கொழும்புக்கு பின் கதவு வழியாக சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...

அன்புடன்,

புலத்தின் புத்திசீவிகள் என்ற நினைப்பில் கொழும்புக்கு பின் கதவு வழியாக போய் வருபவர்களுக்கு.! (இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கும்தான்)!!

நாங்களெல்லாம் நலம்விசாரிக்கும் இடத்தில் இப்போது நீங்கள் எல்லோரும் இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் எழுதவேண்டிய தேவை. அதனால் இதை எழுதுகிறோம்.

ஏதோ உங்களுக்கு லங்காமாதாவின் அபிவிருத்திபற்றி சிந்தித்து மிச்சமாக இருக்கும் நேரத்தில்தன்னும் இதை படியுங்கள்.

சரி!

போனவருடத்தின் அவலப்பொழுதுகளில் உங்களில் சிலர் எங்களுடன் தெருக்களில் நின்றீர்கள். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் உங்களில் சிலர்தோன்றி எமது மக்களை கூவி அழைத்தீர்கள்.

எல்லாம் முடிந்துவிடப்போகின்தென அவசரமாக அழைத்தீர்கள்.

உங்கள் அறைகூவலை ஏற்று மக்களும் லட்சமாக ஆயிரமாக கூடினார்கள். அப்போதே ஒன்று நெருடியது நெஞ்சுக்குள்.

உங்கள் அழைப்பை ஏற்று ஒன்றுதிரண்ட மக்கள் எழுச்சியடைந்து தெருக்களில் இறங்கியபோது நீங்கள் திகைத்ததும், அதை தடுக்க ராஜதந்திரம்.. அது.. இது என ஏதேதோசொல்லி நின்றதும்,

தேசியக்கொடியை இங்கு நாம் உயர்த்திப்பிடிப்பதால்தான் அங்கு வட்டக்கச்சியில் எரிகுண்டு சிங்களம் வீசுகிறது என புதுப்புது சமன்பாடுகளை சொல்லி எல்லாவற்றுக்கும் கொடியும் கொடியில் இருக்கும் துப்பாக்கியும்தான் காரணம் என்றும் நீங்கள் அறிவுசீவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்ன போதும் ஏதோ நெஞ்சுக்குள் நெருடிய போதும் இனம் எரிகின்ற போதில் எதற்காக முரண்பாடு என விட்டுவிட்டோம்.

பின்னர் அதை மறந்தும்தான் போய்விட்டோம்.

ஆனால் சிலநாட்களுக்கு முன்னர் நீங்கள் கொழும்பில் கோத்தபாயாவையும் சிங்கள தளபதிகளையும், கே.பியையும் சந்தித்த செய்தி உறுதியாக வந்தபோதில்தான் உங்களின் ஈனத்தனமான கோரமுகம் கொஞ்சம் உறைத்தது.

சிங்கள பேரினவாதத்தின் அறுபத்தி இரண்டு வருட வரலாற்றை எப்படிஇலகுவாக மறந்து ரத்தம் சிந்தும் கத்தி வைத்திருக்கும் சிங்கத்துடன் கூடிக்குலவுகின்றீர்களோ புரியவில்லை.

கே.பி யை விடுங்கள். அவர் சிங்கள தேசத்தின் ராணுவ தளபதிபோல மாறி எத்தனையோ காலம் ஆகிவிட்டது. அவர் கடந்த காலங்களில் தாய்லாந்திலும், சுவிசிலும், நோர்வேயிலும், கனடாவிலும் இருந்துகொண்டு செய்த காட்டிக்கொடுப்புகளை இப்போது கொழும்பில் இருந்து செய்கிறார்.

அது ஒன்றுதான் இப்போதைய வித்தியாசம். அவர் அழைத்தார். நாங்கள் சென்றோம் என்பதெல்லாம் சொல்வதற்கு எதுகை மோனையாக இருந்தாலும் அதற்குள் திரண்டிருக்கும் அசிங்கமும் கேவலமும் உங்களுக்கு தெரியவில்லையா?

புலத்தின் தெருக்களில் நடந்த ஊர்வலங்களில் இனப்படுகொலைப் படங்களை தாங்கி நின்றதற்காகவே இங்கிருந்து அங்கு செல்லும் தமிழர்கள் கைதுசெய்யப்படும் நிலையில் தினமும் தொலைக்காட்சிகளிலும், ஊர்வலங்களிலும் முன்னுக்கு முகத்தை காட்டிய உங்களை எப்படித்தான் சிங்களம் ராசமரியாதையுடன் கும்பவரவேற்பு தந்ததோ தெரியவில்லை.

நீங்கள் மாறினீர்களோ உங்களை கே.பி மாற்றினாரோ அதுஎல்லாம் இப்போதைக்கு தேவையில்லை. நீங்கள் மாறினால் மாறிவிட்டு போங்கள். எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் காணப்படும் துரோகிகளின் முகங்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டவையல்ல.

துரொகத்தனங்களை பார்ப்பது இதுதான் எமது விடுதலைப் போராட்டத்துக்கு முதன் முறையும் அல்ல. எனவே நீங்கள் மாறியதற்கு காரணம் அபிவிருத்தி, புனர்வாழ்வு என புலுடாக்களை விடுவதுதான் கேவலமாக இருக்கிறது.

