இந்தியா விரிக்கும் புதிய வலையில் சிக்குவாரா ருத்திரகுமாரன்?



ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு புதிய வியூகத்திற்குள் நுழைய முற்படுகின்றதா? என்ற சந்தேகம் பல தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றது.

தனது கட்டுப்பாட்டுக்குள் சிக்க மறுத்துவந்த சிங்கள தேசத்தைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவதற்காக முதன் முதலில் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது. இதற்காக, சிங்கள அரசு மீது அதிருப்தியில் இருந்த இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து ஆயுதங்களும் பயிற்சியும் அளித்து, ஆயுத மோதல் ஒன்றிற்கு வழி செய்தது.

இந்தியாவின் இந்த இலங்கைமீதான ஆதிக்க முயற்சியை, அதனால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களும் 'ஈழத் தமிழர்கள் மீதான கரிசனை' என்ற அர்த்தமாகப் புரிந்து கொள்ள, விடுதலைப் புலிகள் மட்டும் இந்தியாவின் உண்மையான நோக்கத்தின் அபாயத்தைப் புரிந்து கொண்டனர். அவர்கள் இந்தியாவின் வலையில் இருந்து தப்பித்து, தமது தளத்தை தமிழீழத்தில் உருவாக்கிக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் இந்தநடவடிக்கை இந்தியாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. இலங்கை மீதான தனது முழுமையான மேலாதிக்க எண்ணத்திற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதான புரிதலுடன் இந்தியா வேறு விதமானதொரு நகர்வை மேற்கொண்டது. நெல்லியடியில் விடுதலைப் புலிகள் முதலாவது தற்கொடைத் தாக்குதலை மேற்கொண்ட செய்தி இந்தியாவின் புதிய நகர்வுக்கான அவசரத்தை உருவாக்கியது. பிரமாணடமாக வளர்ந்து வரும் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்துவதை முதல் நோக்கமாகவும், சிங்கள அரசை மிரட்டிப் பணியவைப்பதை இரண்டாவது நோக்கமாகவும் கொண்டு 'இந்திய அமைதிப் படை' தமிழீழ மண்ணில் கால் பதித்தது.

விடுதலைப் புலிகளைத் தான் வளர்த்த ஆயுதக் குழுவாக நினைத்து தரை இறங்கிய பின்னர்தான் அவர்களுக்குப் பின்னால் அணி திரண்டுள்ள மக்கள் பலமும், விடுதலைப் புலி உறுப்பினர்களின் உறுதியும் இந்தியாவுக்குப் புரிந்தது. இதனால், விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்வதற்காகத் தமிழீழ மண்ணில் முழுமையான போர் ஒன்றை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கு உருவாக்கியது.

இந்தியப் படைகளுடனான போரின்போது விடுதலைப் புலிகள் வகுத்த இராஜதந்திரம் இந்தியா தனது படைகளை இலங்கையிலிருந்து திரும்ப அழைக்கவேண்டிய கட்டாயத்துள் தள்ளியது. இதைத் தனது அவமானமாகக் கருதிய இந்தியாவுக்கு 'ராஜீவ்' படுகொலை இன்னுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாலியப் பெண்ணான சோனியா காந்திக்கு, பிராந்திய அரசியலிலும் பார்க்கத் தனது பழிவாங்கலே முக்கியமானதாக இருந்தது. இதனால், சிங்கள அரசை விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரைத் தொடங்கும்படி தூண்டி விட்டதுடன், அதற்குத் தேவையான அத்தனை பலத்தையும் சிறிலங்கா அரசுக்கு வழங்கியது.

