‘மாவீரராகாத எந்தவொரு போராளியும் எப்போதும் துரோகியாக மாறலாம்’

எங்கே செல்லும் இந்தப் பாதை யார்தான் யார்தான் அறிவாரோ..?

முழுப் பூசணியை ஒரு கோப்பை சோற்றில் மறைக்க முயல்வது என்பது கே.பி விடயத்தில் சரியாகத்தான் இருக்கின்றது. ‘மாவீரராகாத எந்தவொரு போராளியும் எப்போதும் துரோகியாக மாறலாம்’ என்பது போராளி ஒருவரால் சொல்லப்பட்ட வாக்கியம். கே.பி இன்று சிறீலங்காவின் கைகளுக்குள் இருக்கின்றார்.


இன்று கே.பி என்ன நிலையில் இருக்கின்றார் என்பது இன்னொரு பக்க விடயம். ஆனால், அவரது செயற்பாட்டை இங்கு சிலர் {இன்போதமிழ் குழுமம் } நியாயமெனக் கற்பிக்க முயல்வதுதான் பெரும் சந்தேகத்தையும், இவர்கள் எவ்வாறான நிகழ்சி நிரலுக்குள் இயங்குகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் சிறீலங்கா அரசினால் இந்தப் பூமிப் பந்தெங்கும் வலை வீசித் தேடப்பட்டவர் கே.பி. சிறீலங்கா அரசின் கைகளில் சிக்குண்ட சாதாரண போராளிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டும், பலர் இன்றும் வெளித்தெரியவராத தடுப்பு முகாம்களில் கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கே.பி கைது செய்யப்பட்டதாக அல்லது கட்டத்தப்பட்டதாக கூறப்பட்ட சில தினங்களிலேயே வெளிநாடுகளில் உள்ள தனது நெருக்கமானவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக வெளிவந்த செய்திகள் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில்தான் கடந்த மாதம் வெளிநாடுகளில் இருந்து கொழும்பு சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் அடங்கிய குழுவொன்று கே.பியை நேரில் சந்தித்துவிட்டு வந்து வெளியிட்ட தகவல்கள் பல உண்மைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ‘செல்வராசா பத்மநாதனை சிறீலங்காவின் படைப் புலனாய்வாளர்களே இயக்கி வருவதாகவும், அவரூடாக புலம்பெயர்ந்த மக்களை தம்மிடம் மண்டியிட வைப்பதே சிறீலங்கா அரசின் நோக்கம்’ என்பதை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து கே.பி நடத்திய கூட்டுச் சந்திப்புகளில் கலந்துகொண்டுவிட்டு பிரித்தானியா திரும்பியுள்ள மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

கே.பியின் நடவடிக்கை தொடர்பாக ஈழமுரசு ஆரம்பம் முதலே பல சந்தேகங்களை வெளியிட்டுக்கொண்டே வந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் அவலத்தோடு ஈழமுரசு இடைநிறுத்தப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதற்கு பொருளாதார நெருக்கடிகளுக்கும் அப்பால் இந்தக் கே.பி குழுவினரின் நடவடிக்கையும் ஒருவகையில் முக்கிய காரணமாய் அமைந்தது. அதன் பின்னர், மீண்டும் ஈழமுரசு இன்னொரு வழியூடாக புத்துயிர் பெற்றபோதும் பட்ட அவஷ்தைகளும், அவலங்களும் சொல்லிமாளாதவை. மக்களுக்குச் சரியான தகவல்களையும், உண்மையான செய்திகளை யும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற அதன் முயற்சிகளுக்கு தடைகளும், அச்சுறுத்தல்களும், அவதூறுகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. இன்னும் அவை தொடரவே செய்கின்றன.

உண்மைகளை வெளிக்கொண்டுவரும்போதெல்லாம் எழுந்த இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபடி நாம் வெளிக்கொண்டுவந்த செய்திகள் ஆரம்பத்தில் மக்களுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்தாலும் இன்று உண்மை என்ன என்பதை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள் என்றே நம்புகின்றோம். ஈழமுரசை அடிபணிய வைக்க கே.பியும் அவரது குழுவினர்களும் எடுத்த முயற்சிகள் தோற்றுப்போன நிலையில், ஈழமுரசை மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்க வைக்கவும் அதன் வருகையைத் தடுத்து நிறுத்தவும் அனைத்து வழிகளும் கையாளப்பட்டபோதும், மக்கள் மீதான நம்பிக்கை மட்டும்தான் ஈழமுரசின் தொடர்ச்சியான வருகைக்கு வழியமைத்துக் கொடுத்தன.

தங்கள் முயற்சியில் தோற்றுப்போனவர்கள், அடுத்த கட்டமாக ஈழமுரசுக்கு எதிராகவே ஊடகங்களை ஆரம்பித்தனர்.கே.பியின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியும், அவரது நிலைக்காக கண்ணீர்விட்டும் நாடகம் புரியும் இவர்களின் நோக்கத்தை இனிமேல் ஈழமுரசு வெளிச்சம்போட்டுக் காட்டவேண்டிய தேவையில்லை. சிறீலங்காவின் கைகளுக்குள் இருந்துகொண்டு கே.பியோ அல்லது அவரது குழுவினரோ எந்த நடவடிக்கையை முன்னெடுக்க முனைந்தாலும் அது சிறீலங்காவின் நிகழ்ச்சிநிரலுக்குள் நடைபெறும் ஒரு நிகழ்வே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இன்று நடைபெறும் சம்பவங்களை உற்றுநோக்கி அவதானித்தாலே போதும், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது எவ்வாறான அபாயகரமான சதிவலைகள் பின்னப்படுகின்றன என்பதையும், இவை எத்தனை தூரம் அபாயகரமானவை என்பதையும் மக்களால் புரிந்து கொள்ளமுடியும். சிறீலங்கா கே.பியின் ஊடாகப் போடும் இந்த ஆபத்தான பாதையை கண்டறிந்து தெளிவுகொள்ளவிட்டால், முள்ளிவாய்க்கால் முடிவைப்போன்று புலம்பெயர்ந்த தமிழர்களும் சிதைத்து செயலிழக்கச் செய்யப்படுவார்கள் என்பது உறுதி.

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்

03- 07 - 2010


Comments