வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 6

vanni-66s16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம்.

படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன.

முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய சலசலவென்ற சிதறல்களிலிருந்து தப்ப, குழிகளுக்குள்ளேயே குந்தியிருந்தோம்.

கால்கள் வலியாய் வலித்தன. குருதி வழியும் காயங்களோடு போராளிகள் பலர் எங்களை கடந்து போனார்கள். கடைசியாய் களமுனையில் நின்ற போராளிகள் அவர்கள் என்பதை அவர்களின் தோற்றம் சொன்னது.

இடுப்பில் மடித்துக்கட்டிய சாறமும் குருதி தோய்ந்த காயக்கட்டும் அவர்களின் செய்வதறியாத திணறலும் வேதனையைத்தவிர எனக்கு வேறெதையும் ஏற்படுத்தவில்லை.

vanni-61

பதுங்குகுழியைவிட்டு வெளியே தலை நீட்டினால் தோழிகள் அதட்டுவார்கள். “என்ன வீணாய் காயப்பட போறியா?” என்று. அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதுதான்.

செத்துவிட்டால் எவருக்கும் சிக்கலில்லை. காயப்படுவதென்பது பிரச்சினைதானே. எவருமே தூக்கிவைத்து காயம் கட்டிவிட மாட்டார்கள். அவர்களையும் குறைசொல்ல முடியாது. எப்படியோ யாரை பிடித்துக்கொண்டாவது போய் சேருங்கள் என்று காயப்பட்டவர்களை எல்லாம் விடியவிடிய சுமந்துசென்று வீதியோரமாக விட்டாயிற்று.

இனிமேல் இதில் நின்று காயப்படுபவர்கள் பிழைப்பது அவரவரைப் பொறுத்தது. கடைசி கடைசி என்று இருந்தவர்களும் புறுப்பட்டு போய்விட்டார்கள்.

குழியிலிந்து கிளம்பி கிணற்றடிக்கு ஓடினேன். இரண்டே இழுவையில் மேலே வாளி வந்துவிடக்கூடிய சின்னஞ்சிறிய வட்டக்கிணற்றில் நீரை அள்ளி முகத்தை கழுவினேன். காயப்பட்டால் அடுத்த கணம் பற்றியெல்லாம் யோசிக்க தேவையில்லை. உடனே குப்பியை சப்பி விழுங்கிவிட வேண்டியதுதான். சுத்தமாய் சாகிறேன் என்ற திருப்தியோடாவது சாகலாம் அல்லவா?

திடீரென அவ்விடத்தில் ஆர்.பி.ஜி எறிகணைகள் நான்கைந்து விழுந்தன. அவ்விடத்திலேயே நானும் குப்புற விழுந்தேன். காயப்படாதது அதிசயமாகத்தான் இருந்தது. வாளியிலும் சிதறுதுண்டுகள் மோதின. கிணற்றுக்குள் கொட்டிய சிதறுதுண்டுகள் நீரை கலங்கவைத்தன.

அடுத்த எறிகணை ஏவப்படுவதற்குள் எழுந்து ஓடோடிவந்து பதுங்குகுழிக்குள் குதித்தேன். அட, என்ன அதிசயம். என் பதுங்ககழி அருகே சொப்பிங் பை நிறைய சீனியும் ‘அங்கர்’ மாப்பெட்டி ஒன்றும் இருந்தன. அவற்றை கண்டவுடன் பசி என் வயிற்றை பிரட்டியெடுத்து.

அகழிக்குள் இருந்தபடியே அடுப்படியை பார்த்தேன். யாரோ மூட்டிவிட்ட அடுப்பு புகைந்துகொண்டிருந்தது. மேலே இருந்த தறப்பால் பல பொத்தல்களாகி கிழிந்து தொங்கியது. மூன்று கற்களாலான அடுப்பின்மேலே பானையொன்று இருந்தது.

கைவசம் சீனியும் மாவும் இருப்பதை அடுத்த காப்பகழிக்குள் இருப்பவர்களிடம் சொன்னேன். தோழி ஒருத்தி ஏறிப்பாய்ந்து அடுப்படிக்கு ஓடினாள். பானையை திறந்து பார்த்துவிட்டு விறகுகளை உள்ளே தள்ளிவிட்டு ஊதுவதற்காக குனிந்தாள்.

vanni-61

அந்நேரம் எறிகணை ஏவும் சத்தம் கேட்டது. சத்தம்கேட்ட அடுத்த கணம் அவள் பாய்ந்தோடிவந்து பதுங்குகுழிக்குள் குதித்துவிட்டாள். அந்த எறிகணை பயங்கரமான சத்தத்துடன் கூவிக்கொண்டுவந்து எங்களையும் கடந்துசென்று வெடித்தது.

