தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்

தமிழர் தேசம் சிங்கள தேசத்தால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. சிங்களதேசம் வெற்றிவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. படையதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் பதவியுயர்வும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன. வன்னிப்பகுதியின் ஒவ்வொரு பிரதேசமும் கைப்பற்றப்படும் போது சிங்கக்கொடிகளைப் பறக்கவிட்டு தமிழர் பிரதேசங்களை கைப்பற்றுவதாக கூறியது. எனவே சிங்கள தேசம் வெளிப்படையாக தமிழர்களை வென்றதாக கூறி நடத்தும் வெற்றிவிழாக்களும் நிகழ்வுகளும்,சிங்களம் கூறியது
போல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வெற்றி என்பதற்கு மாறாக தமிழீழம் என்ற ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றிநிகழ்த்தப்பட்டவெற்றிக்கூத்தாட்டங்களகவே கருதவேண்டியுள்ளது. இலங்கைத்தீவில் தமிழீழ தனியரசு இருந்ததை மீண்டுமெருமுறை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கைத்தீவில், தமிழ்மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைகளிற்குள்ளும் வன்னியிலிருந்த மக்கள் சிறையகதிமுகாம்களுக்குள்ளும் அடைக்கப்பட்டுள்ளார்கள். மிகமோசமாக, கிட்லரின் முறையில் அம்மக்கள் நடத்தப்படுகின்றார்கள். இலங்கை தீபகற்பத்தில், தமிழனுக்கு எந்தவிடத்திலும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத அச்சமான சூழ்நலையிலேயே வாழ்கின்றனர். அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நிற்கின்ற தமிழ் அரசியல்வாதிகளால் கூட அகதிமுகாமில் வாழும் மக்களின் துயரத்தை நீக்கமுடியாதநிலை அவர்களின் கையாலாகத்தனத்தை காட்டுகின்றது.

இவ்வாறு பல இன்னல்களுக்குள் தமிழ்மக்கள் சிக்கத்தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல ஊடகங்கள் தமிழ்மக்களின் இன்னல்களை வெளியுலகிற்கு முனைப்பாக கொண்டு சென்றுகொண்டிருந்தாலும் சில ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளின் பின்னடைவை விமர்சிப்பது தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை.

அது மட்டுமில்லாது 30 வருடங்களிற்கு மேலாக மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் போராடி 25000 க்கும் மேற்பட்ட போராளிகளை அர்ப்பணித்து தமிழர்களுக்கான அடையாளத்தை, பாதுகாப்பை, போரிடும் ஆற்றலை, நம்பிக்கையை, சுதந்திர போராட்ட தந்திரோபாயங்களை மக்களின் மனங்களில் விதைத்து, தமிழ்மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும்

தேசத்தலைவனையும் அவன் சார்ந்து வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளையும் பொறுப்பாளர்களையும் விமர்சிக்கும் சிலரின் சுடலை நியாயம் போன்ற கருத்துவாதங்கள் வேதனையையும் எரிச்சலையும் தருகின்றன.

சிங்களப்படையின் போர் வெற்றியென்பது தனியே சிங்களப்படைகளின் வெற்றியல்ல 20 மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆலோசனை, ஆயுத உதவி, போர் வீரர்கள் உதவி, தொழில்நுட்ப உதவி, செய்மதித் தகவல்கள் போன்று பல்வேறு வகையான உதவிகளையும் பெற்றே சிங்களப்படை போரிட்டது

மாறாக தலைவர் தனியொருவராக தமிழ்மக்களின் உதவியுடன் போராளிப்படையை வழிநடத்தி போரிட்டார்,

எனவே இப்பிரதேச இழப்பு என்பது தமிழர் படை சிங்களப்படையிடம் தோற்றதாக கருதமுடியாது மாறாக பலநாடுகளால் வலுவூட்டப்பட்ட, குறிப்பாக படைவீரர்களின் உதவியைப் பெற்றே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை கைப்பற்ற முடிந்ததே தவிர விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கவுமில்லை அழிக்கவும் முடியாது.

இது உலகறிந்ததே. தற்போது புலிகள் ஆயுதங்களை மௌனித்திருக்கின்றார்களே தவிர ஆயுதப்போராட்டத்தை கைவிடவில்லை.

14 வயதில் தனது போராட்டத்தை தொடங்கி பல இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் போராட்டத்தை கொண்டு நடத்திய தலைவன், 3 தசாப்தகால போராட்டத்தில், உலக அரசியல், அதன் போக்கு அதாவது உலக அரசியல் என்பது உலகநாடுகளின் நலன் சார்ந்த அரசியலா?

அல்லது நடுநிலையான அரசியலா?

தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தில் இந்த சர்வதேசம் எவ்வளவு தூரம் இதயசுத்தியோடு செயற்படும்?

என்பதை புரியாமலா, உலகம் வியந்த பாரிய விடுதலைப்போராட்டத்தை நடத்தியிருப்பார் என்ற கருத்துவாதத்தை எவ்வாறு வைக்கமுடியும்?

