சிங்களம் விரித்த வலையும், சிக்கிக் கொண்ட பேராசை பிடித்த மீன்களும்!

சிங்களம் விரித்த வலையில் சிக்கிக் கொண்டன அந்தப் பேராசை பிடித்த மீன்கள். அந்தச் சின்ன மீன்கள் ஊடாக உலகம் எல்லாம் பரந்து வாழும் பெரிய மீன்களைப் பிடித்துத் தம் இனத்திற்கு விருந்தாக்குவது சிங்களத்தின் திட்டமாக இருந்தது.



அந்த ஒன்பது மீன்களுக்கும் அறுசுவை உணவுடன், அவர்கள் ரசனைக்கேற்ப அத்தனை விருந்துகளும் வழங்கப்பட்டன. மீன்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அங்கே, ஏற்கனவே சிங்கள தேசத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்ட இன்னொரு மீனும் அந்த விருந்துகளில் கலந்து கொண்டு தன் எஜமானர்களின் புகழ் பாடி மகிழ்ந்தது. இவர்கள்தான் எங்கள் கடவுள்கள் பின்னர் பிடிபட்ட மீன்களும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டன. ஒரு வார விருந்துக்குப் பின்னர், அந்த மீன்களுக்கு வலிக்காமலே மாய வலையால் சிறையிட்டு, அந்த மீன்களை அவர்கள் கடலிலேயே மீண்டும் நீந்த விட்டது சிங்களம்.




வலிந்து வலையில் சிக்கிக்கொண்டாலும், சிங்களத்தின் நோக்கத்தையும், அந்தத் தேசத்தின் விருந்தாளியாகக் கவனிக்கப்படும் பெரிய மீனின் பேராசையையும் அந்த மீன்களில் ஒன்று நன்றாகவே புரிந்து கொண்டது. ''எங்களைப் பலிப் பொருளாக்கி எம் இனத்தவரை விருந்தாக்கச் சிங்களம் திட்டம் போடுகிறது. எனவே, சிங்களத்தின் சூழ்ச்சிக்குத் துணை போகாதீர்கள்'' என்று அந்த மீன் மற்ற மீன்களை எச்சரித்தது.

விருந்திலும், மருந்திலும் மயங்கிக் கிடந்த மீன்கள் அந்த மீனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தன. அந்த ஒரு மீன் ''நான் சிங்களத்தின் வஞ்சகத்திற்குத் துணை போக மாட்டேன்'' என்ற ஆவேசத்துடன் துள்ளிக் குதித்தது.

வலியோடு போராடிய அந்த மீன் தன்னை அந்த மாய வலையிலிருந்து விடுவித்துக்கொண்டு, தன் உறவுகளைத் தேடி ஓடியது. நடந்து முடிந்த தவறுகளைத் தன் இனத்திடம் ஒப்புக்கொண்ட, திருந்தி வந்த மீன் சிங்களத்தின் சதிகளையும், அதற்கு உடந்தையாகச் செயற்படும் அந்தப் பெரிய மீன் பற்றியும் எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்தது.



தூண்டில் பொருத்தப்பட்ட அந்த எட்டு மீன்களும் அந்தத் திருந்திய மீனை எள்ளிநகையாடியது. ''சிங்களமே எங்கள் எஜமானர்கள். அவர்களே எங்கள் இரட்சகர்கள். அவர்களே எம் இனத்தின் மீட்பர்கள். ஆக்கவும், அழிக்கவும், காக்கவுமான கடவுளர்கள் அவர்கள். அவர்களுடன் எங்களுக்கான தலைவனும் சேர்ந்தே இருக்கிறார். எங்கள் வளங்களையும், வாழ்க்கையையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டால் மட்டுமே, எம் இனத்தின் எதிர்காலத்தைச் சீர் செய்ய முடியும்... எங்களுடன் வாருங்கள்... எங்கள் கடவுளர்களிடம் உங்களை அழைத்துச் செல்கிறோம்'' என்று பல சத்தியங்கள் செய்தன.

சிங்களத்திடம் விருந்தாளியாகத் தங்கிவிட்ட பெரிய மீனின் உறவுகள், அதனை ஆமோதித்து ஆரவாரம் செய்தன. தம் இனமே அழிந்தாலும் பரவாயில்லை, தம் தலைவன் சிங்களத்தின் அத்தனை சொர்க்கங்களையும் அனுபவிக்க வைப்பதே தங்கள் பிறப்பின் அர்த்தம் எனப் புதியதொரு 'இசம்' பேசின.



''சிங்களத்தால் சிறை பிடிக்கப்பட்டு இருக்கும் மற்ற மீன்களைக் காப்பாற்றுவதற்கும், சிங்களத்தால் சீரழிக்கப்பட்ட மற்ற மீன்களை வாழ வைக்கவும் சிங்களத்திடம் விருந்தாளியாக இருக்கும் பெரிய மீனால் மட்டுமே முடியும்'' என்ற சிங்களத்துச் சதிவலையில் சிக்கிக்கொண்ட மீன்களின் எந்தத் தத்துவமும் புலம் பெயர் மீன்களிடம் விற்பனையாகவில்லை. ஏற்கனவே சிங்களத்திடம் பாடம் கற்றிருந்த புலம்பெயர் மீனினம், தப்பி வந்த மீனின் சாட்சியத்தினால் இன்னமும் தெளிவாகியது. சிங்களத்தையும், அவர்களிடம் விருந்தாளியாகத் தங்கிவிட்ட பெரிய மீனின் திட்டத்தையும் நன்றாகவே புரிந்து கொண்டதால், புலம்பெயர் மீனினம் தப்பித்துக் கொண்டது.

தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சிங்களம், வேறொரு சதிவலையால் புலம்பெயர் மீனினத்தைச் சிறை பிடித்துத் தன் இனத்திற்கு விருந்தாக்கும் முயற்சியில் சளைக்காமல் மீண்டும் யோசிக்க ஆரம்பித்தது.


Comments