ஐ.நா வல்லுநர் குழுவின் சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகள் பகுதி 3

பான் கீ மூனின் வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினைத் தனித்துவமாக வழங்கியிருந்த 'ஐலண்ட்' பத்திரிகை சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அதன் இதர- பொருத்தமான பகுதிகளை தொடராக வெளியிட்டு வருகிறது.

பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பொருத்தமான பகுதிகளை முன்னர் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இன்றும் தொடர்கிறது.

ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கையின் சிறிலங்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விடயங்களை நாங்கள் இன்றும் தொடர்கிறோம். பன் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழு சிறிலங்காவிற்கு எதிராக ஐந்து முதன்மையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. கடந்த ஐந்து நாட்களாக சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முதல் மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விபரங்களை ஏலவே நான்கு பகுதிகளாகத் தந்திருந்தோம். இன்று, சிறிலங்காவிற்கு எதிரான நான்காவது குற்றச்சாட்டு ஆகிய போர் முடிவுக்குவந்த பின்னர் உயிர்தப்பியவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொருத்தமான பகுதிகளை பகுதி ஐந்தில் நாங்கள் இங்கு தருகிறோம். (பக்கம் 41 - 44)

போர் இடம்பெற்ற பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் தொகையினைக் குறைத்துக் கூறியதன் ஊடாக அவர்களுக்குப் போதிய உணவுகள் மற்றும் மருத்துப்பொருட்கள் கிடைப்பதை சிறிலங்கா மறுத்தமை தொடர்பான விபரங்கள் இந்த நான்காவது பகுதியில் தொடர்கிறது.

தடுத்துவைத்தல், படுகொலைசெய்தல், பாலியல் வல்லுறவு மற்றும் காணாமற்போதல்கள்:

ஊ. போர்க் களத்திற்கு வெளியே போர் முடிவுக்குவந்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள்.

138.
வன்னிப் பகுதியில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பியல் நிலைமை அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் மாறிவிடவில்லை. வன்னிப் பகுதியிலிருந்து வரக்கூடிய பெருந்தொகையான அகதிகளைக் கையாளுவதற்குத் தான் தயாராக இருப்பதாக சனவரி 2009 முதல் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துவந்த போதிலும் இதுபோல பெருந்தொகையான மக்கள் போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறியபோது அவர்களை வரவேற்பதற்கு ஏதுவாக முழுமையான தயார் நிலையில் இருக்கவில்லை. பின்னர் நிலைமையினை சமாளிக்கமுடியாமல் திண்டாடியது. பொதுவாகக் கூறுவதானால் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் நல்வாழ்வு என்பவற்றைவிட பாதுகாப்புசார் கரிசனைகளுக்குத்தான் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்தது எனலாம்.

139.
போர்க் களத்திலிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்கள் எவ்வாறு வரவேற்கப்படுவோம் என்ற அச்சத்துடனேயே இருந்தார்கள். போரின் இறுதிநாட்களில் இந்த மக்கள் பெற்ற அனுபவத்தின் விளைவாக பலர் உளநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும் களைத்துப்போனவர்களாகவும் காணப்பட்டனர். போரின் விளைவாக கணவனை இழந்த, அநாதைகளாக்கப்பட்ட மற்றும் மாற்றுவலுவுடையோர் ஆக்கப்பட்டோரே இவர்களுள் அதிகம். இடம்பெயர்ந்த இந்த மக்களுள் பல்லாயிரக்கணக்கானோர் ஏதோவொரு வகையில் காயமடைந்திருந்தார்கள். அத்துடன் 2,000க்கும் அதிகமானவர்கள் தங்களது அவயவங்களை இழந்திருந்தார்கள்.

போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் வெளியேறியமையானது நிலைமையினை மோசமாக்கியது. அத்துடன் பெரும்பாலான குடும்பங்களின் அங்கத்தவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பிரிந்துபோனார்கள். இடம்பெயர்ந்த மக்களைக் கையாளும் அரசாங்கத்தின் செயற்பாட்டின் போது பல குடும்பங்களின் அங்கத்தவர்கள் வெவ்வேறு முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடித்து அவர்களை இணைப்பதற்காக செயற்பாடுகள் போதுமானதாக இருக்கவில்லை. குடும்பங்களை மீளிணைக்கும் விடயத்தில் அனைத்துலகச் செஞ்சிலுவைக்குழுவிற்கு முதன்மையான பாத்திரம் வழங்கப்படவில்லை.

140.
இவ்வாறாக குடும்பங்கள் பிரிந்து காணப்பட்டமையானது கூடாரங்களில் பெண்கள் தனித்திருக்கும் நிலைமையினை உருவாக்கியது. ஈற்றில் இந்த நிலைமை பாலியல் வன்முறைகள் அரங்கேறுவதற்கு வழிசெய்தது. கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குப் போதிய போசாக்கு உணவோ அன்றி மருத்துவப் பராமரிப்போ கிடைக்கவில்லை. அத்துடன் இந்தத் தாய்மார்கள் போர் இடம்பெற்ற பகுதிகளில் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களினால் கடுமையான உளப் பாதிப்புக்கு அதிகம் உட்பட்டிருந்தனர். கட்டாய ஆட்திரட்டல் தாய்மார்களின் மனங்களை வெகுவாகப் பாதித்திருந்தது.

141.
இந்தப் போரானது இளவயதினரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. 14 வயதில் இருந்தவர்களைக்கூட புலிகள் கட்டாயத்தின் பெயரில் தங்களது படையில் இணைத்திருக்கிறார்கள். புலிகளின் கட்டாய ஆட்திரட்டலில் இருந்து தப்புவதற்கான ஒரு வழிவகையாக இளவயதுத் திருமணங்கள் பல அரங்கேறின. இது இளம் பெண்களின் உடல் நலத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. இது தவிர, எறிகணைத் தாக்குதல்களின் விளைவாக ஆயிரக்கணக்கான சிறார்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காயமடைந்திருக்கிறார்கள்.

பதுங்குகுழிகளை விட்டு வெளியேறி விளையாடுவதற்குச் சிறார்கள் துணிந்தபோதுதான் இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சிறார்களின் பிஞ்சு அவையவங்களில் எறிகணைகளின் குண்டுச் சிதறல்கள் பட்டபோது அவை மோசமாகச் சிதைந்துபோயின. போர் முடிவுக்குவந்த கையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்போது 25 சதவீதமான சிறார்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

142.
இடைவிடாத இடம்பெயர்வினால் பல சிறார்கள் மோசமான உளவியல் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்கள். சிறார்களில் பலர் தங்களது பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள். இந்தச் சிறார்களில் பலர் எவரது துணையுமின்றி தனித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெரும்பாலான சிறார்கள் போசாக்கின்றியவர்களாகவே காணப்பட்டனர். நீரிழப்பு அல்லது வாந்திபேதிதான் இவர்கள் அதிகம்பேர் போசாக்கற்றவர்களாக மாறியதற்கான பிரதான காரணம்.

143.
அதேபோலவே முதியவர்களும் இந்தப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இடைவிடாத இடம்பெயர்வுகளின் போது நடக்கும் வலுவுடையவர்கள் கால்நடையாக நடந்துசெல்ல, முதியவர்களும் நடக்கமுடியாதவர்களும் அங்காங்கு தனித்துவிடப்பட்டனர். தங்களது உறவினர்கள் அனைவரும் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில் முதியவர்கள் பலர் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். தொடரான இடப்பெயர்வுகளையும் தாண்டி இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு வந்த முதியவர்களில் எவரது பராமரிப்புமின்றி வாழ்ந்தவர்கள் பலர் மடிந்திருக்கிறார்கள். அதிக களைப்பு, ஒதுக்கப்பட்டமை மற்றும் தவிர்த்திருக்கக்கூடிய நோய்களே இந்த மரணங்களுக்குக் காரணம்.

