தமிழ்மக்களின் ஒருமித்த குரல் தேர்தலில் எதிரொலிக்குமா?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பொறிமுறை இயக்கப்படுகிறது.

பிரதான மைய அரசியலில் புகுந்துள்ள தமிழர் அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல.

இங்கு முற்போக்கான தேசியவாத நிலைப்பாடோ அல்லது வர்க்கம் கடந்த தூய்மையான தேசியமோ அல்லது இரண்டிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடோ எதுவித பங்கினையும் வகிக்கவில்லை.

தமிழர் தரப்பினைப் பொறுத்தவரை, முக்கிய தமிழர் அரசியல் பங்காளிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பினை தக்க வைக்கும் நகர்வுகளையே காணக் கூடியதாக இருக்கிறது.

ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்ற காலகட்டத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கூட்டமைப்பு இயங்க முடியாத நிலை நிலவியது.

அதன் மூன்று நாடாளுமன்ற அங்கத்தவர்கள், ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளை ஏக தலைமைத்துவமாக ஏற்று, மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர்களை புலிகளாகவே அரசாங்கம் கருதியது. உலக நாடுகளும், மக்களால் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளென்று அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்தது.

இறுதிப் போரின் சாட்சியாக, முள்ளிவாய்க்காலில் நின்ற மக்கள் பிரதிநிதி கனகரெத்தினத்தின் விடுதலைக்காக இந்த ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் வாய்திறக்கவில்லை.

ஆனால், இன்று வீட்டுக் காவலில் இருப்பது போன்று, கூட்டமைப்பினருடன் இணைய முடியாமலுள்ள கனகரெத்தினம் எம்.பி.யின் சுதந்திர நடமாட்டத்திற்காக இந்தியாவும் குரல் கொடுக்கவில்லை. தற்போது சூழ்நிலைக் கைதியாகவிருக்கும் கனகரெத்தினம் நிர்ப்பந்த அரசியலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதென அழுத்திக் கூறுவதன் ஊடாக, தமிழ் மக்களை தடுமாற வைக்கலாமென ஆட்சியாளர்களின் பரப்புரை இயந்திரம் வேகமாகச் செயற்படுகின்றது. தானாகத் திறந்த கனகரெத்தினத்தின் சிறைக் கதவுகளும், ஏ9 பாதையும், தேர்தல் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவாக நடக்கும் நிகழ்வுகளே.
இரு சிங்கள தேசிய கடும்போக்காளர்களுக்கு மத்தியில் போட்டி நிலவுவதால் பிரதேசவாத தமிழ் அரசியலுக்கு அவசியமில்லாமல் போய் விட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அது மீண்டும் முளைக்கும். துளிர்விடும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் மண் பறி போவது குறித்து கவலைப்படாமல் குறுகிய பிரதேசவாத மைய அரசியலை தூக்கிப் பிடித்து, நாடாளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றும் முன்னெடுப்புகள் எழுச்சி பெறும்.
ஆனாலும், நம்பியிருந்த பெருமலையை அனைத்துலக வல்லரசாளர்கள் கூட்டிணைந்து தகர்த்து விட்டார்கள் என்கிற உள்மன வேதனை, ஆதங்கம், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உண்டு. மலையகத்தின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்களிடமும், மலை தகர்ந்த தாக்கமுண்டு.

இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தமிழ் மக்களின் பலத்தினை, தமது அதிகார இருப்பிற்காகப் பயன்படுத்தும் தலைமைகளின் நிலை குறித்தும் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள உயர்வு குறித்து தீர்க்கப்படாத விவகாரத்தையாவது நிபந்தனையாக அக்கட்சி முன்வைத்திருக்கலாம்.

அபிவிருத்தி என்கிற மாயத் திரைக்குள், கூலி உயர்வுக் கோரிக்கையை மறைக்கலாமென்று எடை போடப்படுகிறது. ஆனாலும் மலையகப் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், தற்போது ஆட்சியிலிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதனை, பெரும்பாலான இளைஞர் கூட்டம் விரும்பவில்லை போல் தெரிகிறது.

இவை தவிர காலஞ்சென்ற பெரியசாமி சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னணியானது அரசோடு இணைந்தவாறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மலையக இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டுமென நிபந்தனை விதிக்கிறது.
இதுவரை இணைந்திருந்து செய்ய முடியாத விடயத்தை, இனிமேலும் நிறைவேற்றுவார்களா என்கிற கேள்வி மக்களிடையே நிச்சயம் எழும்.