ஒவ்வொரு எறிகணையும் ஏவப்படும் ஒலியையும் அது காற்றை கிழித்துக்கொண்டு கூவிவரும் இரைச்சலையும் எங்களை கடந்துசெல்லும் ஒலியையும் வெடிக்கும் பாரிய சத்தத்தையும் அதன்பின் சிதறுதுண்டுகள் சிதறியெறியும் ஒலியையும் முழுதாக கேட்டபின், அடுத்த எறிகணை ஏதாவது ஏவப்படுகிறதா என்பதை அவதாணித்து இல்லை என்றால் மட்டுமே காப்பகழியில் இருந்து தலைகளை உயர்த்துவோம்.

பலவேளைகளில் தொடர்ச்சியாக ஏவப்படுவதால் குனிந்துகொண்டேதான் இருக்கவேண்டி இருந்தது.

கடவுளே அடுப்புக்கும் அடுப்பிலிருக்கும் பானைக்கும் ஊறுவிளைவிக்க விட்டுவிடாதே என்று மனசுக்குள் மன்றாடிக்கொண்டிருந்தோம்.

சற்றுநேரத்தில் எழுந்து பார்த்தால் அடுப்பு மிளாசி எரிந்துகொண்டிருந்தது. எறிகணை ஏவப்படும் இடைவெளியை கணக்கிட்டு தோழியொருத்தி ஓடிச்சென்று கொதிக்கும் தண்ணீரை பானையோடு தூக்கிக்கொண்டு வந்துசேர்ந்தாள்.

அடுத்த இடைவெளியில் ஓடிச்சென்று குவளைகளையும் தேயிலைத்தூள் பேணியையும் கொண்டுவந்து சேர்த்தாள். பனைமரத்தோடு குனிந்து குந்திக்கொண்டு பானைநிறைய தேநீர் தயாரித்தேன்.

தேயிலை, சீனி, மா அத்தனையையும் பானைக்குள்ளேயே கொட்டி இரண்டு ஆற்று ஆற்றிவிட்டு பெரிய குவளையில் வடித்து வைத்துவிட்டேன். அருகருகான குழிகளில் இருந்த எல்லோரும் குவளைகளில் ஊற்றிச்சென்று தேநீர் பருகினார்கள்.

தேநீரா அது தேவாமிர்தமாய் இருந்தது. மன நிறைவோடு நானும் பருகினேன். வந்தவர் போனவர் என்று எல்லோருமே குடித்து பானையை காலியாக்கினார்கள். பின்பு பலர் சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு கிளம்பத் தொடங்கினார்கள்.

vanni-61

காப்பகழிகள் பலவும் வெறுமையாகிக் கொண்டிருந்தன. படையினர் மிகமிக நெருங்கிவிட்டனர் என்பதை வெடிப்பொலியில் வைத்து விளங்கிக்கொள்ள முடிந்தது.

அங்கமிழந்தவர்கள் எல்லாம் ஒரே அகழிக்குள் நின்றோம். சரணடைவதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருந்தது.

அவர்களிடம் மண்டியிட்ட பிறகு எப்படியெல்லாம் அவமானப்பட நேரிடுமோ என்ற நினைப்பே மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தியது.

எதற்காக சரணடைய வேண்டும்? இனிமேலும் வாழ்ந்துதான் என்ன பயன்? இவர்கள் இப்படித்தான் செத்தார்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று மேடைகட்டியா பேசப்போகிறார்கள்?

ஏன் எவரும் மேடைகட்டிப் பேசுவார்கள் என்றால்தான் சாக சேவண்டுமா என்று உள்மனம் கேள்விகேட்டது.

இல்லலைத்தான். ஆனால் பெற்றவர்களுக்குக்கூட தெரியாத மரணமாக அல்லவா இருந்துவிடும். போரில் மர்மமான மரணங்கள் நிகழ்வது உண்டுதான். போரே இல்லை என்றானபின் எதற்காக மரணிக்க வேண்டும்?

இத்தனை ஆண்டுகளில் மரணித்திருந்தால் அது வீர மரணம். இனி நடந்தால் கொலை, அல்லது தற்கொலை அல்லவா? மனதிற்குள் பலமான விவாதம் எழுந்தது. முடிவெடுக்க முடியாத திண்டாட்டம் தான்.

