அகந்தையும், ஆணவமும் கொண்ட சர்வதிகாரி ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை -வைகோ


2011 சட்டமன்றப் பொதுத் தேர்தல் புறக்கணிப்பு : மதிமுக முடிவு



தொகுதிப் பங்கீட்டில், அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தை நடத்திய விதமும், கடைப்பிடித்த போக்கும், கழகத்தின் உள்ளங்களை மிகக் கடுமையாகக் காயப்படுத்தி விட்டது.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்களுடைய நடவடிக்கைகளில், அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது, முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.

அவருடைய போக்கிலும், அணுகுமுறையிலும், எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும், எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.

இந்நிலையில், புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்துப் போட்டி இடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு, ம.தி.மு.க. கருவியாயிற்று என்ற, துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை, ம.தி.மு.க.வுக்கு இல்லை.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்;

திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

Comments

ttpian said…
தேரோடும் சென்னையிலே
தேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?