தமிழக சட்டமன்றத் தேர்தல் விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது

மத வழிபாட்டுத் தளங்களுக்கு அலைமோதும் பக்தர்கள் போன்றே மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மக்கள் தேர்தல் காலங்களில் ஈடுபடுவார்கள். மக்களை எப்படியேனும் தமது கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிட வேண்டுமென்கிற வேட்கையுடன் களமிறங்கும் கட்சிகளும், கூட்டணிகளை யாருடன் பேண வேண்டுமென்கிற ஆதங்கங்களுடன் அலைந்து திரிபவர்களும், எப்படியான பிரச்சினைகளை முன்வைத்தால் மக்களின் ஆதரவைப் பெறலாம் என்கிற நோக்குடன் பல பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்வதும் வாடிக்கையானதே. இவ்வகையில், இவ்வருட தமிழக சட்டமன்ற தேர்தல் புது வேகத்துடன் களை கட்டியுள்ளது.


இந்த வருடம் இடம்பெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதொன்றாகவே கருதப்படுகிறது. கலைஞர் கருணாநிதி தனது 87 அகவையில் முதலமைச்சராக இன்றுவரை இருக்கிறார். இவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பினும், இவரின் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இவரின் கட்சியின் ஆதரவுடன் இயங்கும் மத்திய அரசு பல அரசியல் நெருக்கடிகளை சந்திக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் மற்றும் மந்திரிகள் மீது பல ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பலர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது. கலைஞரின் மகள் கனிமொழி பல ஊழல்களை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைப்போன்றே கலைஞரின் குடும்ப வாரிசுகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு நாள் போகப் போக புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவண்ணம் உள்ளது.


கலைஞரின் குடும்பத் தொலைக்காட்சிகள் பல கோடி ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டில், கலைஞரின் மனைவி 60 வீதமான முதலீட்டை வைத்துள்ளதுடன் இத்தொலைக்காட்சி மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தையும் மூடி மறைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெல்ல வேண்டுமென்றால், கலைஞர் பல சாமர்த்தியமான வேலைகளை செய்ய வேண்டும். கலைஞரின் உடல் நிலையோ, மன நிலையோ அவற்றை செய்வதற்கு இடமளிக்குமா என்பது சந்தேகமே. தன்னால் முடிந்தவரை தான் வாழும் காலத்தில் வெற்றிகரமாக பல காரியங்களை செய்து முடிக்கும் தந்திரம் படைத்தவர்தான் கலைஞர்இ இருந்தாலும் இவரின் தள்ளாடும் வயது இடமளிக்க மாட்டேனென்கிறது. அத்துடன் வெளிவரும் ஊழல் புகார்கள் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வருவதனால், கலைஞர் மிகவும் நொந்து போய் உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

மக்களை ஏமாற்ற முற்படும் கலைஞர்


தி.மு.க., அ.தி.மு.க. இடையே இருமுனைப் போட்டி உறுதியாகி உள்ளது. இவ்விரு கட்சிகளோடு பிற கட்சிகள் கூட்டு வைக்க தயாராகின்றன. கூட்டங்களை திரட்ட நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் இறக்கி விடப்படுகின்றனர். தனது சாதுரியத்தால் நடிகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்ற கலைஞர்களை தனது கைக்குள் வைத்து இவர்களின் மூலமாக தனது எதிரிகளை களம் காண்பதுவே கலைஞருக்கு கைவந்த கலை. தனது குடும்பத்திற்கும் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் எதிராக கூறப்படும் புகார்களிலிருந்து தப்பிக்க ஒரேவழி, தமிழக மக்களை எப்படியாயினும் நடிகர்கள் போன்ற கலைஞர்களை வைத்து பாரிய பிரச்சாரங்களை செய்வதனூடாக மக்களின் கவனத்தை திருப்பலாம் என்று கங்கணம் கட்டி நிற்கின்றார் கலைஞர்.

பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் இவரின் சாதூரியங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுவதாற்போல் வேலைகளை செய்கிறது. தி.மு.க.வுக்கு ஆதரவாக நெப்போலியன், நடிகை குஷ்பு, வாகை சந்திரசேகர், பாக்யராஜ் உள்ளிட்டோர் கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்யவுள்ளனர். நெப்போலியன் தி.மு.க. வில் மத்திய மந்திரியாக உள்ளார். இவர் மேடைகளில் பாட்டுப்பாடி உரையாற்றுவது கூட்டத்தினரை கவர்கிறதாம். குஷ்புவுக்கு இது முதல் தேர்தல் பிரச்சாரம் திராவிட இயக்க வரலாற்று புத்தகங்கள் படித்தும் தற்போதைய அரசியல் நிலவரங்களை ஆய்வு செய்தும் கூட்டங்களில் பேச தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க.வுக்காக ராதாரவி, ராமராஜன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வில்லன் நடிகர் பொன்னம்பலம், சூர்யகாந்த், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், நாஞ்சில் பி.சி. அன்பழகன், நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் பிரசாரத்தில் குதிக்கின்றனர். பொன்னம்பலம் சில தினங்களுக்கு முன்னர்தான் அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த தேர்தலில் நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவைசரளா, நடிகர் செந்தில் போன்றோர் அ.தி.மு.க.வுக்கு பிரச்சாரம் செய்தனர். தற்போது அவர்கள் ஒதுங்கியுள்ளனர். இந்த தேர்தலிலும் அவர்களை பிரச்சாரத்தில் இறக்க அ.தி.மு.க. தரப்பில் முயற்சிகள் நடக்கிறது. நடிகர், நடிகைகளுக்காக தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலை இரு கட்சிகளும் தயார் செய்து வருகின்றனர். இவர்களுக்காக விசேஷ வாகனங்களும் தயாராகிறது. பிரச்சாரத்துக்கு வசதியாக இரு மாதங்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்ய இவர்கள் முடிவு செய்துள்ளனர். இப்படியாக தமிழக அரசியல் கட்சிகளின் வலைகளில் விழுந்துள்ளார்கள் சினிமாத்துறையினர்.

தன்னையும், தனது குடும்பத்தையும் முதன்மைப்படுத்தும் தமிழக அரசியலில் அடிக்கும் ‘ஸ்பெக்ரம்’ என்கிற ஊழல் அலை கலைஞரின் கனவுகள் அனைத்தையும் காவு கொண்டு விடும் என்றே தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் திடீர் மறைவினால் எழுந்த வெற்றிடத்தைச் சாமர்த்தியமாகக் கைப்பற்றிய கலைஞர், அதனைத் தொடர்ந்து தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொண்ட அரசியல், பொருளாதார சாம்ராஜ்யம் பிரமிக்கத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, அவரது குடும்ப உறுப்பினர்களது அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு தமிழகத்தையும் தாண்டி டெல்லி வரை வியாபித்துள்ளது.

http://inioru.com/wp-content/uploads/2010/06/tmks.jpg
அரசியலையடுத்து, கருணாநிதி குடும்பத்தின் தமிழக சினிமா மீதான ஆக்கிரமிப்பால் முன்னணிக் கதாநாயகர்களே அதிர்ந்து போயுள்ளார்கள். இந்த நிலையில் உருவான ‘ஸ்பெக்ரம்’ பூகம்பம் அவரது குடும்ப அரசியலின் எதிர்காலத்தை சுக்கு நூறாகச் சிதைக்க ஆரம்பித்துவிட்டதாகவே உணரப்படுகின்றது. இவைகளை மறைக்க முற்படும் கலைஞர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். இவரின் வலையில் சிக்குண்டுள்ளார்கள் சினிமாத்துறையினர்.

மக்கள் நாயகன் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதன்

மக்களின் பணியே மகேசன் பணி என்கிற வகையில் தொண்டாற்றினார் எம். ஜி. ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். என்கிற அந்த அற்புதமான மனிதன் தமிழகத்தில் இருந்திருக்காவிட்டால், கருணாநிதி அவர்களது இந்தக் குடும்ப ராஜ்யம் சில தசாப்தங்களுக்கு முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது ஊழல்களை அம்பலப்படுத்தியதால், தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் எடுத்த விஸ்வரூபம் தமிழக மக்களை அவர் பக்கம் திரட்டியது. கலைஞரினது கனவு கலைய, எம்.ஜி.ஆர். அவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் முதல்வராக இருந்து மறைந்தார்.

அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது மறைவுக்குப் பின்னர், அவரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல உடைவுகளை அடைந்த போதும், அவரது வாரிசாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் ஆட்சியை இரு தடவைகள் கைப்பற்றி ஆட்சி புரிந்தார். முன் கோபமும், அகங்காரமும் நிறைந்தவரான ஜெயலலிதா அவர்களது முடிவுகளும், அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களும் மீண்டும் தமிழக முதல்வராக கலைஞரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. வயது ஆக ஆக தனது வாரிசுகளின் எதிர்காலத்தையே முன்னிறுத்தி அரசியலை நடாத்தினார். அரசியலில் மட்டுமில்லாமல் பொருளாதாரத்திலும் இந்தியாவில் முதன்மை பெற வேண்டுமென்கிற பாணியில் களம் கண்டார். கதைகளில் மட்டுமே களம் காணும் காட்சிகளை வர்ணிக்கும் கலைஞருக்கு, நிஜ வாழ்க்கையிலும் களம் காணும் குறிப்பாக பொருளாதாரத்திலும் மற்றும் அரசியலிலும் களம் காணும் நோக்கில் செயற்பட்டார்.

அன்று எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதன் இருந்ததனால் தனது களம் காணும் படலத்தை நிறுத்துமளவு எதிர்ப்பு இருந்தது. கலைஞரை எப்படியேனும் களம் காணும் விடயத்தில் தோற்கடிக்க வேண்டும் என்கிற நப்பாசையுடன் செயலில் இறங்கினார் செல்வி ஜெயலலிதா. மக்களின் பணத்தை சுருட்டி பல கோட்டைகளையே கட்டினார் இவர். இதனை பயன்படுத்தி ஜெயலலிதாவை தோற்கடித்தார் கலைஞர். கலைஞரோ ஜெயலலிதாவை பலவிதத்திலும் மிஞ்சிவிட்டார். அவருக்கு இவர் போட்டியாக மக்களின் நலன்களில் கவனத்தை செலுத்தி மக்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு ஒரு முடிவை கொண்டுவருவதற்கு பதில், தமது சொந்த நலன்களிள் கவனத்தை செலுத்தினார்கள் இரு தலைவர்களும்.

தமிழக மக்களும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களாகவே இன்றும் இருக்கிறார்கள். இராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டதாக பிரச்சாரம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் ஜெயலலிதா. இவரை இந்த விடயத்தில் எப்படியேனும் முறியடிக்க வேண்டுமென்கிற பாணியில் செயற்பட்டார் கலைஞர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழகத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் தமது அரசியல் வாழ்க்கையை கழிக்கலாம் என்கிற பாணியில் செயற்பட்டார்கள் இரு தலைவர்களும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் எப்பொழுதுமே தமிழீழ விடுதலைக்கு எதிரான கொள்கையையே பல தசாப்தங்களாக பேணி வருகிறது. இதன் கொள்கை என்பது டெல்லியின் கட்சியின் தலைமையின் உத்தரவின் பேரிலேயே அமைகின்றது. ஆகவே, காங்கிரசைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

பிராந்திய கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழேதான் தமிழக ஆட்சிகள் பல காலங்களாக இருக்கிறது. தமிழர்களின் விடுதலைக்காக போராடிய போராளிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் சுயலாபங்களுக்காக தமது இனத்தையே காட்டிக்கொடுக்கும் இனங்களின் முதன்மை வாரிசுகளாக இருக்கும் இவர்கள் போன்ற தலைவர்களினால்தான் இன்று தமிழர்கள் இழிவு வாழ்க்கை வாழுகின்றார்கள்.

பாகம் 2: தமிழக சட்டமன்றத் தேர்தல் விளையாட்டு ஆரம்பம்

தேர்தல் காலப்பகுதிகளில் தமிழக மக்களின் ஆதரவைப் பெறுமுகமாக அக்கால சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை. பசி பட்டினி போன்ற பிரச்சினைகளினால் பல லட்சம் தமிழக மக்கள் திண்டாடுகிறார்கள். ஊழல்கள் தலைதூக்கி ஆடுகிறது. அரசியல்வாதிகள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள படாதபாடுபடுகிறார்கள். தள்ளாடும் வயதிலும் ஆறாவது முறையாக முதலமைச்சராக வந்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் செயற்படுகிறார் கலைஞர்.

