எதிர்வரும் ஜனாதிபதி தேர்தயல் மூலம் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அரிய வாய்ப்பு தமிழ் மக்களுக்குக கிடைத்துள்ளது. ”நடைபெற இருக்கும் ஆட்சித்தலைவர் தேர்தலில் கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல” என யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையை நாம் முழு மனதோடு வரவேற்கிறோம். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள முன்னாள் உச்ச நீதிமனற் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாம் நூறு விழுக்காடு உடன்படுகிறோம்.
2005 ஆண்டு இருந்த களநிலையோ அரசியல் நிலையோ இன்றில்லை என்ற உண்மையை (யதார்த்தத்தை) நாம் மறந்துவிடக் கூடாது. 2005 இல் வி.புலிகள் இராணுவ சமபலத்தோடு இருந்தார்கள். ஒரு நிழலரசும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று இந்த இரண்டும் இல்லை.
இன்று எமது மக்கள் சிங்கள – பவுத்த வெறிபிடித்த ஒற்றை ஆட்சிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது. வன்னி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களில் குடிபுக முடியாமல் இடைநடுவில் விடப்பட்டுளார்கள். மறு வாழ்வு என்ற பெயரில் ஒரு குடும்பத்துக்கு அய்ந்து தகரங்களும் ரூபா.25,000 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்துக்கும் மேலான மக்கள் தொடர்ந்து வன்னி முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். . பன்னீராயிரம் போராளிகள் சிங்களைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கூறுவது போல் “எமது விதியை நாமே நிருணயிக்க வேண்டும். இதற்காக நாம் எமக்குக் கிடைத்திருக்கும் சிறிய துரும்புச் சீட்டையும் உரிய வகையில் உபயோகிக்க வேண்டும். வீரவசனங்களாலும் வெற்றுப் பேச்சுக்களாலும் காலம் கடத்தும் எமது அரசியல்வாதிகளை உரிய வகையில் நாம் இனங்காண வேண்டும்.”
அதாவது பட்டது போதும் இனிப் படமுடியாது என்ற நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றே எமது மக்களுக்கு ஓரளவாவது நிம்மதியைத் தேடிக் கொடுக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
தேசியத் தலைவரின் பெற்றோர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுகிறார். எழுநூறுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் ஆண்டுக்கணக்காகச் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். North Eastern Monthly என்ற செய்தி ஏட்டின் ஆசிரியர் J.S. திசநாயகம் அமைதிக் காலத்தில் எழுதிய இரண்டு கட்டுரைக்கு ஒரு சிங்கள நீதிபதியால் இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகிந்த இராசபச்சேயின் ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசேப் பரராசசிங்கம், நடராசா ரவிராஜ், கிட்டினன் சிவநேசன், தியாகராசா மகேஸ்வரன் போன்றோர்களது கொலையாளிகள் இன்னும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.
இதேபோல் மகிந்த இராசபக்சே அரசின் தமிழின அழித்தொழிப்பபின் (Genocide) ஒரு கூறாகக் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பலர் கொடிய சிங்கள அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியுள்ளார்கள்.
எனவே எமது மக்கள் கொஞ்சமேனும் மூச்சுவிட வேண்டும் என்றால் ஆட்சிமாற்றம் தேவை. மகிந்த இராசபக்சேயை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று குவித்ததை வெடிகொளுத்திக் கொண்டாடிய கொடிய ஆட்சிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ், தமிழீழம் என்ற சொற்களுக்குத் தடைவிதிக்கச் சட்டம் கொண்டு வந்து இலங்கைத் தீவில் சிறுபான்மையினர் இல்லை, தமிழர்களுக்கு தாயகம் இல்லை, தேசியம் இல்லை, தன்னாட்சி உரிமை இல்லை, வடகிழக்கு இணைப்பில்லை என்று கொக்கரிக்கும் மகிந்த இராசபக்சே என்ற கொடுங்கோலனை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து வாழும் ஒட்டுக்குழுக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும்.
முன்னெப்பொழுதும் இல்லாதவாறு சிங்கள தேசம் தமக்குள் மோதிக்கொண்டிருக்கிறது. இதனை நாம் சாணக்கியத்தோடு எமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். இரண்டு எதிரிகளில் ஒரு எதிரியை ஒழிக்க . இன்னொரு எதிரியோடு கூட்டுச் சேரவேண்டும்.
எனவே மேற்கூறிய காரணங்களை மனதில் கொண்டு தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
------------------------------தொடர்பு பட்டவைகள்
நாம் வெளியேற்றுகிறோம்
- ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் : தேர்தலில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?
- சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்
- தமிழ் வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு; இரண்டுமே தமிழருக்கு பயன்தர மாட்டா!
- ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ சுயேச்சையாக போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல
Comments