நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?

மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை
அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும், இங்கிலாந்தில் லண்டன் நகரிலும், பிரான்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வின் இறுதி நாளன்று எதற்காக அமர்விலிருந்து நாங்கள் வெளியேறினோம் என்பதை எங்களை நம்பி நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசியத்தின்பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அனைத்துத் தமிழர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு என்பதை நாம் அறிவோம்.

எனவே, அந்த அமர்வில் என்ன நடந்தது?
எப்படியெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்?
எப்படியெல்லாம் எமது கருத்துக்கள் அலட்சியப்படுத்தப்பட்டது?
எப்படியான அபாயங்களை எதிர்கொண்டோம்?
என்பதை எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவரிடமும் ஒப்புவிக்கின்றோம்.

இந்த அமர்வுக்கான திகதியும், இடமும் நிர்ணயிக்கப்பட்டபோதே எமது அதிருப்திகள் சிலவற்றை அன்றைய இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரான திரு. வி. ருத்திரகுமாரன் அவர்களுக்குத் தெரிவித்திருந்தோம்.

115 உறுப்பினர்கள் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மக்கள் பிரதிநிதிகளின் தெரிவு நிறைவு செய்யப்படாத நிலையிலும், பல இடங்களில் தெரிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், பல நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்படாத நிலையிலும் அரசியல் யாப்பைத் தீர்மானிக்கும் அமர்வை நடாத்துவது சட்டத்திற்கும், சம்பிரமாயத்திற்கும் புறம்பானது என்ற நியாயப்பாட்டை அவருக்குத் தெரிவித்தோம்.

அதற்கு திரு. ருத்திரகுமாரன், 'செப்ரம்பர் 28 ஆம் திகதிக்கு முன்னதாக எல்லாத் தெரிவுகளும் பூர்த்தியாகிவிடும், எல்லா நாடுகளிலும் தேர்தல் நடாத்தப்பட்டுவிடும். அறிவிக்கப்படாத முடிவுகளுக்கு தீர்வு காணப்படும்' என்ற உறுதிப்பாட்டை எமக்குத் தந்திருந்தார்.

ஆனால், திரு. ருத்திரகுமாரன் அவர்கள் இறுதி நாள்வரை தனது வாக்குறுதியினை நிறைவேற்றவே இல்லை. ஆனாலும், மக்களுக்கு மூன்று மாத காலத்தில் அரசியல் யாப்பு ஒன்றுடன் சந்திப்போம் என்ற வாக்குறுதியை முதலாவது அமர்வின்போது நாம் அனைவரும் இணைந்தே வழங்கியிருந்த காரணத்தால், ஏதோ சில நோக்கங்களால் திரு. ருத்திரகுமாரன் இந்த மக்கள் பிரதிநிதிகளின் தெரிவை வேண்டுமென்றே பின்போடுவதாக உணர்ந்து கொண்டாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதறடிக்கக் கூடாது என்ற நோக்கில் நாம் இந்த அமர்வினை நடாத்துவதென்ற முடிவை எடுத்தோம்.

இந்த அரசியல் யாப்பு விடயத்தில் நாங்கள் மூன்று விடயங்களில் மட்டும் உறுதியாக இருந்தோம். அது குறித்து ஏற்கனவே, திரு. ருத்திரகுமாரன் அவர்களுடன் விவாதித்தும் இருந்தோம். அதாவது, பிரதமருக்கு உதவியாக மூன்று பிரதிப் பிரதமர்களை நியமிப்பது என்றும், அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா என மூன்று கண்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும், 20 நியமன உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நாம் தீர்மானித்திருந்தோம்.

இதில், எங்களுக்கான சுயநலம் எதுவுமே இல்லை. 'தமிழீழ விடுதலை' என்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இலக்கு எந்த வகையிலும் தடம் புரண்டு விடக் கூடாது என்ற அக்கறை மட்டுமே. நாடு கடந்த தமிழீழ அரசின் அதிகாரம் ஒருவர் கையில் குவிந்திருப்பது அதிக ஆபத்தானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.