முதல்வராக இருக்கும் காலத்தில் இறந்துபோனால் தனது தனயன் ஸ்டாலினை அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதன் மூலமாக பின்வரும் காலங்களிலும் ஸ்டாலின் முதலமைச்சராக தெரிவாகும் சாத்தியம் அதிகம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார் கலைஞர். தமிழர்களை பணயக்கைதிகளாக வைத்து அரசியல் ஆதாயம் பெற முனைகிறார் கலைஞர். தமிழக மக்களும் வாக்குகளைப் போட்டு இவர்களைப் போன்ற சர்வாதிகார அரசியல் பண்பாட்டுடைய தலைவர்களுக்கு ஆதரவளிப்பது வெட்கப்பட வேண்டிய விடயமே.

ஜனநாயக நாடுகள் என்று அலட்டிக்கொள்ளும் நாடுகளானாலும் சரி அல்லது அந்நாடுகளில் இருக்கும் மாநிலங்களிலானாலும் சரி, ஜனநாயக பதத்தை வைத்துக்கொண்டு சர்வாதிகார ஆட்சிகளையே நடாத்துகிறார்கள். ஒருவர் ஒரு தடவை அல்லது இரு தடைவைகள் தலைமைப் பதவிகளுக்கு வரலாம். பிறரும் அரச தலைவர்களாக வருவதற்கு வழிவிட்டுச் செல்வதே உண்மையான ஜனநாயகத்தைப் பின்பற்றும் கட்சித் தலைமகளுக்கு இருக்க வேண்டிய கடமை.

எந்தவொரு கட்சித் தலைமையும் தோல்வியைச் சந்தித்தால், அத்தலைமை அடுத்த நிலையிலிருக்கும் உறுப்பினர்கள் அத்தலைமைப் பதவியை ஏற்பதுவே சிறந்த ஜனநாயக செயற்பாடாக இருக்க முடியும். இப்படிச் செய்வதனால், பழைய தலைமைகள் செய்யும் பிழைகளைக் கண்டுபிடிப்பதனால் கட்சிகளை வளர்ப்பதுடன், நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை காட்ட முடியும். அதைவிடுத்து ஒருவரே ஐம்பது ஆண்டுகளாக குறித்த பதவியில் இருப்பதனால், கட்சிக்குள்ளேயோ அல்லது அரசாங்கத்திற்குள்ளேயோ இடம்பெறும் ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியாது.

இவ்வாறாக ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயற்படும் கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற தலைமைகளினால் தமிழகம் எந்தவித பொருளாதார மாறுதல்களையும் காணப்போவதில்லை. தமிழக மக்களுக்கு சுறுசுறுப்பான தகுதியுள்ள இளம் தலைமையே தேவை. உத்வேகத்துடன் போராடும் வல்லமையுடைய இளைஞர்களினாலும், இளம் இரத்தத்தைக் கொண்ட சந்ததியினால் மட்டுமே சிறந்த ஆட்சியை நடாத்தி வறுமையையும் மிதமிஞ்சிப்போயிருக்கும் ஊழல்களுக்கும் ஒரு முடிவைக் கொண்டுவர முடியும்.

கண்துடைப்பு அரசியல் செல்லுபடியாகாது


கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களினால் காலம் காலமாக நடாத்தப்படும் கண்துடைப்பு நாடகங்களை புரிந்து தமிழக மக்கள் விவேகத்துடன் செயற்படுவது அவர்களின் எதிர்கால சந்ததியினரின் இருப்பை உறுதியாக்கும். சிங்கள அரசு தமிழின அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்த காலத்தில், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பிலும், பதவியிலும் இருந்த கலைஞர் ஈழத்தமிழர்களின் அழிவை வெறும் பார்வையாளனாக இருந்து வேடிக்கை பார்த்ததை தமிழகத்தின் தமிழின உணர்வாளர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ முடியாதவர்களாகவே உள்ளார்கள். தமிழகத்தில் எழுந்த உணர்வலைகளும், ஈகைச் சுடரொளி முத்துக்குமாரன் அவர்கள் தொடக்கி வைத்த எழுச்சிகளும் கலைஞர் அவர்களது மௌனத்தைக் கேள்விக் குறியாக்கிய நிலையில், அரை நாள் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் கேள்விகளற்ற முறையில் சிங்களம் தமிழின அழிப்பை நடாத்தி முடிக்கவும், தப்பிப் பிழைத்த தமிழர்களை முள்வேலி முகாமினுள் வைத்துச் சித்திரவதை செய்யவும் முடிந்தது.

அன்றைய கருணாநிதியின் இந்தக் கொடூரமான நடவடிக்கைகள் குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்து நிதர்சனமானது. அவர் தெருவித்ததாவது: “முதல்வர் கருணாநிதி அவர்களும், அவரது அமைச்சர்களும் மிகப் பெரும் ஊழல்களைப் புரிந்துள்ளனர். அது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். இந்த நிலையில் காங்கிரஸ் அரசின் தீர்மானத்தின்படி சிங்கள அரசால் நடாத்தப்படும் இந்த யுத்தத்தை நிறுத்தும்படி ஒரு எல்லைக்கு மேல் இவரால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது. தி.மு.க. அரசு தமிழீழ மக்களுக்காக காங்கிரசை எதிர்க்க முற்பட்டால், இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை அவர்கள் கையில் எடுப்பார்கள்."

தற்போது வெளியாகி, இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஸ்பெக்ரம் ஊழலும் இறுதி யுத்தத்திற்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதனால், திரு. சி. மகேந்திரன் அவர்களது அன்றைய கருத்தை நிராகரிக்க முடியாது. எனவே, கலைஞர் அரசியலில் பெரும் ஊழல்களைத் தொடர்வதற்கும், அதனால் பெற்ற பெரும் செல்வத்தைக் காப்பாற்றுவதற்குமாக ஈழத்தமிழர்கள் மீது சிங்கள – இந்திய அரசுகள் நடாத்திய பேரவல, இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை என்ற உண்மையும் அம்பலப்படுத்தப்படும் ஸ்பெக்ரம் ஊழலுடன் சேர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது.

முக்காடு போட்டும் மூட முடியாத பெரும் ஊழல் புயலில் கலைஞர் கருணாநிதி தனது குடும்பத்துடன் அம்மணமாக நிற்பதால், எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் அவரது குடும்ப ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றே தமிழகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கமும், ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகம் ஒரு பக்கமும், கருணாநிதி குடும்ப ஆதிக்கத்தால் பெரும் சீற்றத்திற்குள்ளாகியுள்ள தமிழக சினிமாத் துறை ஒரு பக்கமாகவும் தி.மு.க. வை எதிர்த்துப் பல்முனைத் தாக்குதல்கள் நடைபெறும் நிலையில் கருணாநிதியின் கப்பல் கரை சேர்வது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்றே தமிழக அரசியல் வட்டாரங்களினால் அடித்துச் சொல்லப்படுகிறது.

தான் போதும் தனது குடும்பம் போதும் என்கிற பாணியில் ஆட்சி செய்யும் கலைஞர் அவர்கள் மனிதாபிமானத்திற்கு முறனாக செயற்படுகிறார். விடுதலைப்புலிகளின் முன்னால் அரசியல் தலைவர் தமிழ்செல்வனின் படுகொலையையடுத்து அவருக்கு கவிதை உருவில் இரங்கலைத் தெரிவித்த கலைஞர், ஒன்றுமறியா விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்கள் மலேசியாவில் இருந்து சிகிச்சை பெற தமிழகம் வந்தபோது திருப்பி அனுப்பிவிட்டார்.

