யுத்தக் குற்றங்களும், இனப்படுகொலைகளும் மூடி மறைக்கப்படுகிறதா?

பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மிகத் தெளிவாக, பல விடயங்கள் எமது அறிவுக்குத் தெரிகிறது. தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்கிற விடயத்தை நிரூபிப்பதற்கு, சிங்களம் பல முயற்சிகளை மேற்கொண்டது.

சூரன் போரில், தலையைத் திருப்புவது போன்று, முதலில் ஒரு நாடகத்தை பேரினவாதம் அரங்கேற்றியது.

சிங்களவர்களே அதை நம்பமறுத்தார்கள். பின்னர் நந்திக் கடலோரத்தில், பிரபாகரன் அவர்களின் உடலைக் கண்டு எடுத்தோமெனக் கூறும்போது, அதனையும் நம்பமறுப்பார்கள் என்பதற்காக, கருணாவையும் தயா மாஸ்டரையும் சாட்சிக்கு அழைத்தது சிங்களம்.

சாட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஓணான்கள், வேலிக்கு சாட்சியாக இருப்பார்கள் என்பது எமது சிற்றறிவிற்கு தெளிவாகத் தெரியும்.காலநேரம் கரைந்துசெல்ல, திறந்திருந்த விழிகள், பாதியாக மூடத்தொடங்கியது. சவரம் செய்யப்பட்ட முகத்தில் வெண்ணிற மயிர்கள் முளைக்கத் தொடங்கின.

10 நாள் மரபணுப்பரிசோதனை ஒரே நாளில் முடிக்கப்பட்டு, எரிக்கப்பட்ட உடலத்தின் சாம்பல், கடலிலும் கரைக்கப்பட்டது.

உடலம் புதைக்கப்படவில்லை, எரிக்கப்பட்டது என்கிற விவகாரம், மீண்டும் தோண்டி எடுத்து பிண அரசியலை முன்னெடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தால், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது போல் தெரிகிறது.

தமது இன அழிப்புப் போரின் முழுமையான வெற்றியைப் பிரகடனம் செய்யவேண்டுமாயின், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லையயன்பதை தெளிவு படுத்து வேண்டிய தேவை சிங்களத்திற்கு உண்டு.

தேசியத் தலைவர் இறந்த செய்தியை 53வது படையணித் தளபதி, சரத் பொன் சேக்காவிடம் தெரிவித்தபோது, அதனை உறுதி செய்யுமாறு கூறியதாக கொழும்புச் செய்திகள் வெளிப்படுத்தின.

ஆனாலும் இராணுவத் தளபதியோ அல்லது கோத்தபாய இராஜபக்சவோ அந்த உடலத்தைச் சென்று பார்க்க அக்கறை கொள்ளவில்லை.

19ஆம் திகதி பேசிய மனிதர், 17 ஆம் திகதி இறந்ததாக புதியகதையயான்றும் உலா வந்தது. அவர் இறந்துவிட்டாரென்று, வன்னியிலிருந்து யார் தகவல் கூறியது என்கிற விடயம் இன்னமும் எமது அறிவுக்குத் தெளிவாகவில்லை.

சற்றலைட் தொலைபேசியில் உரையாடியவர், தனது தொடர்பினை துண்டித்துக்கொண்டால், அவர் இறந்துவிட்டதாக ஏற்றுக்கொள்ளும் யதார்த்தத் தெளிவு, சிலருக்கு ஏற்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற ஆனந்தபுர பெரும் சமரில், வெடிகுண்டுகளை நெஞ்சில் கட்டி களமாடிய தேசியத் தலைவர், முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறுகையில், எதிரிகளிடம் அகப்படக்கூடிய வாய்ப்புக்களையும் அனுமானித்திருப்பார்.

பக்கத்திலிருந்து பார்த்தவர் போன்று, கட்டிய வெடி குண்டுகளை, பொட்டம்மான் அகற்றிவிட்டாரென புதிய விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

சமரின் இறுதி நாட்களில், களத்தில் நின்ற பலர், முகாம்களுக்குள்ளும், சிலர் வெளியிலும் இருக்கின்றார்கள்.