தனது பழிவாங்கல் நடவடிக்கை முற்றுப் பெற வேண்டும் என்பதற்காக, அனைத்துலக நிர்ப்பந்தங்களையும் மீறி, சிங்கள அரசின் இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை நின்றதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் வயது, பால் வித்தியாசமின்றிப் படு கொலை செய்வதற்கும் தடைகள் உருவாகாமல் பார்த்துக் கொண்டது. முள்ளிவாய்க்காலில், இந்தியப் பேயரசின் வெறியாட்டம் தணிந்தாலும், அதை நடாத்தி முடித்த சிங்கள அரசுக்குப் பக்க பலமாக நின்று அது தொடர்ந்தும் நடாத்தி வந்த இனக் கொடூரத்திற்கும், இன வன்முறைக்கும், படுகொலைகளுக்கும் அனுசரணை வழங்கியது.

விடுதலைப் புலிகளைப் பழிவாங்கியே தீரவேண்டும் என்ற இரத்தவெறிச் சிந்தனையினுள் தனது பிராந்திய தேலாதிக்கக் கனவைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் இந்தியா, தற்போது மீண்டும் ஒரு காட்சிப்படுத்தலுக்குத் தன்னைத் தயாராக்கி வருகின்றது. அதற்கு, மீண்டும் ஈழத் தமிழர்களே இந்தியாவின் பகடைக் காய்களாக்கப்பட உள்ளார்கள்.

சிங்கள தேசத்தில் மேலோங்கிவரும் சீனத் தலையீடுகளும், சீன முதலீடுகளும் இந்தியாவின் தென் பிராந்தியப் பகுதிக்குத் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றது. வளர்ந்து வரும் வல்லரசாகத் தன்னை வெளிப்படுத்திவரும் இந்தியாவின் பிராந்தியக் கனவுக்கு, சீனாவின் இந்து சமுத்திர மேலாகிக்க முயற்சியும், முத்துமாலை வியூகமும் அச்சத்தை ஊட்டி வருகின்றது. சிறிலங்கா அரசைத் தன்னிடம் மண்டியிட வைக்கும் பிரம்மாஸ்திரமாக இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு கைகொடுக்கப் போவதில்லை. இந்தியாவிடம் தற்போது சிக்கிக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள அரசியலின் புதிய வீரியத்தில் வெறும் 'டம்மி' துப்பாக்கி என்பதையும், அதை வைத்து சிறிலங்கா அரசை மிரட்ட முடியாது என்பதையும் இந்தியா நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.

தற்போதைய நிலையில், சிறிலங்கா அரசை அடிபணிய வைக்கும் பலம் ஒன்று இலங்கைக்கு வெளியே இருப்பதும், அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்பதும் இந்தியாவுக்குப் புரிந்துள்ளது. இதற்கான அடித்தளம் தற்போது இடப்பட்டு வருகின்றது. அதை விடவும் முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்கு ஈழத் தமிழர் விடயத்தில் தான் மிகுந்த அக்கறையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் ஈழத் தமிழர் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கப் போகின்றது. ஈழத் தமிழர்களது பேரழிவுக்கும், தொடரும் அவர்களது அவலங்களுக்கும் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டும், தமிழக மினவர்கள் தொடர்ந்தும் சிங்களப் படைகளால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு தமிழக அரசோ, இந்திய மத்திய அரசோ எந்த உருப்படியான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தியும் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றே நம்பப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழத் தமிழர்கள் மீதான யுத்தத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பவ்லா காட்டி வாக்குக்களைப் பெற்றது போல், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரசும் தமது வாக்குக்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், புதியதொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. அதாவது, காங்கிரஸ் கட்சி நடாத்தவுள்ள குரங்காட்டத்திற்கு இன்னொரு குரங்கு தேவைப்படுகின்றது. அதாவது, 'ஆடரா ராமா ஆடு, பாயடா ராமா பாயு' என்ற காங்கிரஸ் தாளத்திற்கு ஆடவேண்டிய இன்னொரு நபர் தேவை.

