்தவுடன்

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று கலைஞர் கருணாநிதி புதிய இயக்கமொன்றை தோற்றுவித்துள்ளார்.

கருணாநிதி அறிக்கையும் காதில பூவும்

கடந்த 4 ஆம் திகதி தமிழகம் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்த அதிர்ச்சியால் தமது அதிகாரக் காவலாளிகளை, போராடிய மக்கள் மீது ஏவிவிட்டுள்ளார் தமிழினத் தலைவர் மு. கருணாநிதி திராவிடத் தலை கி. வீரமணியைத் தலைவராகவும் அன்பு மகள் கனிமொழியை செயலாளர் ஆகவும் கொண்ட இப் பேரவை, ஈழத் தமிழருக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப் போகிறதாம்.

இந்திய மத்திய அரசுக் கூட்டாளிகளையே மனமாற்றம் செய்ய இயலõத உலகத் தமிழ்த் தலைவர்,

வெளிநாடு சென்று எதை சாதிக்கப் போகிறாரென தமிழக உறவுகள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது.

1965 இந்திய எதிர்ப்பு போராட்ட கால அடித்தட்டு வர்க்க நிலை, இன்றைய தி.மு.க. தலைமையிடம் இல்லை. ஆசியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய பெரும் பணக்காரர்களில் சிலர் கலைஞரின் கூட்டுக் குடும்பத்தில் உள்ளார்களென்று டில்லி சஞ்சிகைகள் வெளியிடும் பட்டியல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்தட்டு வர்க்க இலட்சணத்தில் மடியில் இருக்கும் கனத்தை இழந்து, ஆட்சியதிகாரத்தை துறக்க, இவர்கள் முன் வருவார்களென்று கற்பிதம் கொள்வது, தமிழ் விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அசிங்கப்படுத்துவது போலாகி விடும்.

தமிழுக்காக உயிர் கொடுப்பேனென காதில் பூச்சுற்றும் இந்த சந்தர்ப்பவாதிகளோ அல்லது சில சர்வதேச நாடுகளோ, அவலப்படும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்து கவனத்தில் கொள்வதில்லை.

கள நிலைமை என்பது நிலம் கைப்பற்றலின் நீள அகல விரிதலைக் கொண்டு அளக்கப்படுவதல்ல. மாறாக அங்கு வாழும் மக்களின் உணர்வு வெளிப்படுதலின் அடிப்படையிலேயே கணிக்கப்படும். நாட்டுத் தேசியத்திற்கும் இனத்துவ தேசியத்திற்குமிடையேயுள்ள வேறுபாடுகளை தற்கால மேற்குலக தலைமுறைகள் புரிய முடியாத துர்ப்பாக்கிய நிலையே அந்நாட்டு ஏகாதிபத்திய அரசுகளின் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த மோசமான அணுகு முறைக்கு வலுச் சேர்க்கிறது.

வலிந்து திணித்து கட்டி இணைக்கப்பட்ட இந்திய நாட்டு தேசியத்திற்கும் இது புரியாது.

அதேபோன்று மகாவம்ச மனோ நிலையில் ஊறித் திணைத்துள்ள சிங்களத் தேசத்திற்கு நவீன உலகின் யதார்த்தம் புரிவதில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் தற்போது உள்ளவாறே இறுக்கமாகப் பேணப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இல்லாமல் ஒற்றை ஆட்சி முறைமையினை இறுகப் பற்றி பிடிக்க விரும்புகிறது சிங்கள அரசியல்.

தமிழ் மக்களின் வாழ்நிலை இருப்பும், பாதுகாப்பும், தனித்துவமும் தமிழர்களால் உத்தரவாதப்படுத்தப்பட்டு இறையாண்மையாக நிர்ணயிக்கப்படுவதே சரியான யதார்த்த பூர்வமான நிலையாகும். அதுவரை "அஹிம்சை மிதிக்கப்படும்போது ஆயுதம் எடுப்பதில் தப்பில்லை' என்கிற தியாகி முத்துக்குமரனின் பட்டறிவுக் கருத்துக்கள், சாகாவரம் பெற்ற வார்த்தைக் கோடுகளாகி விடும் அது நீண்டு செல்லும்.

- சி.இதயச்சந்திரன்-

யாருக்காக மாய்கிறார்கள் இந்த இணைத் தலைமை நாடுகள் -...

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இணைத்தலைமைகளின் அறிக்கை
பதவி சுகமா? அல்லது இனமானமா?

பச்சைப்புலியின் உண்மை சுயரூபம்

ஆடு நனைகின்றது என்று ஒநாயகளின் ஓலம் சர்வதேச நாய்களின் குட்டு வெளிப்பட்டது

வரலாற்றுப் பழிக்கு துணைபோகுமா சர்வதேசம்?

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

Comments