அவர்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், மே 13 ஆம் திகதிக்கு முன்பாகவே தேசியத் தலைவர் முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டாரெனத் தெரிகிறது.

அவர் அங்கிருந்தும் பேசலாம். பொதுவாகவே, அவர் சற்றலைட் தொலைபேசி ஊடாக பேசுவதில்லையயன்று உடனிருந்த பலர் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

முகாமில் இருக்கும் மக்களுடன் வெளியுலகத் தொடர்பு ஏற்பட அனுமதித்தால், பல திடுக்கிடும் உண்மைகள் கசியலாமென்பதால், எவரையும் உள்நுழைய விடாமல் தடுக்க முனைகிறது சிங்களம்.

ஆனாலும் அதனையும் மீறி, இறுதி நாட்களில், பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு கோரத்தாண்டவம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

வீழ்ந்து கிடந்த உடலங்களை ஏறி மிதித்து, வெளியே தப்பி ஓடி வந்த கொடூரச் சம்பவங்களை, 18ஆம் திகதியன்று முற்றுகைக்குள் இருந்து வந்த மக்கள் தெரிவித்தார்கள்.

சிங்களப்படைகள் மீது ஏராளமான கரும்புலித்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு, குறுகிய நிலப்பரப்பெங்கும் புகை மண்டலங்களால் நிரம்பி வழிந்தது.
இதேபோன்று நந்திக் கடல் ஊடறுப்புச் சமரில், மேற்குக்கரையோரம் கடற்கரும்புலிகளால் கைப்பற்றப்பட்டதோடு, முற்றுகையை உடைத்து வெளியேறிய முதல் அணியினர் ஒட்டிசுட்டான் காட்டுப் பிரதேசத்தை நோக்கித் தப்பிச் சென்றதாக, கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்சின் இராணுவ ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இந்த முற்றுகையிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள், இன்னமும் மர்மமாகவே இருக்கிறது.
33 வருடகால தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மூன்று நாட்களில் முடிந்து விட்டதென சிங்களமும், இந்திய புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொள்ளும் பரப்புரைகளில், பல அரசியல் சூத்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.

தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் வரலாற்றுத் துரோகிகள் என்று நம்மில் சிலர் அவசர அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

வருடந்தோறும், விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழ் மக்கள்.

பிரிகேடியர் தமிழ் செல்வனும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும், பல அரசியல் வரலாற்றுத் தவறுகளைப் புரிந்ததாகவும் இவர்கள் நிறுவ முற்படுகிறார்கள்.

பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு, தாயகம் திரும்பிய தமிழ்ச்செல்வன், உலகநாடுகளின் உண்மையான நிலைப்பாட்டினை, தலைவருக்குத் தெளிவுபடுத்தாமல் தவிர்த்து விட்டாரென்னும், புதியதொரு குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை மூலம், ஒரு மண்ணும் நடைபெறாதென, தலைவருக்கு மட்டுமல்ல முழுத் தமிழினத்திற்கே தெரியும்.

சர்வதேச அளவில், எமது போராட்ட நியாயப்பாட்டினைக் கொண்டு செல்லும் தளமாகவே, இப்பேச்சுவார்த்தை மேடை பயன்படுத்தப்பட்டது.

திம்புவில் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத சிங்களம், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் பரிசீலனைக்காக மேசையில் போடப்பட்ட, உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாதென்பதை தேசியத் தலைவர் புரிந்துகொள்வார்.

ஏதோ, இப்பூவுலகின் புதிய ஒழுங்கினைப் புரியாமல், பிரபாகரன் போராட்டம் நடாத்தினார் என்பது போன்று சித்தரிக்க முனைபவர்கள், இனி என்னசெய்யலாம் என்பதைக் கூறவேண்டும்.

