நாடுகடந்த தமிழீழ அரசுக்கான யாப்பை இறுதிசெய்யும் அமர்வு என்ற போர்வையில் கடந்த வாரம் நியூயோர்க்கில் கேலிக்கூத்தொன்று அரங்கேறி முடிந்துள்ளது.
கேலிக்கூத்து என்ற வகையில் இதுவொரு நகைப்புக்கிடமான விடயமாக விளங்கினாலும்கூட, இதனூடாக புலம்பெயர் தேசங்களில் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளில் சிங்கள அரசின் நிகழ்ச்சித்
திட்டத்தின் கீழியங்கும் கே.பி குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், இது தொடர்பாக மக்களிடையே சில உண்மைகளை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.
மே 18இற்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் நூதனமான கருத்தொன்று வேரூன்றியுள்ளது:
அதாவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை கடந்த 2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஒப்படைத்ததாகவும், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனிமேல் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் இராசரீக செயற்பாடுகளே தமிழீழ தனியரசுக்கு வழிகோலும் என்பதுமே இந்த நூதனமான கருத்தாகும்.
முதலில் நாம் ஒரு விடயத்தை நினைவிற் கொள்ள வேண்டும்:
ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவோ அன்றி இனிமேல் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடம் கையளிப்பதாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறவில்லை. மாறாக, தனது 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்:
“தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள
ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை நாம் உற்றுநோக்கும் பொழுது ஒரு உண்மை மீண்டும் மீண்டும் நிதர்சனமாகின்றது.
அதாவது, தமிழீழ தாயகத்தின் விடுதலை கிட்டும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து போராடுவார்கள் என்பதே தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையின் தொனிப்பொருளாக விளங்குகின்றது.
இதேபோன்று தொடர்ச்சியாகத் தமிழீழ தேசிய விடுதலைக்காகக் குரலெழுப்பிப் போராட்டத்திற்கான உதவிகளைத் தாராளமாக வழங்குமாறு உலகத் தமிழர்களிடம் அழைப்பு விடுக்கும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று வழிநடத்துமாறு எந்தவொரு இடத்திலும் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தார்மீகக் குரலெழுப்பித் தாராள உதவிகளை வழங்குமாறு 2008ஆம் ஆண்டு மட்டும் உலகத் தமிழர்களிடம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை.
1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிப்பதற்கான
‘சூரியக்கதிர்’ படை நடவடிக்கையை சிங்களப் படைகள் முன்னெடுத்த பொழுது நிகழ்த்திய மாவீரர் நாள் உரையிலும் உலகத் தமிழர்களை நோக்கி இவ்வகையான அழைப்பையே தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் விடுத்திருந்தார்.
இதன்பின்னர் 2006ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர் நிகழ்த்திய மாவீரர் நாள் உரையிலும் இவ்வாறான தொனிப்பொருளுடன் உலகத் தமிழர்களை நோக்கிய அழைப்பை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விடுத்திருந்தார்.
இந்த வகையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்குமாறு உலகத்தமிழர்களை நோக்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அழைப்பு விடுப்பது என்பது புதிய விடயம் அல்லவே. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுத் தளமாக உலகத் தமிழினம் விளங்கும் நிலையில் உலகத் தமிழர்களை நோக்கிய தமிழீழ தேசியத் தலைவரின் அழைப்பு என்பது ஒரு இயல்பான – யதார்த்தபூர்வமான விடயமே.
ஆனால் மே 18இற்குப் பின்னர் தமிழீழ தேசியத் தலைவரின் அழைப்பைத் திரிவுபடுத்தி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமையேற்பதற்கு முன்னர் கே.பியும், தற்பொழுது உருத்திரகுமாரனும் முற்படுவதும், இவர்களுக்கு உறுதுணையாக சிலர் செயற்படுவதும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் கூர்ப்பை மழுங்கடிக்க முற்படும் சிங்கள - இந்திய அரசுகளின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு இவர்கள் கங்கணம்கட்டி நிற்பதையே புலப்படுத்துகின்றது.
இதிலும் குறிப்பாக நாடுகடந்த அரசின் பிரதம மந்திரியாக உருத்திரகுமாரனை கே.பி குழுவினர் தெரிவுசெய்தமையும், அதன் தொடர்ச்சியாக உருத்திரகுமாரனை பிரதமர் உருத்திரகுமாரன் என்று விளித்து கே.பி குழுவினரின் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதும், தமிழீழ தேசியத் தலைவருக்கு மாற்றீடாகத் தமிழர்களிடையே கைப்பாவைத் தலைமைகளை உருவாக்குவதற்கு சிங்கள - இந்திய அரசுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு கே.பி குழுவினர் உறுதுணை நிற்பதை ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாக்குகின்றது.
இவை ஒருபுறமிருக்க, தமிழீழ மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கும் ஆளுமை மிக்க ஒருவராக உருத்திரகுமாரனை சித்திரிப்பதற்கான முயற்சிகளும் தற்பொழுது கே.பி குழுவினராலும், அவர்களின் ஊடகங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோ நாடுகடந்த அரசைக் கண்டு மகிந்த ராஜபக்ச அஞ்சி நடுங்குவது போன்றும், இதனால்
உருத்திரகுமாரனின் பாதுகாப்பில் அமெரிக்கா கரிசனை செலுத்தி வருவது போன்றும் கற்பனைக்கு மிஞ்சிய – மிகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கே.பி குழுவினரின் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
உண்மையில் யார் இந்த உருத்திரகுமாரன்?
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவரது பங்கு என்ன?
தமிழீழ தேசிய விடுதலைக்காக இவர் சாதித்ததுதான் என்ன?
ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் துளிர்விட்ட 1980களின் முதற்கூறில் தமிழீழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தவர் உருத்திரகுமாரன்.
ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர், தமிழீழ தாயகத்தில் வசித்த காலப்பகுதியில் எவ்விதமான போராட்டப் பணிகளிலும் ஈடுபட்டதாகப் பதிவுகள் இல்லை.
இதேபோன்று புலம்பெயர் தேசங்களிலும் 1995ஆம் ஆண்டு வரை தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டப் பணிகள் எவற்றிலும் இவர் ஈடுபட்டதில்லை. கடந்த 1997ஆம் ஆண்டின் முதற்கூறு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினராகவும், அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராகவும் விளங்கிய திலகர் அவர்களால் சட்ட ஆலோசனைகளின் நிமித்தம் 1995ஆம் ஆண்டு இவரது உதவி பெறப்பட்டிருந்தது.
இதேகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கிய சட்டத்தரணிகளாக மாமனிதர் குமார் பொன்னம்பலம், திம்புப் பேச்சுவார்த்தைகளில் ரெலோ இயக்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக விளங்கிய
நடேசன் சத்தியேந்திரா போன்றோர் விளங்கியிருந்தனர்.
இதில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் வசித்திருந்தாலும், அடிக்கடி மேற்குலக தேசங்களுக்குப் பயணம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
இவர்களை விட பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உள்ள வெள்ளையின சட்டத்தரணிகள் பலரும் வௌவேறு சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்திற்கு சட்டபூர்வ ஆலோசனைகளை வழங்கிய பல்வேறு சட்டத்தரணிகளில் ஒருவராகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடியப் பணியகத்தின் பொறுப்பாளராக விளங்கிய மாணிக்கவாசகம் சுரேஸ் 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொழுது, இதுவிடயத்தில் கனடிய வெள்ளையின சட்டத்தரணிகளின் ஆலோசனை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தால் பெறப்பட்டிருந்தது.
இதேபோன்று அக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளராக விளங்கிய நடராஜா முரளீதரன் கைதுசெய்யப்பட்ட பொழுது சுவிற்சர்லாந்தில் உள்ள வெள்ளையின சட்டவாளர்களின் உதவி தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகத்தால் பெறப்பட்டது. இவ்வாறான சட்டபூர்வ உதவிகளை ஒருங்கிணைக்கும் கட்டணம் பெறாத ஒரு சட்டத்தரணியாகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தார்.
இதன்பின்னர் வன்னிக்கு லோறன்ஸ் திலகர் அழைக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பிற்குப் பொறுப்பாக 1997ஆம் ஆண்டு கே.பி நியமிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து அனைத்துலக செயலகத்தின் பொறுப்பாளராக தனது விசுவாசியான வேலும்மயிலும் மனோகரன் என்பவரை கே.பி நியமித்திருந்தாலும், இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதல் எந்தவொரு சந்தர்ப்பதிலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்படவில்லை.
இருந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சட்டபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை உருத்திரகுமாரனிடம் ஒப்படைத்த கே.பி – மனோ தரப்பினர், உருத்திரகுமாரனை அனைத்துலக செயலகத்தின் சட்ட ஆலோசகராக அறிவித்திருந்தனர்.
இக்காலப் பகுதியில் அனைத்துலக செயலகத்திற்கான சட்ட ஆலோசகரான பிரான்சில் உள்ள பிரெஞ்சு இன சட்டத்தரணி ஒருவரையும் மனோ நியமித்திருந்தார்.
வன்னியில் சிங்களப் படைகளின் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ச்சமர் உக்கிரமாக நிகழ்ந்தேறிக் கொண்டிருந்த இக்காலப் பகுதியில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதல் இன்றியே இவ்வாறான நியமனங்களை கே.பி மேற்கொண்டிருந்தார்.
உருத்திரகுமாரனை தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நியமித்ததாக தற்பொழுது கே.பி குழுவினரின் ஊடகங்கள் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்ற பொழுதும், இவ்வாறான நியமனம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எந்தவொரு சந்தர்ப்பதிலும் மேற்கொள்ளப்படவில்லை.
1997ஆம் ஆண்டின் முதற்கூறிலிருந்து 2003ஆம் ஆண்டின் முதற்கூறு வரை கே.பி – மனோ தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழியங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சட்ட ஆலோசகராகவே உருத்திரகுமாரன் விளங்கியிருந்தார்.
எனினும் கே.பி – மனோ தரப்பினரின் சட்ட ஆலோசராகப் பணியாற்றிய காலப்பகுதியில் ஆக்கபூர்வமான விடயங்கள் எதனையும் உருத்திரகுமாரன் சாதித்ததில்லை. மாணிக்கவாசகம் சுரேஸ் அவர்களின் வழக்கையும், அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்
புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கையும்
உருத்திரகுமாரன் ஒருங்கிணைத்திருந்த பொழுதும், இதுவிடயத்தில் எவ்விதமான ஆக்கபூர்வமான பெறுபேறுகளையும் இவரால் ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை.
2002ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையில் கலந்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவில் பல்வேறு உதவியாளர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இதில் தாய்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவின் உதவியாளர்களாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் சட்டத்தரணி என்ற வகையில் உருத்திரகுமாரனும், பொருண்மிய - அபிவிருத்தி ஆலோசனைகளை வழங்கும் நிபுணர் என்ற வகையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அப்போதைய அனைத்துலக பொறுப்பாளரான கலாநிதி ஜோய் மகேஸ்வரனும் இணைக்கப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின்
தூதுக்குழுவில் பல்வேறு துறைசார் நிபுணர்களும், செயற்பாட்டாளர்களும், போராளிகளும் இணைக்கப்பட்ட பொழுதும், உருத்திரகுமாரன் உட்பட இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவின் உதவியாளர்களாகவே விளங்கியிருந்தனர்.
ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவின் தலைவராக தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விளங்கியதோடு, தேசத்தின் குரலுக்கு அடுத்தபடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளாக அப்போதைய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அப்போதைய தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோர் விளங்கியிருந்தனர்.
இவர்களே தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வப் பிரதிநிதிகளாவர்.
இதேபோன்று இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபை தயாரிப்பதற்கென்று 2003ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நிபுணர்கள் குழுவில் உருத்திரகுமாரன் அங்கம் வகித்திருந்தாலும்கூட, இக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களே விளங்கியிருந்தார்.
இடைக்கால நிர்வாகத்திற்கான வரைபை உருத்திரகுமாரனே முன்னின்று தயாரித்ததாக தற்பொழுது கே.பி குழுவினர் பரப்புரை செய்துவருகின்ற பொழுதும், உண்மையில் வரைபைத் தயாரிக்கும் பணிகளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களே நேரடியாக நெறிப்படுத்தியிருந்தார்.
2003ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவருக்கும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பு ஒன்றில் உருத்திரகுமாரனும் இணைத்துக் கொள்ளப்பட்ட பொழுதும், அச்சந்தர்ப்பதில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உதவியாளராகவே உருத்திரகுமாரன் இணைக்கப்பட்டிருந்தார்.
தமிழீழ தேசியத் தலைவரின் சட்ட ஆலோசர் என்ற கோதாவிலோ அன்றி தமிழீழ தேசியத் தலைவரின் உதவியாளர் என்ற கோதாவிலோ இச்சந்திப்பில் உருத்திரகுமாரன் இணைக்கப்படவில்லை. அவ்விடத்தில் குறிப்பெடுக்கும் ஒருவராகவே உருத்திரகுமாரன் அமர்ந்திருந்தார்.
இதன் பின்னர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற எந்தவொரு சந்திப்பிலும் உருத்திரகுமாரன் இணைத்துக் கொள்ளப்படவில்லை: அதற்கான அழைப்பும் உருத்திரகுமாரனுக்கு விடுக்கப்படவில்லை.
இவ்வாறாக பேச்சுவார்த்தை அரங்குகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுக்களில் உதவியாளர்களாகக் கலந்து கொண்ட பல்வேறு உதவியாளர்களில் ஒருவராக விளங்கிய உருத்திரகுமாரனை தமிழீழ தேசியத் தலைவரின் சட்ட ஆலோசகராக தற்பொழுது கே.பி குழுவினர் சித்தரிப்பது அபத்தமானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்கு சட்ட ஆலோசனை வழங்கிய பல்வேறு சட்டத்தரணிகளில், வெறுமனவே பதினான்கு ஆண்டுகளாக சட்ட ஆலோசனை வழங்கிய ஒருவரே இந்த உருத்திரகுமாரன்.
இதேநேரத்தில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன்
உருத்திரகுமாரனை ஒப்பிடுவதற்கான முயற்சிகளில் கே.பி குழுவினர் ஈடுபட்டு
வருகின்றனர். இது மிகவும் நகைப்புக்கிடமானது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தேசத்தின் குரலின் பாத்திரம் என்பது மிகவும் கனதியானது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ அரசியல் ஆலோசகராக மட்டும் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விளங்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலப் பகுதியான 1978ஆம் ஆண்டில் இருந்து இயக்கத்தினதும், தேசியத் தலைவரினதும் மதியுரைஞராகவும், தத்துவாசிரியராகவும் விளங்கியவர் கலாநிதி அன்ரன்
பாலசிங்கம் அவர்கள்.
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கோட்பாடுகளை வகுத்த தத்துவாசிரியராக விளங்கிய கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ தேசத்தின் குரலாகவே திகழ்ந்தார். தேசத்தின் ஒரேயொரு தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்பது போன்று தேசத்தின் ஒரேயொரு குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களே! தேசத்தின் குரல் பற்றி, அவரது மறைவைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட இரங்கல் செய்தியில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்:
“பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல்உபாதைகளால் வருந்தியபோதும், தளர்ந்துபோகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.
எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.
எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.”
இந்த வகையில் ஏறத்தாள மூன்று தசாப்தங்களாக தமிழீழ தேசியத் தலைவருடன் இணைந்து பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு, சாதனைகளை சந்தித்த தேசத்தின் குரலுடன் ஒரு சாதாரண சட்டத்தரணியான உருத்திரகுமாரனை தற்பொழுது கே.பி குழுவினர் ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது: எள்ளிநகையாடப்பட வேண்டியதும்கூட!
தேசத்தின் குரலின் இழப்பை தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட ‘இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு’ என்ற வர்ணித்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், அவ்விடத்திற்குப் பின்னர் எவரையுமே நியமிக்கவில்லை. அவ்விடத்திற்கு நியமிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள் எவருமே இருக்கவில்லை என்பதை இதன் பொருளாகக் கொள்ள முடியும்.
இதுபற்றி 2008ஆம் ஆண்டு வன்னியில் இறுதிப் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது தேசத்தின் குரலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ நாழிதளான ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இழப்பை ஈடுசெய்தல் என்பது இகுவானதல்ல. பனமுகம் கொண்ட அவர் போன்ற ஆளுமை உடைய ஒருவரைக் கண்டறிதல் என்பதே கடுமையானதொன்று. இத்தகைய பன்முக ஆற்றல் கொண்டவர்கள் விடுதலைக்கான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்ணிக்கக்கூடியவர்களாக இருந்தால் மட்டுமே அவ்வெற்றிடம் நிரப்பப்படுதல் சாத்தியமானதாகும்.”
வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் கே.பியுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர்
உருத்திரகுமாரன். இனிமேல் ஆயுதப் போராட்டம் சாத்திமியில்லை என்றும், ஆயுதங்களை கீழே போடுவதைத் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை என்று தானும், உருத்திரகுமாரனும், ஜோய் மகேஸ்வரனும், கனடாவில் உள்ள சில செயற்பாட்டாளர்களும் நம்பியதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கே.பி குறிப்பிட்டிருந்தார்.
தென்சூடானுக்கு இடைக்கால நிர்வாகம் கிடைத்தமை போன்று தன்னால் தமிழீழத்திற்கான இடைக்கால நிர்வாகத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று 2003ஆம் ஆண்டு தேசியத் தலைவருக்கு வாக்குறுதியளித்து அதனை நிறைவேற்றத் தவறிய உருத்திரகுமாரன்,
பின்னர்
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் மக்களை மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் அங்கீகாரத்துடன் அமெரிக்க ஊருடகப் படைகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களிடம்
வாக்குறுதி அளித்திருந்தார்.
பா.நடேசன் உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளும், பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களும் நயவஞ்சகமான முறையில் சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கே.பி மட்டுமன்றி உருத்திரகுமாரனும் பதில்கூற வேண்டியவர்.
இப்படிப்பட்ட ஒருவரை இன்று நாடுகடந்த அரசின் பிரதமராக கே.பி குழுவினர் பிரகடனம் செய்திருப்பது ஒரு நகைப்புக்கிடமான கேலிக்கூத்தன்றி வேறேதுமில்லை. இந்த வகையில் தமிழீழ விடுதலையை அடுத்த கட்டத்தை நோக்கி உருத்திரகுமாரன் நகர்த்தப் போகின்றார் என்று கே.பி குழுவினர் பரப்புரை செய்வதையும், உருத்திரகுமாரனை பிரதமர் என்று விளிப்பதையும் 2010ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த நகைச்சுவையாகவே கொள்ள முடியும்.
வரதராஜப் பெருமாளின் தமிழீழப் பிரகடனத்திற்கு ஒப்பாக விளங்கும் கே.பி - உருத்திரகுமாரன் குழுவினரின் இவ்வாறான நகைச்சுவைகளைப் புறந்தள்ளிவிட்டு ஆக்கபூர்வமான முறையில் செயற்படுவற்கு தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமே!
இவ்விடத்தில் 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த உறுதியுரையைக் கவனத்திற்கொள்வது பொருத்தமானது:
“சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.”
ஈழமுரசு -சேரமான்-
- பூகோள வலயத்தினுள் நாடுகடந்த அரசுகள்?
- நடந்து முடிந்தது நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அமர்வா? அல்லது சிங்கள தேசத்தின் 'முள்ளிவாய்க்கால் 2' சதியா?
- நாய்ப்பாடு படும் நாடு கடந்த அரசு இரண்டாவது அமர்வில் என்ன தான் நடந்தது ??
- வேலும் மயிலும் மனோகரன் மயிலாட்டம் ! GTV பிறேம் ஒயிலாட்டம்!
- பிரான்ஸ் நாடு கடந்த அரசில் குழப்பங்களும், குளறுபடிகளும் - மனம்திறக்கிறார்கள் வேட்பாளர்கள்
- சிங்கள அரச பொறிக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு! மீட்டெடுப்பது எவ்வாறு?
- நாடு கடந்த பொறியில் சிக்குமா தமிழ்த் தேசியம்?
- நாடுகடந்த அரசின் தனி நபர் பொறியில் சிக்கித் தவிக்கும் யாப்பு
Comments