இந்த சர்வதேச அரசியல் எப்போதாவது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது, அவர்கள் அரச பயங்கரவாதத்ததால் துன்புறுத்தப்படும்போது, தமிழ்மக்கள் தீர்வு தொடர்பான கரிசனையுடன் செயற்பட்டதா?

2000ம் ஆண்டு யாழ்குடாநாட்டை கைப்பற்றிக் கொண்டு விடுதலைப்புலிகள் இராணுவ நகர்வை செய்தபோது இந்தியா தலையிட்டு போரை நிறுத்தி சிங்கள இராணுவத்தை காப்பாற்றியது.

பின்னர் 2002 வரை புலிகளின் கடுமையான போரை எதிர்கொள்ளமுடியாமல் சிங்களம் சிக்கித்தவித்த போது சர்வதேசம் தலையிட்டு விடுதலைப்புலிகளின் இராணுவச்சமநிலை எற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை கொண்டு வந்து சிங்களத்தை காப்பாற்றியது.

எனவே சர்வதேச சமூகம் என்பது உரிமைக்காக போராடும் இனங்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அதை நம்பி செயற்பட்டு ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைக்கலாம் என்று யாராவது தலைவருக்கு ஆலோசனை சொல்லியிருக்கலாமா?

அப்படியாயின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினடிப்படையிலான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை சர்வதேச சமூகம் சரியாக வழிநடத்தியதா?

எந்த அரசியல் தீர்வுகளிலும் தொடர்புபடாத சுனாமி பொதுக்கட்டமைப்பு செயலிழக்கம் செய்யப்பட்டபோது, அதை தடுத்து நிறுத்தி ஒரு அனர்த்த நிவாரண உடன்படிக்கையை கூட செயற்படுத்தமுடியாத சர்வதேச வல்லரசுச் சக்திகளின், கேந்திர நலன்களை சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மாற்றங்களை செய்யவேண்டும் என்பது எந்த வகையில் பொருந்தும்?

நடுநிலை, மனிதாபிமானம் என்பவற்றுக்கு அப்பால் பொருளாதார நலன் கொண்டு சிந்திக்கும் சர்வதேசம், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை பெற்றுத்தரும் என்ற கருத்தை தலைவருக்கு எவ்வாறு கூறமுடியும்?

அப்படி கூறுபவர் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு என்ன பதிலை தலைவருக்கு கூறுவார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழ்மக்களிற்கு சர்வதேச சமூகம் எந்த வகையில் தீர்வை பெற்றுத்தரப்போகின்றது?.

உலகெங்குமுள்ள தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக வழிமுறையில் தமிழின உரிமைகளுக்காகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் போராட்டங்களை நடாத்திகொண்டிருக்கின்ற போதும் சர்வதேச கண்காணிப்பாளர்களையோ ,மனிதாபிமான அமைப்புகளையோ,

சர்வதேச தொண்டர் நிறுவனங்களையோ அனுப்பி அம்மக்களை பாதுகாக்க முடியாத சர்வதேச சமூகம்,

நடந்தேறிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய கூட முடியாதிருக்கும் இந்த சர்வதேச சமூகம், வாக்குறுதிகளின் நம்பிக்கையோடு சரணடைய வந்த வடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரைக் கூட காப்பாற்ற முடியாத இந்த சர்வதேச சமூகத்தை நம்பி செயற்பட்டிருக்கலாம் என்ற வாதம் எந்த நம்பிக்கையையும் தரவில்லையே!

எனவே புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தொடர்பாக சரியான கருத்தை தெரிவிக்கவில்லை என்று சொல்வது தேசத்திற்காக ஒய்வின்றி போராடிய அந்த மாவீரனை கொச்சைப்படுத்துவது போன்று தோற்றமளிக்கவில்லையா?

சீன பெருந்தலைவர் சொன்னது போல துப்பாக்கி முனையிலிருந்தே அரசியல் பிறக்கின்றது. அகிம்சை போராட்டம் பயனற்று போனபோது, உருவாக்கம் பெற்ற விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை முழுஉலகிற்கு முழுஅளவில் கொண்டு செல்லப்பட்டு, அதனுடாக சர்வதேச அளவில் அரசியல் தளமும் தெளிவாக உருவாக்கப்பட்டது.

அப்படி சரியாக உருவாக்கப்பட்டதால்தான் பெரும்பான்மை புலம் பெயர் தமிழ்மக்கள் எல்லோரும் ஒரே தலைவன், ஒரு கொடி, ஒரே இயக்கம் என்று இணைந்து செயற்படுகின்றார்கள். ஒரு உறுதியான அரசியல் தளத்தை போடவில்லை என்று கூறுவதில் சரியான அரசியல் தத்துவமாகத் தெரியவில்லை.