01. இடம்பெயர்ந்த மக்களைத் தரம்பிரிக்கும் நடவடிக்கையின் போது இடம்பெற்ற வன்முறைகள்

144.
வன்னிப் போர் முனையிலிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாகவும் ஏனைய சில இடங்களிலும் வைத்து சிறிலங்கா அரச படையினரிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவ்வாறு வந்த பொதுமக்கள் அனைவரும் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில், தனியான இடங்களில் அனைவரது ஆடைகளையும் களைந்து உடற்சோதனை மேற்கொண்ட படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இவர்கள் வைத்திருக்கிறார்களா எனச் சோதனை செய்தனர். இடம்பெயர்ந்துவந்த மக்கள் சிலர் வைத்திருந்த புகைப்படக் கருவிகள் மற்றும் மடிக்கணனிகள் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் விளைவாக மக்கள் பெறுமதிமிக்க தங்களது தகவல்களை இழந்தனர்.

இதன் பின்னர் பதவியா, புல்மோட்டை மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரம்பிரித்தல் மையத்திற்கு இந்த அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். இங்கு வைத்துத்தான் விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒருநாள் இணைந்து இருந்தவர்கள் கூட தாமாகமுன்வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு படையினர் பணித்தனர். உரிய பதிவுகளின் பின்னர் சரணடைந்த அனைவருக்கும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் படையினர் உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் படையினரின் அறிவிப்பினையடுத்து சரணடைந்த பெருந்தொகையான முன்னாள் போராளிகள் தனித்தனியான தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு பெண்களும் சிறார்களும் இருந்தார்கள்.

145.
இது தவிர இடம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை அடையாளம் காணுவதற்கு கருணா அணியின் உறுப்பினர்களையும் புளொட் அமைப்பின் உறுப்பினர்களையும் அரசாங்கம் பயன்படுத்தியிருந்தது. இடம்பெயர்ந்த மக்களைத் தரம்பிரிக்கும் இந்தச் செயற்பாடு இடம்பெற்ற பகுதிக்கு அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்களை அசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறது.

146.
இந்த ஆரம்பகட்ட தரம்பிரித்தலின் பின்னர் அதிலிருந்து தப்பிய பொதுமக்கள் அனைவரும் ஓமந்தைப் பகுதியில் இரண்டாவது கட்ட தரம்பிரித்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டனர். தரம்பிரித்தல் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக ஆண்களும் பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஓமந்தையில் இடம்பெற்ற இரண்டாவதுகட்ட தரம்பிரிக்கும் செயற்பாட்டின் போது அனைவரதும் ஆடைகள் களையப்பட்டுச் சோதனையிடப்பட்டமை பெரும் அவமானத்தினை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இந்தச் செயற்பாட்டின் போது குறிப்பாக இளம் பெண்கள் கூனிக்குறுகிப் போயினர். எம்.எஸ்.எவ் என்ற வரையறையற்ற மருத்துவர்கள் குழு, ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழு ஆகியவற்றின் அலுவலர்கள் ஓமந்தைப் பகுதிக்குச் சென்றுவருவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் யூலை 2009ன் பின்னர் அனைத்துலகச் செஞ்சிலுவைக்குழுவிற்கான இந்த அனுமதி இடைநிறுத்தப்பட்டது.

147.
மருத்துவத் தேவைகள் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஓமந்தையிலிருந்து வவுனியா மருத்துவமனைக்கோ அல்லது புல்மோட்டையில் இந்திய மருத்துவர்களினால் நடாத்தப்பட்ட தற்காலிக மருத்துவமனைக்கோ அனுப்பப்பட்டனர். வவுனியா மருத்துவமனை நோயாளர்களால் நிரம்பி வழிந்தது. இந்தச் சூழமைவில் காயங்கள் பூரணமாக மாறுவதற்கு முன்னர் நோயாளர்கள் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படும் நிலைமையே காணப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவந்த இந்த அகதிகளை அரச படையினர் 24 மணிநேரமும் காவல்காத்தனர். தவிர பொலிசாரின் விசாரணைகள் தொடர்ந்தன (குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத விசாரணைத் திணைக்களம் ஆகியவே இந்த விசாரணைகளில் ஈடுபட்டன). குறிப்பிட்ட சில நோயாளர்கள் மருத்துவமனையிலிருந்து காணாமற்போயினர்.

