மீனகத்தின் சிங்களச் சிந்தனையும், தேசிய விடுதலைப் போர்க் களமும்!


ஒரு தேசிய ஆனாமாவைச் சிதைக்க வேண்டுமானால், அதற்கான தளத்தை உருக்குலைக்க வேண்டும். அந்தத் துரோகங்களைச் செய்வதற்கான அடியாட்களாக இப்போது புலம்பெயர் இணைய ஊடகங்கள் சில தம்மை அடையாளப்படுத்தி வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பேரவத்தின் பின்னர் புலம்பெயர் தமிழர்களைப் பல்வேறு அணிகளாக உருவாக்க முயன்று தோல்வியைத் தழுவிய இத்தகைய ஊடகங்கள், தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள்மீது போர் தொடுக்கும் அணிகளாகத் திரண்டு வருகின்றன. இத்தகைய ஊடக இணையங்களை அடையாளம் காணவேண்டிய அவசியம் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு, தேசியத் தலைவரால் நெறிமுறைப்படுத்தப்பட்டு, பல பத்து வருடங்களுக்கும் மேலாக, தமிழ்த் தேசிய விடுதலைத் தளங்களாக இயங்கிவரும் புலம்பெயர் தமிழ்த் தேசிய விடுதலைக் கட்டமைப்புக்கள் தற்போது இந்த ஊடகங்களின் விமர்சனத்திற்குரிய இலக்காக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்த வெற்றிக்கான காலப் பகுதியில் சிங்கள அரசின் இலக்காக விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களே உள்ளன. அதனைச் சீர்குலைத்து நிர்மூலமாக்குவதன் மூலம் தமிழினத்தின்மீதான தனது வெற்றியை நீடிக்க முடியும் என்று நம்புகின்றது. அதை நோக்கியே சிங்கள அரசு தனது புலனாய்வு அமைப்புக்களை புலம்பெயர் நாடுகளில் பலப்படுத்தி வருகின்றது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில், அதன் முக்கிய தளபதியாக இருந்த கருணாவையே விலைக்கு வாங்க முடிந்த சிங்களப் புலனாய்வு அமைப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதன் நீட்சியாகவே, கே.பி. அவர்களது கொழும்பு அழைப்பும், கே.பி. மூலமான அவரது சீடர்களது கொழும்பு விஜயமும் அமைந்தது.

தற்போது, சிங்கள அரசின் புலனாய்வு நகர்வின் உச்சக் கட்டமாக, சில தமிழ் இணைய ஊடகங்கள் விலைக்கு வாங்கப்பட்டோ, வழைத்துப் பிடிக்கப்பட்டோ உள்ளது வெளிப்படையான உண்மை. அத்துடன், விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களுடன் போர் தொடுத்து, செயலிழக்க வைப்பதற்காக, அதற்கு எதிரான போட்டிக் குழுக்களும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அரசும், அதன் புலனாய்வுப் பிரிவும், ஒட்டுக் குழுக்களும் நேரடியாகச் செய்ய முடியாத இந்த புலம்பெயர் தமிழ்க் களச் சிதைவு முயற்சி புதிய குழுக்களின் உருவாக்கத்துடன் முன் நகர்த்தப்பட்டாலும், அவர்களது பிடிகளில் என்றும் சிக்காத சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் விழிப்புடனேயே உள்ளார்கள்.

பிரான்சில், தமிழீழ விடுதலைக் கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதும், அவர்கள் மீதான நீதி விசாரணைகள் தொடர்கின்றன. இவர்கள் அனைவரும் தேசியத் தலைவர் அவர்களது கட்டளைகளை ஏற்றுச் செயற்பட்டவர்கள். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துத் தடைகள் விதித்த போதும், சட்டத்தின பிடியில் சிக்க நேரும் என்ற நிலையிலும், தங்களது தேசியக் கடமையினை நிறைவேற்றியதன் காரணத்தால் சிறை பிடிக்கப்பட்ட அந்தத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களது நீதி விசாரணைக்காக நிதி திரட்டும் விடுதலைகான இசை நிகழ்ச்சி ஒன்று சில மாதங்களுக்கு முன்னரே பாரிஸ் நகரில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

இதற்கான ஆயத்தங்கள் முடிவடைந்த காலப் பகுதியில் எங்கள் தேசியத் தலைவர் அவர்களின் தாயாரது மரணமும் நிகழ்ந்துவிட்டது. அந்தத் தேசிய விடுதலை சார்ந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு முன்னர், அதே மண்டபத்தில் தேசத்தின் அன்னைக்கு அஞ்சலி நிகழ்த்தும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களது முடிவை மீனகம் இணையத்தளம் கருணாவின் கண்கொண்டு பார்க்க முற்படுகின்றது.

மீனகம் இணைத்தளத்திற்கு விடுதலைப் பாடல்கள் எப்போது மீனகத்துக்கு கேளிக்கை நிகழ்ச்சி ஆனது? தேசியத் தலைவரையும், மாவீhர் ஆன்மாக்களையும் போற்றிப் பாடும் பாடல்கள் மீனகத்துக்கு எப்போது துரோக நிகழ்ச்சியாக மாறியது?


விடுதலையின் பெயரால் சிறைப்பட்ட தேசிய செயற்பாட்டாளர்களை விமர்சிக்கும் அதிகாரம் யாரால் வழங்கப்பட்டது? தேசியத் தலைவர் கிழித்த கோட்டைத் தாண்டாத தேசியப் புதல்வர்கள் குறித்து எழுதுவதற்கும், பரிகாசிப்பதற்கும் யார், எதை வழங்கினார்கள்? நீங்கள் இப்போது செய்தவற்றைத்தான் அப்போது, டக்ளஸ் செய்தார், வரதராஜப்பெருமாள் செய்தார், சித்தார்த்தன் செய்தார், சிறீதரன் செய்தார்... அவர்கள் எல்லோரையும் தமிழ் மக்களான எங்களுக்கு ஒட்டுக் குழுக்கள் என்றுதானே சொல்லிக் கொடுத்தீர்கள்? அப்படியானால், இப்போது நீங்கள் யார்? எங்களுக்கு வெளிப்படையாகவே சொல்லுங்கள் நீங்கள் யார்? என்று.

எதற்காக எங்கள் தேசிய விடுதலைத் தளங்களை சிதைக்க முற்படுகின்றீர்கள்? எந்த முட்டையைப் போட்டுவிட்டு, இப்படிக் கொக்கரிக்கிறீர்கள்? எங்கள் சூரியத் தேவனின் கோட்டை சரிந்துவிடும், அதில் வெளவால்களாகக் குடியேறலாம் என்று தலைகீழாகத் தொங்கிப் படம் போடாதீர்கள். தமிழீழ மக்களாகிய நாங்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கின்றோம். உங்களது சிங்களத்துச் சிந்தனைகளால் எங்களைத் திசைமாற வைக்க முடியாது.

- தமிழ்ச்செல்வன்
சங்கதி

Comments