குப்பி கடிப்பதென்ற தீர்மானத்தில் அதுவரை மாற்றமெதுவும் இருக்கவில்லை. அந்தநேரம் பார்த்து போராளித்தம்பி ஒருவன் எங்களது பதுங்குகுழி ஓரமாக வந்தமர்ந்தான்.

“என்னக்கா செய்யப்போறிங்க?” என்றான் அக்கறையோடு. நான் முறுவலித்தேன். எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

“என்னை தெரியுமா அக்கா? மறந்திட்டிங்கள் போல. எனக்கு உங்கள நல்லாய் தெரியும். நேற்றும் கிணற்றடில உங்கட்ட தண்ணி வாங்கிக்குடிச்சன்” என்றான். பழகிய முகமாகத்தான் தெரிந்தது.

என்னோடு காப்பகழிக்குள் நின்ற சந்தியாதான் கேட்டாள்,

“என்ன தம்பி நடக்கிது? சனங்கள் இயக்கத்தில இருந்த பிள்ளைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு போகுதுகள்”

“ஓம். நீங்களும் போங்கோ” என்றான் தீர்க்கமாக.

“என்ன தம்பி சொல்றிங்க?” என்ற என்னை அவன் ஆதரவாய் பார்த்தான். திடுமென அருகில் விழுந்த எறிகணைக்கு தப்ப நிலத்தோடு படுத்தான்.

“தம்பி உள்ள இறங்கு” என்று எங்களது காப்பகழியில் சிறிது இடம் கொடுத்தோம். அவன் இறங்கவில்லை. எனக்கு அவனில் பாசமாகவும் அக்கறையாகவும் இருந்தது. எனினும் அவனை வற்புறுத்தவில்லை. ஏனெனில் உள்ளே இன்னொருவரை இருத்த போதியளவு இடம் இருக்கவில்லை.

vanni-61

தப்பித்தவறி அவன் இவ்விடத்தில் காயமடைந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சமாக இருந்தது. வெடிச்சத்தங்களோ இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தன.

அவன் காப்பகழியோடு நிலத்தில் கிடந்தபடியே சொன்னான்,

“உண்மையாத் தானக்கா சொல்றன். அநியாயமா குப்பிய கடிச்சுப்போடாதிங்க. சண்டை முடிஞ்சிது. தலைவர் நேற்றிரவு போயிட்டார். எஞ்சிய போராளிகள் எல்லாம் சரணடையிறதாக கதை.” என்றவனிடம்,

“என்ன?” என்றேன் அதிர்ந்து.

“யோசிக்காதிங்க. கவலப்படாதிங்க. நீங்க இதில நிண்டு செத்தாலும் இப்ப அது அநியாய சாவுதான். ஒருதுளிப் பிரயோசனமும் இல்லாத சாவு. வெளிக்கிடுங்கோ” என்று எடுத்துச் சொன்னான்.

என்னை வெறுமை அப்பியது.

“இல்லத்தம்பி, ஆமியிட்ட போகச்சொல்றியா? நினைக்கவே கஸ்ரமாய் இருக்கடா. குண்டுகள் இருந்தால் தந்திட்டுப்போ. ஆமி கிட்டவந்தால் நாங்கள் வெடிச்சு சாகிறம்” என்றேன். இப்போது அவனது புன்னகையில் வெறுமை தெரிந்தது.

“சாச்சரைத்தான் தந்தாலும் நீங்க பனைமரத்தோட தானக்கா வெடிக்கணும். ஆமியில வெடிக்க முடியாது. ஏனெண்டால் அவன் ரவுண்சாலயும் ஷெல்லாலையும் தரைமட்டமாக்கிப்போட்டுத்தான் வந்துகொண்டு இருக்கிறான்” என்றான்.

நான் யோசித்தேன். பயங்கரமாக தலைவலித்தது. அவனே தொடர்ந்து பேசினான்.

“இன்னும் அரைமணித்தியாலத்துக்கு கூட நிக்கேலாது. கடற்கரை பக்கத்தாலயும் அடிச்சுக்கொண்டு வாறான். போறதத்தவிர வேற வழியில்லை” என்று அவன் சொல்லச்சொல்ல நான் சொல்வதறியாது இறுகிப்போய் நின்றேன்.