தினமும் தமிழீழத்தின் பாழடைந்த கிணறுகளுக்குள்ளும், ஓடைகளுக்குள்ளும், மலக்கிடங்குகளுக்குள் இருந்தும் எடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் சடலங்கள் உங்களுக்கு சொல்லும் சேதி என்ன?

ராஜபக்சகளும் மகாநாயக்க தேரர்களும் ஈழத்தமிழர்களை மனிதர்களாக நினைக்கவும் நடத்தவும் ஆரம்பித்துவிட்டார்களா என்ன?

2009 மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் தமது கோரப்பற்கள் திடீரென மறைந்துவிட்டன என்று காட்டுவதற்காகவும், தமிழர்களின் தேசிய எழுச்சி மீண்டும் எழுவதை தடுப்பதற்காகவுமே உங்களை சிங்களம்பாவிக்கின்றது என்பதை புரிந்துகொள்ளும் சிறு அறிவுகூட உங்களுக்கு இல்லாதுவிட்டால் என்ன புத்திஜீவிகள் நீங்கள்.

கொழும்பில் வர்த்தகம் ஆரம்பிக்கவும் கசூரினா கடற்கரையில் உல்லாசவிடுதி கட்டவும், கொழும்புக்கும் திருமலைக்கும் பயணவழிகளை செப்பனிடவும் உங்களுக்கு வர்த்தக நோக்கம் ஏதம் இருந்தால் போய் கோத்தபாயாவுடனும், ஜெகத் யெயசூரியாவுடனும் போய் கூழைக்கும்பிடு போடுங்குள். அதற்கு சப்பைக்காரணங்களை அடுக்குவதற்காக எமக்கு அபிவிருத்தி அருச்சுவடிப் பாடங்களை எடுக்க முயலவேண்டாம்.

அது சரி, வெள்ளத்து என்றும் வேறு வேறு காரணங்களுக்காகவும் இங்கு எமது மக்களிடம் சேர்த்த நிதிகளை கொண்டுபோய் கே.பியுடன் இணைந்து சிங்களத்து ஓநாய்களுக்கு தாரைவார்க்க போகிறீர்களாம். நீங்கள் வழங்கும் இந்த நிதியைக்கொண்டே அவன் இன்னும் பலநூறு சிங்கள கிராமங்களை கிழக்கில் உருவாக்கி எமது பாரம்பரிய நிலத்தை பறிப்பதற்காகவும், எமது மண்ணின் வீரர்களின் நினைவுத் துயில் இல்லங்களை உடைத்தெறிந்து அவற்றின் மீது பேரினவாதம் எங்களை ஆளும் குறியீடுகளான சிங்கள ராணுவத்தின் சின்னங்களையும் நிறுவுவதற்காகவும், ஒட்டுக்குழுக்களுக்கு ஊட்டம் அளித்து தேசிய எழுச்சியை மீள எழவிடாமல் செய்வதற்குமே பயன்படுத்துவான் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அல்லது தெரிந்துகொண்டும் ராஜதந்திர கோமாளி ஆட்டம் ஆடுகிறீர்களா?

தங்களையும், தங்களது இளமை வாழ்வையும், உயிரையும் அர்ப்பணித்து தாயக விடுதலைக்காக போராடி உயிர்நீத்த பல்ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகளை சிங்கள வெறியர்கள் வெறுமனே உடைத்து எறிந்தார்கள். ஆனால் நீங்களோ மாவீரர்களின் ஆன்மாவையே சுக்குநீறாக உடைத்துவிட்டீர்கள்.

அல்லலுறும் எமது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற புனித நோக்கம் இருந்தால் அரசுசாரா நிறுவனங்கள் ஏதாவது ஒன்றின் மூலம் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

வாருங்கள். ஒன்றாக இருந்துகதைப்போம். எப்படியாக அரசுசாரா அமைப்புகளுக்கு ஊடாக உதவிகளை சென்றடையவைக்கலாம் என்ற நுட்பங்களை அறியலாம்.

அதைவிடுத்து கொழும்பின் குளிர்சாதன அறைகளுக்குள்ளும், விசம்புவ விடுதிக்குள்ளும் கட்டித்தழுவல்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும் ஏதும் செய்யமுடியாது.

அவை உங்களை இந்த இனம் எதிரிகளைப்போல பார்க்கும் நிலையையே எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.

எனவே இன்றே கைவிடுங்கள்.

கே.பி உடனான தொடர்புகளை.

கே.பி யை எதிர்காலம் எப்படிக்கணக்கில் எடுத்து தூற்றும் என்று பாருங்கள்.

நீங்களும் அந்த பாவப்பட்ட மக்களின் சாபங்களுக்கு ஆளாகாமல் இருக்கவேண்டுமானால் இன்றே கொழும்புடனான அபிவிருத்தி ஆலோசனைகளை கைவிடுங்கள்.

முடிந்தால் துண்டியுங்கள்.

விடுதலையான போராளிகளுக்கும், விடுதலையாகமல் இருக்கும் போராளிகளுக்கும், வாழ்விழந்த மக்களுக்கும் உதவ ஆயிரம் கதவுகள் திறந்து இருக்கின்றன.

அதற்குள்ளாக முயல்வோம். எங்கள் இனத்தை முற்றாக அழித்து சிதைக்க நினைப்பவர்களுடன் இணைந்து எதுவும் செய்யமுடியாது.

வரலாற்றின் பாடமும் அதுவே!

அன்புடன்

பார்த்தசாரதி

Comments