148.
குறிப்பாக பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட படைத்தரப்பினரின் தரம்பிரித்தல் செயற்பாடுகளின் போது கொலைகள், காணாமற்போதல்கள் மற்றும் பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என பல அட்டூழியங்கள் அரங்கேறியிருந்தன.

(அ) கொலை

149.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலர் சிறிலங்கா அரச படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பதை குழுவிற்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் உண்மையென உறுதிப்படுத்தப்பட்ட காணொலிகள் மற்றும் ஏராளமான புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வல்லுநர்கள் குழுவிற்குக் கிடைக்கப்பெற்ற ஒளிப்படங்களில் விடுததலைப் புலிகளின் உறுப்பினர்கள் (அல்லது பொதுமக்கள்) கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடப்பதைக் காட்டுகிறது. 25 ஓகஸ்ட் 2009 அன்று பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்ட சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலியில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையிலுள்ள எண்ணற்ற கைதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கொலைசெய்யப்பட்ட கைதிகளின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததோடு கண்களும் கட்டப்பட்டிருந்தது. இவர்களைக் காலால் உதைந்து சகதியில் தள்ளி விழுத்திய பின்னர் குறுகிய தூரத்தில் வைத்துப் படையினர் சுட்டுக்கொலை செய்கிறார்கள். இதற்கு முன்னரும் பலர் கொலைசெய்யப்பட்ட நிலையில் இறந்துகிடப்பதை இந்தக் காணொலியில் காணமுடிகிறது.

02 டிசம்பர் 2010 அன்று இதே சம்பவத்தினைக் காட்டும் இரண்டாவது காணொலியையும் சனல்-4 வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது காணொலியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆண், பெண் கைதிகளின் ஆடைகள் களையப்பட்ட உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறன. இந்த உடலங்களுள் ஒரு ஆணினதும் பெண்ணினதும் உடலங்களும் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிய இசைப்பிரியாவே இந்தப் பெண்.

53வது படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாகக் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களது பெயர்விபரங்கள் என மே 18 2009 அன்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட பெயர் விபரங்களில் இசைப்பிரியாவினது பெயரம் அடங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட இந்தக் காணொலியில் சம்பவ இடத்தில் காணப்பட்ட இராணுவத்தினரின் முகங்கள் தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் இராணுவத்தினர் தங்களது கைத்தொலைபேசிகள் ஊடாக இந்த உடலங்களைப் படமெடுப்பதையும் காணமுடிகிறது.

150.
இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒளிப்படங்களில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருத்தி வைத்திருக்கப்படும் ஒரு பையன்தான் மேற்குறித்த கானொலியில் இறந்த நிலையில் காணப்படும் ஒருவர் எனத் தெரிகிறது. இந்தப் ஒளிப்படத்தில் இருப்பவர்கள் அச்சத்தில் உறைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இந்த நபர்களில் சிலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளின் பின்னரே இவர்கள் கொலைசெய்யப்பட்டிருப்பதை இந்தப் ஒளிப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. பிறிதொரு காணொலியில் ஒருவர் மரத்துடன் கட்டிவைக்கப்பட்டு சித்திரவதைக் உள்ளாக்கப்பட்டதைக் காட்டும் வகையில் இரத்தம் வழிந்தோடியவாறும் காணப்படுகிறது. அந்தக் காணொலியின் இறுதியில் குறித்த நபரது உடலம் புலிக்கொடியினால் போர்க்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