பிரதமராகப் பதவி ஏற்பவர் எந்த வகையிலாவது ஏதோ ஒரு சக்தியினால் வளைக்கப்பட்டாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ அல்லது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலோ எமது போராட்டம் திசைமாறக் கூடிய ஆபத்து ஏற்பட்டுவிடும். அல்லது, தனி ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு ஏதாவது நிகழ்ந்தால், இந்த இடத்தை நிரப்பி, நாடு கடந்த தமிழீழ அரசை தொடர்ந்து வழி நடாத்துவது முடியாத காரியமாக மாறிவிடலாம்.

அது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களது நிலப்பரப்பு வியாபித்து உள்ளதால். தனி ஒருவரால் அதைக் கவனிப்பதும், கட்டுப்படுத்துவதும் இயலாத காரியமாகவே இருக்கும். இதனால், இந்த மூன்று பிரதிப் பிரதமர்களது அவசியம் குறித்த விளக்கம் திரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு எம்மால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது.

திரு. ருத்திரகுமாரன் கொள்கையளவில் மூன்று பிரதமர்கள் என்ற முடிவை ஏற்கனவே ஏற்றிருந்தார். மிகுதி விடயங்களை, பொதுச் சபையில் தீமானிப்பதாகவும் எமக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், இந்த விவாதம் சபைக்கு வந்தபோது ஆச்சரியம் தரும் வகையில் மூன்று பிரதமர் என்ற எமது கோரிக்கையையும், அதை பிராந்திய ரீதியில் மக்கள் பிரதிநிதிகளே தேர்ந்தெடுப்பதையும் நிராகரித்ததுடன், நியமன உறுப்பினர்கள் 20 பேரையும் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்பதிலும் உறுதியாக இருந்தது அவர் மீதான எமது நம்பிக்கையை சிதறடித்ததுடன், அவர் குறித்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

முதலாவது வாக்கெடுப்பின்போது 3 பிரதிப் பிரதமர்கள் தேவை என்பதை சபை ஏற்றுக்கொண்டது. இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 42 பிரதிநிதிகளும், எதிராக 41 பிரதிநிதிகளும் வாக்களித்தனர். இரண்டாவது விடயமாக, இந்த மூவரையும் பிரதமர் தேர்ந்தெடுப்பதா அல்லது மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதா என்ற வாக்கெடுப்பின்போது, அதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னதாக, முன்னர் எதிராக வாக்களித்த பலர் தொலைபேசி, ஸ்கைப், மின்னஞ்சல் ஊடாகவும் நேரடியாகவும் மிரட்டப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

கனடாவிலிருந்து பாதுகாப்புக் கடமை என்ற பெயரில் இறக்கப்பட்ட சிலரால் பலர் அன்பாகவும், அதட்டலாகவும், சில பெண் உறுப்பினர்கள் அநாகரிகமாகவும் கையாளப்பட்டனர். பிரான்சில் கலந்து கொண்ட சுவிஸ் உறுப்பினாகளை அங்கு கலந்துகொண்ட சுகிந்தன் தன் விரல் நுனியில் வைத்துக் கொண்டதையும், கண்ணசைவில் கட்டுப்படுத்தியதையும் அங்கு கலந்துகொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

சுகிந்தனின் கட்டுப்பாட்டை மீறி வாக்களித்த சுவிஸ் பிரதிநிதி ஒருவர் பாரிசில் அதிகார தொனியில் கட்டுப்படுத்தியதையும், அமெரிக்காவில் கலந்து கொண்ட பிரதிநிதி தொலைபேசியில் மிரட்டப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சுவிசிலிருந்து பாரிஸ் அமர்வில் கலந்துகொண்ட பெண் உறுப்பினர் ஒருவர் சுயமாக வாக்களிக்க முடியாத நிலையில் கட்டுப்படுத்தப்பட்டார்.

லண்டனில் நடைபெற்ற அமர்வைப் புறக்கணித்து, பாரிஸ் அமர்வில் கலந்து கொண்ட பெண் உறுப்பினரும் சுயமாக வாக்களிக்க முடியாதபடி கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதனால், தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் எமது கோரிக்கை மூன்று வாக்குக்களால் தோற்கடிக்கப்பட்டது. நியமன உறுப்பினாகளை பிரதமர் தேர்ந்தெடுப்பதா? அல்லது மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதா? என்ற வாதம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, தொலைத் தொடர்பு பிரச்சினையால் லண்டன் தடுமாற, பிரான்சில் கலந்து கொண்ட 5 பேர் வாக்களிப்பை நிராகரித்தனர்.

அத்துடன், அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட (புறொக்சி) 5 வாக்குக்களும் அதன்போது நிராகரிக்கப்பட்டது. பிரதமர் தனக்குச் சார்பான 20 பேரை நியமனம் செய்வதன் மூலம் தனக்கான அதிகாரத்தைத் தக்க வைக்கவும், அதனை துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்ற நிலையிலேயே, அவர்களது வாக்குரிமை சில உறுப்பினர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து கொண்ட நாம், எமது மக்களுக்கான பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டோம். மூன்றாவது நாளான இறுதி நாள் நிகழ்ச்சியின்போது, எமக்கான வாக்குப் பலம் அதிகரித்திருந்தது. அமர்வில் கலந்து கொள்ளாத பல உறுப்பினர்கள் வாக்களிக்கும் அதிகாரத்தை எமக்கு வழங்கினார்கள்.

நிலமையைப் புரிந்து கொண்ட திரு. ருத்திரகுமாரன் தரப்பினர் மிக மோசமான ஜனநாயக மறுப்பு ஒன்றுக்குத் தயாராகினார்கள். அமர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளாதவர்களின் வாக்குப் பிரயோகம் செல்லாது என்று தற்காலிக சபாநாயகர் சபையில் அறிவித்தார். கடந்த இரு நாட்களாக அனுமதித்த அவ்வாறான வாக்குப் பிரயோகத்தை இறுதி நாளன்று நிராகரிப்பதற்கு எந்த முகாந்தரமும் இருக்கவில்லை.

அத்துடன், அவுஸ்கிரேலியாவில் தெரிவானதாக அறிவிக்கப்பட்ட நான்கு பிரதிநிதிகளுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவின் அமர்வில் குழப்பங்கள் உருவாகியது. நோர்வேயிலிருந்து கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதி சிவானந்தன் முரளி முதல் நாளிலிருந்தே தொண்டர்கள் என்ற பெயரில் அங்கு பிரசன்னமாகியிருந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டும், எச்சரிக்கப்பட்டும் வந்தார்.

மூன்றாம் நாளன்று இவர் மூலமாக வழங்கப்பட்டிருந்த வாக்களிக்கும் உரிமை (புறொக்சி) மறுக்கப்பட்டதோடு, இவரது கருத்தை வெளியிடும் உரிமையும் இடைக்கால சபாநாயகரால் மறுக்கப்பட்டது.

இந்த விடயத்தை திரு. ருத்திரகுமாரன் அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்த போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால, 'கூட்ட நடவடிக்கைகள் முன்னுக்குப் பின் முரணாகவும், நேர்மையற்ற வகையிலும் நடைபெறுவதால் நான் இங்கிருந்து வெளியேறுகின்றேன்' என்று பகிரங்கமாக அறிவித்த முரளி அரங்கை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் சபையை விட்டு வெளியேற முயன்ற சில உறுப்பினர்கள் மீது அங்கிருந்த அடியாட்கள் மிரட்டலையும், தாக்குதலையும் தொடுத்தனர். தாக்குதலுக்குள்ளான கனடிய உறுப்பினர் ஈசன் குலசேகரம் அச்சத்துடன் அதனைச் சபையில் தெரிவித்துவிட்டு வெளியேறினார். அவருடன் மேலும் பல உறுப்பினர்கள் அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள்.

இதன் பின்னர், அமெரிக்காவிலும், லண்டனிலும், பாரிசிலும் எஞ்சியிருந்த 48 பேருடன் அமர்வு தொடாந்தது. இந்த 48 பேரும் புதிய பிரதமரையும், சபாநாயகர்களையும் தெரிவு செய்யும் வேடிக்கையும் நடைபெற்று முடிந்தது. உலக வரலாற்றிலேயே 115 உறுப்பினாகள் கொண்ட நாடாளுமன்றம் ஒன்றில் 48 பேர் மட்டுமே கலந்து கொண்டு பிரதமரையும், சபாநாயகர்களையும் தெரிவு செய்த ஜனநாயக கேலிக் கூத்தும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் அரங்கேறியுள்ளது.

நாங்கள் யாரும் திரு. ருத்திரகுமாரன் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. திரு. ருத்திரகுமாரன் பிரதமராக வரக்கூடாது என்று கருதியவர்களும் அல்ல. ஆனால், தமிழீழ விடுதலை நோக்கிய இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தடம்புரண்டுவிடக் கூடாது என்பதில் மட்டுமே பிடிவாதமாக இருக்கிறோம். தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தனால் கருணா மூலம் கிழக்கை இழந்தோம். நேற்றைய பல நம்பிக்கை மனிதர்கள் இன்று எதிரி முகாமில் எதற்காகவோ சங்கமமாகிவிட்டார்கள்.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களது பலம் தனி மனித தீர்மானத்தினால் சிதைக்கப்பட்டு விடக் கூடாது என்ற அக்கறையே பதவியை மட்டுமே குறியாகக் கொண்டு அத்தனை காய்களையும் நகர்த்திய ருத்திரகுமாரன் அவர்கள் குறித்த அச்சத்தை எம்முள் உருவாக்கியது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது, மக்கள் பிரதிநிதிகளான எங்களது கருத்துச் சுதந்திரம் நிராகரிக்கப்பட்டது, திட்டமிட்டு எங்கள் மீது அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டது ஆகிய காரணங்களால் எமது எதிர்ப்பினை சாத்வீக வழியில் எடுத்துக் காட்டுவதற்காக அரங்கிலிருந்து நாம் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எங்களுக்குள் எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானவை. எமக்குள் உருவாகியுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டியவை.

1) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக மக்கள் பிரதிநிதிகள் தெரிவை முழுமைப்படுத்தவில்லை?

2) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக இதுவரை அறிவிக்கப்படாத, ஒத்தி வைக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளுக்குத் தீர்வு காண்பதை வேண்டுமென்றே ஒத்தி வைத்துள்ளார்?

3) திரு. ருத்திரகுமாரன் அவர்கள் எதற்காக மூன்று உதவிப் பிரதமர்களை நிராகரிக்கிறார்?

4) மக்கள் பிரதிநிதிகள் மூலமான உதவிப் பிரதமர்கள் தெரிவையும், நியமன உறுப்பினாகள் தெரிவையும் ஏன் நிராகரிக்கிறார்?

5) பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேற நேர்ந்ததற்கான வன்முறைச் சம்பவத்தை திரு. ருத்திரகுமாரன் அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை?

6) உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், சபையை ஒத்தி வைக்காமல், பிரதமராகத் தன்னைத் தெரிவு செய்து கொண்டதையும், சபாநாயகர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் சட்டபூர்வமானது, சம்பிரதாயபூர்வமானது என்று கருதுகின்றாரா?

7) தான் சர்வ வல்லமை கொண்ட பிரதமராக வருவதற்காக, நடைபெற்று முடிந்த அத்தனை அராஜகங்களையும் திரு. ருத்திரகுமாரன் அவர்கள் சரியானது என்று ஏற்றுக் கொள்ளுகிறாரா?

இந்தக் கேள்விகளுக்கு திரு. ருத்திரகுமாரன் அவர்கள் தரும் பதிலில்தான் எங்களது எதிர்கால முடிவு உள்ளது என்பதை தமிழீழ மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிருப்தியினாலும், அச்சத்தினாலும்
அமர்விலிருந்து வெளியேறிய, (புறொக்சி) வாக்குரிமை மறுக்கப்பட்ட
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
மக்கள் பிரதிநிதிகள்


Comments