பூகோள அரசியலானது, உலகப் பொருளாதாரச் சீரழிவோடு புதியதொரு ஒழுங்கினை நோக்கிக் காலடி வைக்கிறது. அதில் சீனாவின் வகிபாகம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

ஆயுதப் போராட்ட, இன அழிப்புச் சூத்திரதாரிகளின் பங்கு, தென்னாசியாவில் எவ்வகையில் பிரயோகிக்கப் படுகிறதென்பதை, விடுதலைப்புலிகள் புரிந்து கொள்ளவில்லையயன்று எண்ணுவதும் தவறான பார்வையாகும்.

ஆனாலும் இவர்கள் நிறுவ முற்படும் 3ஆம் கட்ட ஈழப்போராட்டத்தில், இந்திய வகிபாகம் தவிர்க்கப்படமுடியாத சக்தியாக இருக்கப் போகிறதென்று இனி இவர்கள் கூறப் போகிறார்கள்.

கொழும்பு, தமிழ்நாடு, புதுடெல்லி என்கிற அச்சினுள், மறுபடியும் எமது ஈழப்போராட்டத்தை இழுத்துச் செல்லும் காய்நகர்த்தல்களின், பங்குதாரர்களாக இவர்கள் மாறுவார்கள்.

தலைவர் இல்லையயன்பதை அழுத்திக் கூறுவதன் ஊடாகவே, இத்தகைய இந்திய உள்நுழைவு சாத்தியமாகுமென்பது இந்த அறிவியலாளர்களின் கணிப்பு.

மகிந்த இராஜபக்ச, என்ன முடிவெடுத்தாலும், அதனை இந்தியா உறுதியாக ஆதரிக்குமென்று சிவசங்கர் மேனன் தெரிவிக்கும் கருத்தினை உன்னிப்பாக அவதானித்தால், இந்தியா இல்லாமல் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாதென அடம்பிடிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களின் உள்நோக்க நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொள்ளலாம்.

இனப்படுகொலை, யுத்தக்குற்றம் போன்றவற்றிலிருந்து தப்பிச் செல்லும்வரைதான், இந்தியாவின் உதவி மகிந்தருக்குத் தேவை.

அதற்கு முன்பாக, சிறீலங்காவைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வகையில், இந்திய - சிறீலங்கா பாதுகாப்பு ஒப்பந்தமொன்றினை உரு
வாக்க, மேனன் முயற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, இந்தியா உறுதுணையாக நிற்கும் என்கிற கற்பனை அரசியலில் காலத்தை கடத்தாமல், சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளை அம்பலமாக்கும் செயற்பாடுகளில், புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.

- இருக்கிறாரா? இல்லையா?- என்கிற உளவியல் அறிக்கைப் போர்களில் காலத்தைச் செலவிட்டால், சிங்களம் செய்த இனப்படுகொலைகளும், செய்து கொண்டிருக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் மூடி மறைக்கப்படும். இரத்தக்கறை படிந்த கைகளோடு, புதிய புத்தர்களும் உருவாகிவிடுவார்கள்.

பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, 3ஆம் கட்ட ஈழப் போராட்டத்தில் நாம் இணைந்து கொள்வோமென அடம் பிடிப்பவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

மக்களைத் துரோகிகளாகச் சித்தரிப்பவர்கள், மக்களிடமிருந்து அந்நியமாகிச் சென்ற வரலாறுகளை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களால் உருவாக்கப்படும் தலைவர்கள் அழிவதில்லை, சராசரி மானிட வயதெல்லை, 100 ஐயும் தாண்டி, அவர்கள் மக்கள் மனங்களில் நீடித்து நிலைப்பார்கள்.ஆகவே, புதிய தலைமுறை மாணவ, இளைஞர்கள், இதுவரை முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து நடாத்தவேண்டும். 2008ஆம் ஆண்டு மாவீரர்தினச் செய்தியும் அதுதான்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Comments