அத்தோடு அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துகளை நீக்க வேண்டுமென்கிற ஆலோசனையும் அரசிற்கு வழங்கப்படுகிறது.

எதிரணியில் மஹிந்த ராஜபக்ஷ இருப்பது போன்றதொரு கற்பனையில், இத்தகைய நிபந்தனைகளை மலையக மக்கள் முன்னணி முன் வைப்பது போலிருக்கிறது. இதே நிபந்தனைகளை சரத் பொன்சேகாவிடம் முன் வைத்து, கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை ஆட்சி பீடமேறினால் விடுவிப்பீர்களாவென்று வினவினால் மிகப் பொருத்தமாகவிருக்கும்.

அதேவேளை மத்திய மாகாண சபை உறுப்பினராகவிருக்கும் பழனி, திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் முன்னணியும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் ரணிலோடு இணைந்து ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றது.
நம்பிக்கை மிக்க மாற்றத்தினை சரத் பொன்சேகா ஏற்படுத்துவாரென இவர்கள் இருவரும் நம்புகிறார்கள். ஜெனரல் சரத் பொன்சேகாவால் ஆட்சி மாற்றத்தை மட்டுமே கொண்டு வர முடியும்.

ஆனாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அவர்கள் இழந்த வாழ்வுக்கும் நீதி கிடைக்குமாவென்கிற சந்தேகம் தமிழ் மக்களிடம் உண்டு. இலங்கை அரசாங்கம், போர்க் குற்றம் புரிந்ததாக அயர்லாந்து நிரந்தர விசாரணை மன்றம் (கஞுணூட்ச்ணஞுணt கஞுணிணீடூஞு'ண் கூணூடிஞதணச்டூ) கூறியுள்ளது.

விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வீடியோக்கள், போரின் கொடுமைகளை நேரில் கண்ட மக்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் அங்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக விசாரணைமன்றம் தனது முடிவுகளை மேற்கொண்டது. உணவும் மருந்தும் போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டது, சரணடைந்த பொதுமக்கள் இராணுவத்தின் துன்புறுத்தலுக்கும், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உட்படுத்தப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளை அயர்லாந்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தமது எதிர்கால அரசியல் பற்றியதான இருப்பு சார்ந்த அச்சம் நிலவுகிறது.
வேறு தெரிவற்ற நிலையில், கூட்டமைப்பின் ஒருமைப்பாடு, தமிழ் தேசிய அரசியலின் உயிர்ப்பு என்பவை பாதுகாக்கப்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆகவே, ஆட்சிமாற்றமேற்பட்டால், தமிழர் தாயகத்தின் அரசியல் இருப்பு தக்க வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. மக்களின் சிதைக்கப்பட்ட இயல்பு வாழ்வு மீட்டெடுக்கப்படுவதில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்ற வாழ்வும் தங்கியுள்ளது.
சரத் வெற்றி பெற்று அதன் பின்னரும், ஆயுதக் குழுக்களின் பிரசன்னம், தாயகப் பிரதேசங்களில் தொடருமாயின், தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கிலும் மாற்றமேற்படும்.
அதேவேளை, வடக்கு,கிழக்கு மற்றும் மலையக பெருந்தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டால் ஆட்சி மாற்றமேற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதென கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் விடுதலைப் புலிகள் முன்னெடுத்த, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முடக்கிய, மஹிந்த ராஜபக்ஷவையா அல்லது ஜெனரல் சரத் பொன்சேகாவையா சிங்கள மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை உறுதிபடக் கூற முடியாதுள்ளது.


ஜனநாயகத்தை நிலை நாட்டும் தேர்தலுக்காக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் வன்முறைகளின் சோகம் தாளாமல், தமது பதவியை விட்டு விலகப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மே 18க்குப் பின்னர், வடக்கு கிழக்கில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடம் கூட்டமைப்பால் மீண்டும் நிரப்பப்படுமா? ஜனவரி 27 ஆம் திகதியளவில் முடிவு தெரிந்து விடும்

-இதயச்சந்திரன்

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

இலங்கைத் தேர்தல் 2010

  1. தாயகம் தேசியம் சுயநிர்ணயம் அதுவே தமிழர்களது நிலைப்பாடு: சம்பந்தன்
  2. விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து கூட்டமைப்பின் சரியான முடிவு
  3. "எதிரியின் எதிரி நண்பன்": இப்போது அதுவே ஆயுதம்
  4. ஆட்சியை மாற்றி ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
  5. சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Comments