“அக்கா உடன உடுப்ப மாத்திக்கொண்டு வெளிக்கிடுங்க. சாகணுமெண்டு நினைக்காதிங்க. செத்தாலும்கூட இப்பிடி மூண்டுபோர் செத்தாங்களாம் எண்டு சொல்லக்கூட ஆளில்ல”.

vanni-61

“தயவுசெய்து குப்பிகளயும் கடிக்காதிங்க. நேற்று பின்னேரம்கூட காயப்பட்ட பிள்ளைகள் இருந்த பங்கருகளில போய் சொன்னன். விடியப்போய் பாக்கிறன் குப்பி கடிச்சி செத்து கிடக்கிதுகள். அநியாயமாய் செத்திட்டுதுகளக்கா”.

“ஒருதருக்கும் பிரயோசனமில்லாத சாவுகள். புதைக்கக்கூட முடியாதக்கா. மண்வெட்டி கிடைச்சால் பங்கரோடையே மூடிவிடலாம் எண்டு பாத்தா அதுகூட கிடைக்கயில்ல” என்று பெருமூச்சு எறிந்தவனின் கண்கள் சிவந்தன.

எனக்கு மனம் தடுமாறியது. அந்தப்போராளி எதற்காக இப்படியெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறான் என்று சிந்தித்தேன். போவதுதான் சரியான முடிவோ?

“சரி ராசா. நீ ஏன் மினக்கெடுறாய்?” என்றேன்.

“போகத்தானக்கா வேணும். இங்க நிண்டு என்ன செய்யிறது?” என்று புன்னகைத்தான். என் மனமோ அப்போது சாகும் முடிவை தவிர்ப்பதற்கு நியாயம் கற்பித்துக்கொண்டிருந்தது. அது என்னைநானே தாழ்வாகவும் நினைக்கவைத்தது.

பெற்றோருக்கும் பிள்ளை உயிரோடு இருக்கிறாள் என்பதுதானே மன ஆறுதலை கொடுக்கும். எனக்கு என்ன நடந்தது என்றுகூடத்தெரியாமல் அவர்கள் தேடி அலைவது எவ்வளவு துயரமானது. நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்று தெரியாமல் இருப்பது அவர்களுக்கு எவ்வளவு கொடுமையானது.

இத்தனை ஆண்டுகளாய் எத்தனையோ பாடுகளை பட்டுவிட்டு வீணாண சாவை ஏன் தழுவவேண்டும். பெற்றோருக்கும் பிள்ளை இல்லை சாவுக்கும் அர்த்தம் இல்லை என்றால் ஏன் சாகவேண்டும்?

இறுதிவரை கொண்டுவந்த நினைவுப் படங்களையும் தீப்பெட்டியையும் அந்தத் தம்பியிடமே நீட்டினேன். அவன் தீக்குச்சியை தட்டி படங்களில் நெருப்பு மூட்டினான். என் தோழிகளும் தம் ஆவணங்களை அந்த தீயிலே போட்டார்கள்.

vanni-66

“போயிட்டு வாறனக்கா. மினக்கெடாமல் வெளிக்கிடுங்க” என்றுவிட்டு அந்தத்தம்பியும் போய்விட்டான். அவனது அக்கறையை நினைக்க ஏனோ அழுகைதான் வந்தது.

யாரோ ஒருவன். யார் வந்தால் என்ன செத்தால்தான் எனக்கென்ன என்று அவன்பாட்டில் போயிருக்கலாம்தானே. ஆனால் உயிராபத்தான இடத்தில் எங்களுக்காக தன் நேரத்தை செலவிட்டானே.

எறிகணைகள் வெடித்துக்கொண்டேதான் இருந்தன. காயமடைந்து கிடந்தவர்களின் கதறல்களும் புலம்பல்களும் காதை கிழித்தன. எங்களையும் கடந்துசென்ற காயப்பட்ட போராளிகள்கூட எங்கேயோ போய் சேரத்தானே போகிறார்கள். இதயம் கல்லாகக் கனக்க நானும் என் தோழியரும் சாதாரண மக்களின் உடைக்கு மாறினோம்.

தலைப்பின்னலையும் அவிழ்த்து சாதாரண பெண்கள் கட்டுவதைப்போல கட்டிக்கொண்டோம். கைகளிலும் கழுத்துகளிலும் கிடந்த தகடுகளை கழற்றி மரவேரில் புதைத்தோம். தாலியறுத்த பெண்போல என் உள்மனம் பதறியது. குப்பியைமட்டும் கழுத்திலேயே வைத்துக்கொண்டேன்.

தொடரும் ………………..

Comments