ஏற்கனவே, தமிழீழ அரசியல் தளத்தில் சொன்ன சொல் தட்டாத நல்ல பிள்ளையாக சம்மந்தர் தனது சேவையைத் தொடர்கின்றார். அடுத்து, புலம்பெயர் தளத்தில் இன்னொரு பேச்சைத் தட்டாத, எதிர்த்துப் பேசாத நல்ல பிள்ளை ஒருவர் தேவை. அதற்காகத் தேசங்கள் எங்கும் தேடி அலையாத படிக்கு இந்தியாவால் இனங்கண்ட நல்ல பிள்ளையாக திரு. ருத்திரகுமாரனே தெரிவுக்குரியவராக உள்ளார்.

வழக்கம்போலவே, திரு. ருத்திரகுமாரன்மீதான காழ்ப்புணர்ச்சியால் நான் இதை எழுதுவதாக அவரது பக்கவாத்தியங்கள் என்மீது எகிறி விழலாம். ஆனால், தமிழீழ மக்களை நேசிக்கும், தமிழீழ விடுதலையை யாசிக்கும் என்னால் வரப்போகும் கேடுகளை தமிழ் மக்களுக்கு அபாய அறிவிப்பாக எச்சரிக்கை செய்யாமல் விட்டுவிட முடியாது.

திரு. ருத்திரகுமாரனுடனான நெருக்கமான தொடர்புக்கு இந்திய உளவுத்துறை தமிழகத்தில் கைதாகிச் சிறையில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைப் பயன்படுத்தியுள்ளது. அதாவது, 'தமிழீழ மக்களது பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு சார்பாக திரு. ருத்திரகுமாரன் ஆதரவு வழங்க வேண்டும்' என்று இந்தியாவினால் கேட்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்வு 'தமிழீழத் தனியரசு' என்பதாகவோ, குறைந்த பட்சம் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டு, சிறிலங்கா அரசால் நிராகரிக்கப்பட்ட 'இடைக்கால தன்னாட்சி சபை'யாகவோ அமையப் போவதில்லை.

எதுவுமே இல்லாத ஒன்றிற்கான பேரம்பேசல் ஒன்று இந்தியாவால், குறிப்பாக ஆளும் காங்கிரஸ் அரசால் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலுக்கு முன்பாக அரங்கேற்றப்படப் போகின்றது. 'தமிழீழ மக்கள் தவிர்க்க முடியாத சக்தியான இந்தியாவைப் பகைத்து எதுவுமே செய்ய முடியாது' என்ற உழுத்துப்போன தத்துவங்களோடு திரு. ருத்திரகுமாரன் அதில் பங்கேற்கப் போகின்றார். அதற்குரிய வெகுமதிக்கான பேரம் பேசல் தற்போது அந்தரங்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்படியான வலைகள் பல விரிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் பிரதமராகப் பதவியேற்கவிருந்த திரு. ருத்திரகுமாரனுக்கு அனுசரணையான மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதிப் பிரதமர்களையும், மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட்ட 7 மந்திரிகளையும் அரசியல் யாப்பில் சேர்த்துக்கொள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் முயன்றனர். ஆனாலும், திரு. ருத்திரகுமாரன் தான் நினைத்தது போலவே சகல அதிகாரங்களும் மிக்க பிரதமராகத் தன்னைத்தானே நியமித்துக்கொண்டார். 115 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 48 பேரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் ஒரு ஜனநாயக கேலிக் கூத்தையும் அரங்கேற்றியுள்ளார்.

தமிழீழ மக்கள் அச்சத்தினால் வாயடைத்துப்போயிருந்தாலும், அவர்களுக்காகப் போராடும் பெரும் கடமையினைத் தமதாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழத் தாயகம்' என்ற இலட்சியத்தை விட்டுத் திசைமாறும் எவரையும் தமிக்கவும் மாட்டர்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இது, புலம்பெயர் தமிழர்களுக்குத் தலைமை வகிக்க முன்வரும் அனைவருக்கும் பொருந்தும்.

- அகத்தியர்-

Comments