(ஆ) காணாமற்போதல்கள்

151.
இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த மக்கள் தரம்பிரிக்கப்பட்ட இடங்களிலோ அல்லது ஓமந்தையிலோ முறையான பதிவுகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவுமில்லை, இந்தப் பதிவுகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக நிறுவனங்களை அனுமதிக்கவுமில்லை. இந்த நிலையில் காணாமற்போன ஒருவரைத் தேடிக்கண்டுபிடிப்பது முடியாத காரியமாகவே உள்ளது. தாங்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்தபோது தங்களது கணவன்மார் மற்றும் உறவினர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பலர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளின்போது சாட்சியமளித்திருக்கிறார்கள். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர்களைப் பின்னர் எவரும் காணவில்லை. இருப்பினும் இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரங்களை இதுவரை அரசாங்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

மே 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆகக்குறைந்தது 32 காணாமற்போதல் சம்பவங்கள் தொடர்பாக குழுவிடம் முறையிடப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் தனியாக அல்லாமல் கூட்டாகவே காணாமற்போயிருக்கிறார்கள். இவ்வாறு காணாமற்போனவர்களில் பலர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களே.

(இ) பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை

152.
போரின் இறுதி நாட்களில் தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு பாலியல் வன்முறைகள் பெரிதாக வெளியே தெரியவரவில்லை. காலாசாரத் தளைகள் மற்றும் சமூகத்தினால் தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக இதுபோன்ற கொடுமைக்கு ஆளாகியவர்கள் முன்வந்து வெளியே கூறுவதில்லை. ஏன் தங்களது உறவினர்களிடம்கூட அவர்கள் வாய்திறப்பதில்லை.

எது எவ்வாறிருப்பினும் போரின் இறுதி நாட்களிலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைகள் தொடர்பான மறைமுகப் பதிவுகள் பல இருக்கத்தான் செய்கின்றன.

153.
குழுவிற்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் காணொலிகளில், குறிப்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலியில் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள் பலரது உடலங்கள் காணப்படுகின்றன. ஆடைகள் களையப்பட்ட நிலையிலும் பிறப்புறுப்பினையும் மார்பினையும் காட்டும் வகையில் உள்ளாடைகள் விலக்கப்பட்டும் இந்த உடலங்கள் காணப்படுகின்றன. சனல்-4 வெளியிட்ட காணொலியில் காணப்படும் படைச் சிப்பாய்களின் சிங்கள உரையாடல்கள் பெண்கள் கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் அல்லது பின்னர் பாலியல் வன்முறைகளுக் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தினை எழுப்புகிறது.

பிறிதொரு காணொலியில் கொல்லப்பட்ட (அல்லது உயிர் பிரியும் தறுவாயில் இருந்த) ஆடைகள் களையப்பட்ட பெண்களின் உடலங்களை ற்ரக் வண்டிய ஒன்றில் இவர்களை அவமதிக்கும் வகையில் படையினர் ஏற்றுகிறார்கள். இந்தக் கானொலியில் உடல் அசைவு காணப்பட்ட ஒரு பெண்ணின் காலை படைச்சிப்பாய் ஒருவன் உதைந்து தள்ளுகிறான்.

சிறிலங்கா பொலிசாரினதும் (சி.ஐ.டீ மற்றும் ரி.ஐ.டீ) இராணுவத்தினரதும் தடுப்புக்காவலில் இருந்த போது விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சிறிலங்காப் படையினரால் இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட செய்திகள் அங்கு பணியாற்றிய தொண்டு நிறுவனங்களின் காதுகளை எட்டியிருக்கிறது. ஆனால் தாங்கள் பாலியல் வல்லுறவுக்குட்பட்டதை காவல்துறையினரிடமோ அன்றி தொண்டு நிறுவனங்களிடமோ தெரிவிக்கக்கூடாது என படையினரால் இந்தப் பெண்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Comments