கொழும்பு விழா: நடிகர்-நடிகைகளை புறக்கணிப்போம்!; பிலிம்சேம்பர் மீண்டும் எச்சரிக்கை!

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கும் இந்தி நடிகர், நடிகைகளை புறக்கணிப்போம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மீண்டும் எச்சரித்து உள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது ராஜபக்சே அரசு.

இப்போது அந்தப் படுகொலைகளை மறைத்து, அங்கு அமைதி திரும்பி விட்டது போல காட்டுவதற்காக கொழும்புவில் 11வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த இருக்கிறது. இன்று தொடங்கி நாளை மறுதினம் (5ம் தேதி) வரை இந்த விழா நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த விழாவுக்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, மம்முட்டி உள்பட தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர். இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வடஇந்தியாவை சேர்ந்த திரைப்பட கலைஞர்களும் கொழும்பு திரைப்பட விழாவில் பங்கேற்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஐஃபா நிர்வாகிகளுடன் சந்திப்பு:

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் எல்.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் நேற்று மும்பையில் திரைப்பட மற்றும் டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மன்மோகன் ஷெட்டி, யாஷ் சோப்ரா, ரமேஷ் சிப்பி, கொழும்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கும் விஸ்கிராப்ட் நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து, கொழும்பு பட விழாவை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

பின்னர் எல்.சுரேஷ் கூறுகையில், “கொழும்பு விருது விழாவில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர், நடிகைகளின் படங்களை தென்னிந்தியாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். இந்தி டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

பாலிவுட் படவுலகை பொறுத்தவரை அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் போன்றோர் கொழும்பு செல்லவில்லை.

ஆனால் கரீனா கபூர், சயீப் அலிகான், பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி, ரன்பீர் கபூர், சுனில் ஷெட்டி, சல்மான் கான், அமீர்கான் போன்றோர் கொழும்பு செல்வார்கள் என தெரிகிறது.

விவேக் ஒபராய், பிபாஷாபாசு, ஜெனிலியா ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் ஏற்கனவே கொழும்பு சென்று விட்டனர்.

சல்மான்கானை இயக்குவார்களா சரணும் பிரபு தேவாவும்?

தமிழ் உணர்வாளர்களும், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பும் அவ்வளவு தூரம் போராட்டம் நடத்தியும் எச்சரிக்கை விடுத்தும் கூட, கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளார் நடிகர் சல்மான்கான்.

இவரது படங்களுக்கு சென்னையிலும் ஓரளவு வரவேற்புள்ளது. சொல்லப்போனால் இவரது முதல்படமான மைனே பியார் கியாவின் தமிழ் டப்பிங் சென்னையில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் “அசல்” படத்துக்குப் பின் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சரண். இதற்காக சல்மானிடம் கதை

தொடர் தோல்விகளால் நொந்துபோயிருந்த சல்மான்கானுக்கு பெரிய பிரேக் கொடுத்ததே, தென்னிந்திய இயக்குநரான பிரபுதேவாதான்.

அவரது அடுத்தடுத்த படங்களை இயக்கவிருப்பவர்களும் பிரபு தேவா மற்றும் சரண் ஆகியோர்தான்.

இருவருமே சல்மான் கானிடம் கதை சொல்லிவிட்டு, படத்துவக்க விழா தேதி அறிவிக்கக் காத்திருக்கிறார்கள். விவேக் ஓபராயின் படத்தை செல்வராகவன் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

இப்போது, தென்னிந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, பிலிம் சேம்பர் ஆகியவற்றின் புறக்கணிப்பு, எச்சரிக்கையையும் மீறி சல்மான்கான், விவேக் ஓபராய் போன்றவர்கள் ஐஃபா விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களின் படங்கள் அனைத்துக்கும் இனி தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்படும் நிலை உள்ளது.

பிரபு தேவாவும் சரணும் சல்மான்கானை வைத்து படம் இயக்குவார்களா… விவேக் ஓபராயை வைத்து செல்வராகவன் படம் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments