"இது நம்மட புள்ள. அதாலதான் கூட்டிக்கொண்டு வந்தன். அந்தப்புள்ளய கவலப்படுத்த வேணாம்" அவரது வார்த்தைக்கும் ஒருதடவை தூக்கிப்பார்த்த தலைகளை தரையில் போட்டுக்கொண்டு படுத்துவிட்டார்கள். அவர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் யாதொரு வார்த்தையுமே இருக்கவில்லை, கொடுப்பதற்கு எதுவுமே இல்லாததைப்போலவே. பணம் இல்லை என்று சொல்லியிருந்தால் கொடுத்திருப்பேன். அது என்னிடமும் இருந்தது. ராசகிளி அண்ணன் சொன்னதுபோல பணத்தை தின்ன முடியாதே. அவர்களுடைய மன எரிச்சலில் கொஞ்சத்தை வெளியே கொட்ட உதவியிருக்கிறேன். அதுபோதும்.
அந்த கூட்டுக்குடும்பத்தின் சிறுவர்கள் நன்கைந்துபோர் கஞ்சி குவளைகளுடன் வந்து சேர்ந்தார்கள். அவர்களது முகங்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அது அவர்களது வயிறு நிறையப்போகிற மகிழ்ச்சி. நான் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருப்பதை அவதாணித்த ராசகிளி அண்ணனுக்கு வேதனையாக இருந்தது போலும்.
"பாரம்மா. பார். என்ர வயல்கள்ளயும் தோட்டத்திலயும் வேலை செய்தவர்களுக்கெல்லாம் வயிறுநிறைய சோறு போடுவனே. பாலும் மோரும் செம்புசெம்பாக குடுப்பனே. இப்ப என்ர பிள்ளைகள பாரன். மணிக்கணக்கா வேகாத வெய்யிலுக்க நிண்டு கஞ்சி வாங்கிக்கொண்டு வருகிதுகள். மோர் தயிர ஊருக்கே ஊத்தினவனம்மா நான். இண்டைக்கு உப்புக்கஞ்சிக்கே என்ர குஞ்சுகள் தெருவில நிக்கிதுகள். என்னம்மா வாழ்க்கையிது? இன்னும் எதுக்காக சாகாமல் இருக்கிறம் எண்டுதான் தெரியேல்ல" என்று குமுறினார். அவரது பிள்ளைகளோ என்னை பார்த்து புன்முறுவல் செய்தபடி கஞ்சியை பங்கிட்டு குடித்தார்கள். தவழ்ந்துசென்ற தம் குட்டித்தம்பிக்கு கஞ்சியிலிருந்த பருக்கைகளை எடுத்து ஊட்டிவிட்டார்கள்.
நான் விடைபெற்று வெளியே வந்தபோது ராசகிளி அண்ணணும் கூடவே வந்தார்.
"என்னம்மா அரிசி கொஞ்சம் கொண்டு வருவா தானே?" என்ற அவரது வார்த்தைகளில் கெஞ்சல். அரிசியும் நெல்லும் மூடை மூடையாக கொட்டிக்கிடக்கும் அவரது வீட்டின் விறாந்தை நினைவுக்கு வர எனக்கு பெருமூச்சுத்தான் கிளம்பியது.
"முயற்சிக்கிறன் அண்ணா. நானும் இனித்தான் தேடிப்பாக்கணும்" என்று விடைபெற்றேன். நானும்தான் அரிசிக்கு எங்கே போவேன்? யாரிடம் கேட்கமுடியும்? போராளிகளுக்கு என்று வரும் குருநெல் அரிசிச்சோற்றில் நூறு நெல்லும் அரைவாசி கல்லும் வரும்.
ஒரு பானையை அடுப்பில் ஏற்றிவிட்டே பத்துத்தடவை பாதுகாப்பு அகழிக்குள் பாய்ந்து பாய்ந்துதான் பானையை இறக்கவேண்டிய சூழலில் கல்லில்லாமல் சோறு கிடைக்குமா? காலை உணவுக்காக எங்களுக்கு வரும் கஞ்சியைவிட கொட்டில்களில் மக்களுக்காக கொடுக்கப்படும் கஞ்சி சுவையானது. அங்கு ஒரு பானைக்கு ஒருபை அங்கர் மா போடுவார்களாம்.
சிறுவர்களைபோல தாமும் வரிசையில் நின்று கஞ்சிவாங்க ராசகிளி அண்ணனைப்போன்ற பெரியவர்களுக்கு மனசு இடம் கொடுக்கவில்லை.
ராசகிளி அண்ணனின் குரலும் வேதனையும் குழந்தைகளும் குடும்பமும் என்மீது சுமையென அழுத்தின. நானும் காப்பகழி காப்பகழியாகச்சென்று சனங்களின் வெப்பியாரங்களை என்மீது கொட்டிக்கொள்ளும் கடமையைத்தான் செய்தேன். ஒவ்வொரு காப்பரணோடும்சென்று குந்திக்கொண்டு அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்டேன்.
எத்தனை விதமான துயரம் அவர்களுக்கு. சடீர் படீர் என காற்றை கிழித்துவரும் துப்பாக்கிச் சன்னங்களிலிருந்து உயிர் தப்புவது எவரினதும் கெட்டித்தனத்தினால் அல்ல.
அப்போதெல்லாம் சாவது ஒரு அதிஸ்ரம்போலத்தான். வாழ்வதை துரதிஸ்ரம் என்று எல்லோரும் கதைத்துக்கொண்டார்கள். விரக்தியும் வேதனையுமாக போய்க்கொண்டிருந்த என் கண்களில் நீண்ட வரிசை ஒன்று தென்பட்டது. வீதிக்கு வீதி கஞ்சிக்கொட்டில்கள் இருப்பதால் அது கஞ்சிக்காக நிற்கும் வரிசையாக இருக்கலாம். என்று நினைத்தேன்.
சிலவேளை அரிசி விற்கவும் கூடுமே என்றது என்மனம். சே சே இருக்காது. அரிசியையெல்லாம் எவரும் இப்படிப்போட்டு விற்கமாட்டார்கள். விற்கக்கூடிய அளவு இருந்தாலும் இரகசியமாகத்தான் விற்பார்கள். அப்படி யாரேனும் விற்கிறார்கள் என்றால் நான்கூட அரிசிவாங்கி ராசகிளி அண்ணனுக்கு கொடுக்கமுடியும என்று யோசித்துக்கொண்டே வரிசையை நெருங்கினேன். திடீரென வரிசை அமளிதுமளிப்பட்டது. சிறுவன் ஒருவன் குளறிக்கொண்டு துள்ளினான்.
"என்னடா என்னடா" என்று பெண்ணொருத்தி பதறினாள். கதறிய பையனின் உடலிலிருந்து குருதி வழிந்தது. சனங்கள் விலகி ஓடத்தொடங்கினார்கள்.
"ஐயோ என்ர பிள்ளைக்கு காயம். என்ர பிள்ளைக்கு காயம்" என்று கதறத்தொடங்கிய பெண்ணை விலக்கிவிட்டு, யாரோ ஒருவர் சிறுவனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடினார். நடு வீதியில் நின்று கதறும் சிறுவனும் பதறும் தாயும் அன்று முழுவதும் என் இதயத்தை வாட்டினார்கள். அந்த ஒருவன் மட்டும்தான் அந்தத் தாயிடமிருந்த செல்வமாகவும் இருக்கலாம். பத்துவயது மதிக்கத்தக்க சின்னஞ்சிறுவன் எப்படி அந்தப்பெரிய வலியை தாங்கப்போகிறான். இப்போதெல்லாம் வெடிக்கின்ற எறிகணைகளும் பாய்கின்ற சன்னங்களும் காய எரிவாலேயே அரை உயிரை பறித்துவிடக்கூடியன. அப்படிப்பட்ட வேதனைக்கு அளவு கணக்கில்லை என்றானது.
திடுமென பலபத்து எறிகணைகள் வீழ்ந்துவெடித்தன. நடக்கக்கூட இடமற்ற வீதியில் மக்கள் முட்டி மோதிக்கொண்டு நகர்ந்தார்கள். அடுத்தசில நிமிடங்களில் வழிவிடு வழிவிடு என்று அலறிக்கொண்டுவரும் வாகன வரிசையின் உறுமல்.
எல்லா வாகனங்களிலும் கதறலும் கண்ணீரும் குருதியும். விலக வழியின்றி தடுமாறும் சனங்களை வாகனத்தில் துணியை பிடித்துக்கொண்டு நின்ற மனிதர் அசிங்கமாய் திட்டினார். சனக்கூட்டத்தை பிரித்துக்கொண்டு செல்லும் அத்தனை வாகனங்களும் கப்பலடிக்குத்தான் செல்கின்றன. ஆனால் அத்தனை காயக்காரரும் காப்பாற்றப்படுவார்களா?
கப்பலில் ஏற்றப்படுவார்களா? அதுவெல்லாம் கேள்விதான். இனிமேல் கப்பலும் வராதாம் என்று கதைத்தார்கள். மனிதர்களினதும் வாகனங்களினதும் கதறல் ஒலியே என் மனதை ஆக்கிரமித்தது. கனக்கும் தலையை ஆட்டிக்கொண்டு மீண்டுவர முயற்சித்தேன். கடந்தசில மாதங்களாய் உறக்கத்தில்கூட காதுக்குள் கேட்பது இந்த அவல ஒலிகளைத்தானே. இப்படித்தானே எல்லோருக்கும் வலிக்கும் என்று நினைத்தபோது, மனம் பாரமெனக்கனத்தது.
என் உறவினர்கள் இருந்த காப்பரணுக்குள் சென்றேன். பிறந்த இரண்டே மாதங்களில் தாயை இழந்த குழந்தையை காப்பரணுக்குள் சென்று பார்த்தேன். அவர்கள் தமக்கெனச்சமைத்த மதிய உணவில் எனக்கும் பங்கிட்டுத் தந்தார்கள். அமைதியாகச் சாப்பிட்டேன். நினைவில் ராசகிளி அண்ணன் வந்து அரிசி கேட்டுக்கொண்டு நின்றார். உண்ணும் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்குவதே கடினம்போலத் தெரிந்தது.
தொடர்ந்த நாட்கள் முன்பைவிட கோரமாய் பயமுறுத்தின. சேலைகளை வெட்டித்தைத்து மண்ணரண் அமைப்பது கூட சாத்தியமற்றுப்போனது. எவர் கையிலும் எதுவும் இருக்கவில்லை. உடுத்த உடையோடு புறப்பட்டு விட்டார்கள். சிலர் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் தூக்கிக்கொண்டார்கள். எல்லோருமே வெள்ளை முள்ளிவாய்க்காலை நோக்கி நடையை கட்டினார்கள். பத்தே மீற்றர் தூரத்தை கடப்பதற்கு பதினைந்து நிமிடங்களை செலவழிக்கவேண்டி இருந்தது. இடையிடையே எறிகணைகள்வேறு விழுந்து கூட்டத்தை தள்ளிவிழுத்தின.
தன் பிள்ளையின் தலைதான் காலில் இடறுகிறது என்றாலும் நின்றுபார்க்க அவகாசமற்றவர்கள் பதறியோடினார்கள். எறிகணை ஏவப்படும் சத்தம் கேட்டதும் எல்லோரும் தரையோடுதான் விழுந்தார்கள். விழுந்துகிடப்பது மட்டுமே ஓரளவு பாதுகாப்பானது. நின்றால் சன்னம் துளைக்கும், நடந்தால் உயிர் பறக்கும் என்ற நிலை.
மனிதர்கள் பைத்தியகாரர்களைப்போல நடந்துகொண்டார்கள். எந்தப் பிணத்தையும் எவரும் உரிமை கோரவில்லை. நெருப்பும் புகையும் வானத்தை தொடுமளவுக்கு கிளம்பின. சனம் ஓட்டமும் நடையுமாக வட்டுவாகலை நோக்கி சென்றனர்.
கடைசியாய் கையிலிருந்த எல்லாவற்றையும் இழந்த சிலர் நந்திக்கடலுக்குள்ளால் விழுந்தடித்துக்கொண்டு படையினரிடம் சரணடைந்தார்கள். அதைத்தவிர அவர்களுக்கும் வேறெந்த வழியும் இருக்கவில்லை. ஒரே ஒரு பாதையாய் இருந்த வட்டுவாகல் வீதியில் சுமார் இரண்டு இரண்டரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் நின்ற இலட்சக்கணக்கான மக்கள் கூட்டம் திமிலோகப்பட்டது. மனிதவெள்ளம் அலைமோதிய, அப்பகுதியில் ஆங்காங்கே மனித பிணங்களும் செத்த நாய்களும் புளுத்து நாறின.
கட்டக்கடைசிநாள் இதுதான் என்றெண்ணிய சனங்களில் சிலர் தம் இருப்பில் மேலதிகமாக இருந்த பொருட்களை விற்கத்தொடங்கினர். சீனி, அரிசி, மா, பேணிமீன், செத்தல் மிளகாய், சவர்க்காரம் போன்றவற்றை கண்குளிர கண்குளிர காணமுடிந்தது. மக்கள் அனைவருமே போரின் நிலையைப்பற்றி புரிந்து கொண்டார்கள். எனினும் பலராலும் நம்பமுடியவில்லை.
நானும் பதுங்குகுழிக்குள் நின்றபடி பலமாக யோசித்தேன். என்ன செய்வதென்றே புரியவில்லை. அடுத்தடுத்த பதுங்குகுழிகளில் இருந்தவர்களை பெயர்சொல்லி அழைத்து சொன்னேன்:
"நீங்க சனத்தோட சனமா போங்க. எங்களை பாத்தவுடன அடையாளம் தெரியும். நாங்க குப்பி கடிக்கிறதத்தவிர வேற வழியில்ல. இனி எதைப்பற்றியும் யோசிக்க வேணாம்" என்று சொல்லி அனுப்பியும் விட்டேன்.
அங்கமிழந்தவர்கள் மட்டுமே பதுங்குகுழிகளில் நின்றோம். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக என் கழுத்தில் தொங்கிய சயனைட் வில்லைக்கு இனித்தான் கடமை வரப்போகிறது என்று எண்ணியபடி என் குப்பியை பிடித்து முத்தமிட்டேன். என்னைப்போலவே என்னுடன் நின்றவர்களும் உணர்கிறார்கள் என்பதை அவர்களும் குப்பியை தடவிக்கொள்வதை வைத்து புரிந்துகொண்டேன்.
பொழுது புலரத்தொடங்க அயலில் இருந்த போராளிகள் பலரும்சாதாரண உடைக்கு மாறினார்கள். சிலர் போகிறோமென சொல்லிவிட்டு போனார்கள். சிலர் சொல்லாமலேயே போனார்கள். சிந்திக்க ஏதுமற்றதுபோன்ற மன வெறுமையுடன் நின்றுகொண்டிருந்த எனக்கருகில் கால்களை இழந்த இருவர் நின்றனர். அந்த பனங்கூடலுக்குள்ளால் மக்களும் போராளிகளும் எங்களை கடந்து போய்க்கொண்டே இருந்தார்கள்.
காப்பகழிக்குள்ளேயே நின்ற எங்களிடம் சிலர் தம் பிள்ளைகளை விசாரித்தார்கள். "பிள்ள, சோதியா படையணிப்பிள்ளைகள் எதிலயம்மா இருக்கினம்?" என்றார் ஒரு தாயார்.
"மாலதி படையணி மெடிசின் எவடத்திலயம்மா இருக்கு?" என்றார் இன்னொரு தாயார்.
"பிள்ளையள் இந்தப்படத்தில இருக்கிற பிள்ளைய தெரியுமா அம்மா? இவ என்ர மகள்தான். எல்லாரையும் போகச்சொல்லியாச்சு தானேம்மா. என்ர பிள்ள எங்க நிக்கிறாவெண்டு தெரிஞ்சால் சொல்லுங்கம்மா" என்று மன்றாடினார் ஒரு தந்தை.
"அக்காக்கள், என்ர தங்கச்சிய கண்டனிங்களா அக்காக்கள்? இந்தப்படத்த பாத்து சொல்லுங்க அக்காக்கள்" என்று கெஞ்சினான் ஒரு அண்ணன்.
"எல்லாமே முடிஞ்சிது. நீங்க ஏனம்மா நிக்கிறிங்க? எங்களோட வாங்க" என்றார்கள் மக்கள்.
பெற்றோர்களும் சகோதரர்களும் தங்கள் பிள்ளைகளையும் உடன் பிறந்தவர்களையும் தேடி அலைந்தார்கள். தம் பிள்ளைகளை கண்டுவிட்டால் அவர்களின் கைகளைபிடித்து இழுத்துச்சென்று சட்டைகளை மாற்றச்சொல்லி கெஞ்சினார்கள்.
ஆண்டுக்கணக்காய் அழகு பார்த்துக்கட்டிய மிடுக்கான தலைப்பின்னலை பிரித்து கட்டும்போது பிள்ளைகள் அழுதார்கள். அவர்களது விம்மலில் வேதனை தெரிந்தது. தலைமுடி வெட்டப்பட்ட பிள்ளைககளின் தலைகளில் அம்மாக்கள் அச்சத்துடன் துணிகளை போர்த்தினார்கள். பிள்ளைகளை தேடியும்கிடைக்காத பெற்றோர்கள் சிலர் அழுதுகொண்டே தேடியலைந்தனர்.
தந்தையொருவரின் குரல் அப்பகுதியை முழுதாக நிறைத்து சிறிய பனங்கூடலை அதிரச்செய்தது.
"அம்மாச்சி…. என்ர செல்லம். நீ எங்கயம்மா இருக்கிறாய்? அப்பா தேடுறனம்மா. ஓடி வாம்மா அப்பாட்ட…… ஓடிவந்திரு என்ர மகளே" என்ர கேவலுடன் ஒவ்வொரு பதுங்குகுழிகளாய் பார்த்தார். அந்த வயோதிப தந்தை காப்பகழிக்குள் நின்ற எங்களுக்குள் தன் மகள் இல்லை என்ற ஏமாற்றத்துடன் திரும்பியபோது அவரது முகத்தில் நான்கண்ட வேதனையை இங்கு வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.
அவரது சொல்லும் செயலும் எனது மனதை ரம்பமாய் அறுத்தன. இப்படி எத்தனை அப்பாக்களும் அம்மாக்களும் அண்ணன்மாரும் தேடி அலைகிறார்கள். இத்தனை குண்டு சிதறல்களுக்குள்ளும் தமது பாதுகாப்பைப்பற்றி சிந்திக்காமல் தேடியலையும் பாசத்தின் வலியை ஆழமாக உணர்ந்தேன்.
தொடரும் …………….
Comments