ஆட்சிக்கு வந்தால் தனித் தமிழீழம் அமைய நான் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் - ஜெயலலிதா

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் இன்று ஈரோட்டில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தனித் தமிழீழம் அமைய நான் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தனித் தமிழீழம் அமைவதற்கு உதவுவேன் என்று முதற் தடவையாக ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பேச்சில் ஜெயலலிதா தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கின்றோம். இது மட்டும் போதாது. இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழவேண்டும்.

சிங்கள மக்களுக்குரிய அனைத்து விசயங்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். இதற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நான் அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண தனி ஈழம்தான் ஒரேவழி. அதைநான் நிச்சயம் செய்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் மக்களவை தேர்தல் வேட்பாளர் செம்மலையை ஆதரித்து பேசினார். அப்போது, ‘'இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டுவந்திருக்கிறார் 'வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.

அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது. தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.

அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்றூ சொல்லிவந்தேன். ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு'' என்று ஆவேசமாக பேசினார்.


Comments