அதுமட்டுமில்லாது ஒரு நடைமுறை அரசைக் கட்டிவளர்த்ததினூடாக இராணுவ, அரசியல், நிர்வாக அடித்தளங்கள் மிகச்சீராகக் கட்டமைக்கப்பட்டு நடைபெற்றுவந்ததை தமிழ்மக்களும் உலகமும் அறியும். அதுமட்டுமன்றி, சுனாமியின் பின்னரான ஒழுங்குபடுத்தலினூடாக முழு நிர்வாக திறனையும உலகமே பாராட்டியதன் பின்னரும் தலைவர் இராணுவகட்டமைப்பை மட்டுமே கட்டிவளர்த்தார் என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று.

உறுதியான அரசியல் சித்தாந்தம் இல்லாமல் முப்பது வருடமாக இராணுவ இயந்திரம் மட்டுமே கட்டி வளர்க்கப்பட்டது என்பது, ஒரு நோக்கமற்ற இராணுவத்தை கட்டமைத்தது என்ற கருதப்படுவது சாலச்சிறந்ததல்ல. ஏனெனில், அரசியல் விடுதலையை வென்றெடுக்க அகிம்சையை கையிலெடுத்து போராடி, தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்ற அரசியல் யதார்த்த புரிதலின் அடித்தளத்திலேயே இராணுவ இயந்திரம் கட்டிவளர்க்கப்பட்டது என்பது வெளிப்படையான உண்மை. அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று கூறி தேர்தலில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தார்கள் என்பது யாவரும் அறிந்தது.

அரசியல் ரீதியாக அது தோற்றுப் போன போது, அந்த அரசியல் அடித்தளத்தில் தமிழீழத்தை அடைய ஆயுதப்போரட்டமே சிறந்தவழி என இளைஞர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினர்.

தலைவர் மட்டுமே சரியான, கட்டுப்பாடான, நேர்மையான, எதற்கும் விலைபோகாத பேரியக்கத்தை கட்டி வழிநடத்தினார். எனவே சரியான அரசியல் அடித்தளத்திலேயே இராணுவ கட்டமைப்பு கட்டிவளர்க்கப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆயுத வலிமைத் தளர்வு என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டவுடனேயே, சிங்களம் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 13வது சீர்திருத்தத்தினடிப்படையில் முக்கிய சரத்துக்களை உள்ளடக்காத ஒரு அரைகுறை தீர்வை கொண்டுவர முனைவதிலும், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்று பிராந்திய வல்லரசு தெரிவிப்பதிலும,;

2002ம் ஆண்டு இனப்பிரச்சனைக்கு தன்னாட்சி, தாயகம், சுயநிர்ணய அடிப்படையில் பேசலாம் என்ற சர்வதேச சமூகம், இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் தலையிடமுடியாது என்ற தொனியில் பேசுகின்ற இந்த நிலைமாற்றத்திலும் பிரதான பங்கு வகிப்பது அரசியல்தளமல்ல இராணுவ தளமே என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த புறநிலையை சரியாக ஊகித்தே தலைவர் செயற்பட்டார். தமிழ்மக்கள் இப்போதுள்ள புதியசூழலில் தெளிவாக புரிந்த கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக சகல அரசியல் புறச்சூழல்களையும் எதிர்கொண்டு அரசியல், ராசதந்திர, இராணுவ உத்திகளை வகுத்து சிறந்த தளபதிகளையும் பொறுப்பாளர்களையும் போராளிகளையும் உருவாக்கி,

தமிழரின் நம்பிக்கையையும் வீரத்தையும் மெருகேற்றி,

உலகத்தில் தமிழனின் போராட்ட நியாயத்தை அரசியல் ரீதியாக நகர்த்திய தலைவரை வஞ்சப்புகழ்ச்சி செய்து,

தலைவரையும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துபவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்.


சிறையகதிமுகாம்களில் துன்புறும் மக்களின் பாதுகாப்பு, சர்வதேச மனிதாபிமான உதவிகளும் நேரடியாக சென்றடைவதற்காக வழிவகைகளையும் காணாமல்போவோர், கைதுசெய்யப்படுவோர், ஏனைய வழிகளில் பாதிக்கப்படுவோர், அடிப்படைவசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் காப்பற்றப்படக்கூடிய வழிவகைகளை கண்டறிந்து அந்தந்த நாடுகளிலிருக்கும் புலம்பெயர்மக்கள் அங்கு பிரச்சாரங்களையும் சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுப்பது மிகவும் அத்தியாவசியமான பணியாகின்றது. முக்கியமாக ஆயுதங்கள் மௌனிக்கப்படலாம் ஆனால் தமிழ்மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் வரை புலிகளின் இராணுவ பலம் பாதுகாக்கப்பட்டு இருப்பதே தமிழினத்திற்கு என்றும் பாதுகாப்பானது என்பதை யாரும் மறந்து செயற்படக்கூடாது.

ஆக்கம்: வாகுகன்

உங்கள் கருத்துக்களை கட்டுரையாளருக்கு அனுப்பி வைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி karuthukal@gmail.com

Comments