வெளிச்சத்துக்கு வராத போர்குற்ற சந்திப்பின் இரகசியங்கள்

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு ஜெனிவா கிளம்பியுள்ளது. இலங்கை அரசாங்கம் உச்சக்கட்ட சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்ற நிலையில் தான்- எதிர்பாராத இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.


இந்தச் சந்திப்பு எதற்காக நடந்தது? இதில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? எல்லாமே மர்மமாகத் தான் உள்ளது. அதற்குக் காரணம் இது அதி உச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பது தான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும், சட்டமா அதிபர் மொகான் பீரிஸும் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று நியூயோர்க்கை அடைந்த வரை இதுபற்றி வெளியே மூச்சுக் கூடவிடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா கூட அதை அறிந்திருக்கவில்லை என்கிறது ஒரு தகவல். அதனால் தான் அப்படியான சந்திப்புத் திட்டங்கள் ஏதும் கிடையாது என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் உச்ச இரகசியம் பேணப்பட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த விரும்பாமல் அவர் அப்படிக் கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன ஊடாகவே வழக்கமாக இலங்கை அரசுக்கான ஐ.நாவின் தகவல்கள் பரிமாறப்படும்.

ஆனால் இம்முறை நேரடியாகவே கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத் தொடர்பு கொண்டு, இலங்கை அரசுடன் பேச விரும்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதனால் தான் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் இரகசியமாக - நியூயோர்க் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நியூயோர்க் சென்றடைந்த பின்னர், சந்திப்புத் தொடர்பாக பாலித கொஹன்னவின் அலுவலகத்துக்கு ஐ.நாவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.

பாலித கொஹன்னவுடன் ஐ.நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.

எல்லாமே இரகசியமாகப் பேணப்பட்ட போதிலும் இன்னர் சிற்றி பிரஸ் அதை மோப்பம் பிடித்துக்கொண்டது.

நாளை சந்திப்பு நடக்கவுள்ளது' என்று அது கடந்த செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அதை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நிராகரித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்த போதும் மறுநாள் இன்னர் சிற்றி பிரஸ் சொன்னது போலவே சந்திப்பு நடந்தது. அந்த இரகசியச் சந்திப்பின் படங்களையும் இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாக வெளியிட அது பரகசியமானது.

ஆனாலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட உண்மையான விடயங்கள் பல வெளிவரவில்லை என்பதே உண்மை. ஏனென்றால் ஐ.நாவும் சரி, இலங்கை அரசும் சரி இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெளியிடுகின்ற செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகவே உள்ளன.

இன்னர் சிற்றி பிரஸ் படங்களுடன் சந்திப்பை அம்பலப்படுத்திய பின்னர், உடனடியாகவே இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

சட்டமா அதிபரும், வெளிவிவகாரச் செயலரும் சட்ட ஆலோசனைக்காக நியூயோர்க் சென்றிருந்தனர் என்றும் அப்போதே ஐ.நா பொதுச்செயலரை சந்தித்துப் பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஏதோ போன வழியில் அவரைக் கண்டு பேசியது போல அமைந்திருந்தது அந்த அறிக்கையின் சாரம். ஆனால் இந்தச் சந்திப்பு முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று.

இந்த விடயத்தில் ஐ.நா. பொதுச்செயலரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை அரசு தமது பிரதிநிதிகளை அனுப்பியதாக செய்தியை வெளியானால் அது தரக்குறைவாக அமைந்து விடும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அல்லது இந்தச் சந்திப்பின் உண்மைப் பரிமாணங்கள் வெளிவருவதைத் தடுக்க அது விரும்பியிருக்கலாம்.

அடுத்து இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் தெளிவாகக் கூறவில்லை. சட்டம் சார்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது போன்று மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளார் மார்ட்டின் நெவ்ஸ்கி, இலங்கையில் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பாகவே ஆராயப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இங்கேயும் இருதரப்பும் முரண்பாடானதும், குழப்பமானதுமான தகவல்களையே வெளியிட்டன.

அதேவேளை இப்போது கிடைக்கும் தகவல்கள், இந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் ஐ.நா நிபுணர்கள் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகக் கலந்துரையாடுவதே என்று கூறுகின்றன.

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. வேண்டுமானால் அவர்கள் வந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கலாம்- அதற்கு அப்பால் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது அரசாங்கம். இதன் காரணமாக இதுவரை அந்தக் குழு இலங்கை வரவில்லை.

ஆனால் ஐ.நா பொதுச்செயலரோ நிபுணர்குழு இலங்கை செல்லும், அதற்கு வழி பிறந்து விட்டது, அங்கு செல்வது பற்றி ஆராய்கிறது என்றெல்லாம் அவ்வப்போது கூறி வந்தார். ஆனாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்தக் கட்டத்தில் ஐ.நா நிபுணர்குழுவின் பணிக்காலம் முடிவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வாரம் அதன் அறிக்கை கையளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பகிரங்கப்படுத்துவாரா என்பது முக்கியமான கேள்வி.

அதேவேளை இந்த அறிக்கை ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 16வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தநிலையில் தான் ஐ.நா பொதுச்செயலர் இலங்கை அரச பிரதிநிதிகளைப் பேச்சுக்கு அழைத்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தை இராஜதந்திர வழிகளில் மிரட்டுவதற்காக அவர் இந்த அழைப்பை விடுத்தாரா அல்லது வேறேதாவது நோக்கங்கள் இருந்ததா என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் அரசாங்கம் அனுப்பிய குழு, நல்லிணக்க ஆணைக்குழு போற்றதக்க வகையில் செயற்படுவதாக ஐ.நா பொதுச்செயலரிடம் கூறியிருக்கிறது.

பான் கீ மூனை நம்ப வைக்கும் அளவுக்கு அது நடந்து கொண்டிருப்பதாகத் ஊடகச் செய்திகள் கசிகின்றன.

இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஐ.நா பொதுச்செயலர் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாரா அல்லது தாம் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு முக்கியம் அளிக்கப்போகிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசு தமக்குச் சார்பான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட முக்கியமான மூவர் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

அவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள பாலித கொஹன்னவும் ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின் உத்தரவாதத்தின் பேரில் சரணடைய முன்வந்த புலிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஐ.நா பொதுச்செயலரின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியாரும் இந்தச் சந்திப்பில் கூடவே இருந்துள்ளார்.

இவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைகள் நிரம்பிய மனிதர்கள் மத்தியில் ஐ.நா பொதுச்செயலர் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.

அதுவும் கூட சர்ச்சைகளும், சந்தேகங்களும் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது.

இந்தச் சந்திப்பு யாருக்கு ஆதாயம் தேடுவதற்காக நடத்தப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இலங்கை அரசுடன் முட்டி மோதி வந்த ஐ.நா பொதுச்செயலர்- தான் பணிந்து போவதற்காக இந்தச்சந்திப்பை நிகழ்த்தியிருக்கலாம். அல்லது இலங்கை அரசை மிரள வைக்கவும் அவர் இப்படியான சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

இப்போது இந்தச் சந்திப்புத் தொடர்பான பல இரகசியங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் அது விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

கே.சஞ்சயன்
நன்றி: தமிழ்மிரர்

Comments