பார்வதி அம்மாளின் மரணத்தில் கலைஞருக்கு பங்குண்டு


தன்னிலும் விட ஆறு ஆண்டுகள் வயதில் குறைந்த பார்வதி அம்மாள் அவர்கள் 20-ஆம் தேதி இயற்கை அடைந்துவிட்டார் என்கிற செய்தியைக் கேட்டும்கூட வாய்மூடி மௌனியாக இருந்தார் கலைஞர். வாயைத் திறந்தாலோ அல்லது அறிக்கைவாயிலாக இரங்கலை வெளியிட்டாலோ தனது அரசியல் எதிரணியினர் இதை ஒரு பெரிய விடயமாக எடுத்துப் பிரச்சாரம் செய்துவிடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ கலைஞர் தொடர்ந்தும் மௌனம் காக்கிறார். தனது இனத்திற்காகவேதான் அரசியல் களம் கண்டதாக பறைசாற்றும் கலைஞர், உலகத்தமிழர்களின் ஆத்மான தலைவரான பிரபாகரனின் தாயாரின் இறப்பின் பின்னராவது இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது கலைஞரின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

கடைசிக் காலத்தில் பார்வதி அம்மாள் பட்டபாடு கொஞ்சநஞ்சம் அல்ல. மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி, மலேசியாவுக்கு அனுப்பப்பட்டார். பிறகு, மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முறையாக விசா பெற்று, சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவரை விமானத்தைவிட்டு இறங்கவிடாமல், கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு, பல மணி நேரம் விமானத்திலேயே வைத்திருந்தார்கள். மறுநாள் விடியும் வேளை, அவரை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.

மலேசியாவில் தொடர்ந்து தங்க முடியாமல், வேறு வழியின்றி இலங்கைக்கே திரும்பி அழைத்துச் செல்லப்பட்டார். மறைந்த மூத்த வழக்கறிஞர் கருப்பன் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக, இறங்கி வந்தன மத்திய, மாநில அரசுகள். ஆனாலும், பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சைக்கு வரலாம். மகள் வீட்டில் தங்கலாம். உறவினர்களைத் தவிர எந்த அரசியல் அமைப்பினரும் அவரைச் சந்திக்கக் கூடாது! என நிபந்தனை போட்டது. ஒரு கைதியைப்போல அம்மாவுக்கு மருத்துவச் சிகிச்சையா?’ என மறுத்துவிட்டனர் பிரபாகரனின் உடன்பிறந்தவர்கள்.

ஒன்றரை ஆண்டுகளாக வல்வெட்டித்துறை மருத்துவமனையில், மருத்துவர் மயிலேறும் பெருமாள் பார்வதி அம்மாளை கவனித்தார். படுக்கையிலேயே காலம் தள்ளும் துன்பத்தில், படுக்கைப் புண்ணும் வந்து சேர, தலையில் கட்டுப் போடப்பட்டது. புண் ஆறியும், சில வாரங்களாக அவருக்கு குழாய் மூலமே திரவ உணவு செலுத்தப்பட்டது. கடந்த வாரத்தின் கடைசியில் அவரது உடல், இறுதி ஓய்வுக்கு முந்தைய அமைதிக்கு வந்தது. கடந்த 18, 19 தேதிகளில் உறக்க நிலையிலேயே இருந்தார். 20-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு வழக்கமான பரிசோதனைக்குச் சென்றபோது, அவர் இறந்திருந்ததை மருத்துவர் மயிலேறும் பெருமாள் அறிந்தார்.

பார்வதி அம்மாளின் சொல்லொனாத் துயரில் கலைஞருக்கு அதிகமான பங்குண்டு. பல்லாண்டுகளாக திருச்சியில் வாழ்ந்துவந்த பார்வதி அம்மாள் மற்றும் அவரது கணவர் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக எந்தவகையிலும் காரணமாக இருந்ததில்லை. அப்படியிருக்க சிகிச்சை பெற சென்ற மூதாட்டியை தரை இறங்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்ட இந்திய அரசிற்கும் மற்றும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசிற்கும் முழுப்பொறுப்புண்டு.

சிங்கள அரசு செய்யும் கொடுமைகள் நேரடியாக இருக்கிறது ஆனால் இந்தியா மற்றும் தமிழக அரசுகளினால் செய்யப்படும் துரோகங்கள் மறைமுகமாக இருப்பதனால் உலகத்தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

--இதன் தொடர்ச்சி அடுத்த வாரம் வளரும்—

அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments