கே.பி. குழு விரிக்கும் சதி வலைகள்

தமிழீழம் தோற்றுப்போனதா...? தோற்கடிக்கப்பட்டதா...? என்ற பல கேள்விகள் முள்ளிவாய்க்காலில் உருவான போர்க்கள மாற்றத்தின் பின்னரான விவாதமாகத் தொடர்கின்றது.

தமிழீழ மண்ணில் விடுதலைப் போர்க்களம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே, எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தைப் புலம்பொயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார். தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்காக பொறுப்பை புலம்பெயர் தமிழர்களின் தோள்களில் ஒப்படைத்திருந்தார்.


நடக்கப்போவதை பல பத்து வருடங்களுக்கு முன்னரே கணித்து அறிந்து கொள்ளும் தீர்க்கதரிச சிந்தனை கொண்ட எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் நிகழ்த்தி முடித்த இறுதி வேள்வித் தீ, தோற்பதற்கான முடிவுரை அல்ல... மீண்டும் எழுவதற்கான நெருப்புக் குளியல். தன்னையும், தமிழீழ மண்ணையும் மையப்படுத்தி எதிரிகளும், துரோகிகளும் பின்னிய வலையினுள் நின்றபடியே தமிழீழ மண்ணின் மீட்புக்கான போர்க் களத்தை இன்னொரு வடிவமாகப் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைத்த அந்தப் பிதாமகனின் அக்கினித் தாண்டவம் இன்று புலம்பெயர் தமிழர்களைப் பற்றிப் பிடித்துப் பரவி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போர்க்களம் தோற்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதல்ல... அது தோற்கடிக்கப்பட முடியாத, பொங்கி எழும் வரலாற்றுப் பெருவெள்ளம். அதனை எந்தத் துரோகங்களாலும் தேற்கடிக்கப்பட முடியாது. அந்த நிதர்சனத்தை புலம்பெயர் தேசத்துப் புல்லுருவிகள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு, புல்லுருவிகள் என்பது அசிங்கமான அர்த்தத்தைக் கொடுப்பதற்கானது அல்ல. அது, அதன் இயல்பான தன்மையைப் பேணும் நிலை. ஆனாலும், அதில் அறுவடை செய்ய நினைப்பதும், அதில் அறுவடை செய்யலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதும் அறியாமையின் உச்ச வடிவம்.

தற்போது, 'அவலப்பட்டுக்கொண்டிருக்கும் எமது மக்களை சிங்கள தேசத்துடன் இணைந்து காப்பாற்றப் போகின்றோம்' எனப் புறப்பட்டிருக்கும் கே.பி. குழுவினரும் அப்படி ஒரு அறுவடைக்கான கற்பிதங்களையே புலம்பெயர் மண்ணில் விதைக்கத் தலைப்பட்டுள்ளார்கள். கே.பி. மூலமாக அழைக்கப்பட்டு, கோத்தபாயவுடன் விருந்துண்ண வைக்கப்பட்டவர்களில் ஒருவர் நீங்கலாக, தற்போது தமக்கான பணிகளைப் புலம்பெயர் தேசங்களில் ஆரம்பித்துவிட்டார்கள். எமது மக்களின் அழிவுக்கும், அவலங்களுக்குமான காரணங்களையே எமது மக்களின் மீட்புக்கான பாதையாக எமக்குப் புதிய பாடம் புகட்ட முற்படுகின்றனர்.

விடுதலை என்பது விற்பதற்கும், வாங்குவதற்குமான பண்டமாற்றுப் பொருளாகக் கற்பிதம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள். சிங்கள அரசின் ஊடான எமது மக்களின் மீட்புப் பற்றி அதிக வியாக்கியானமும் செய்கிறார்கள். அதற்கான பல இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு, மின்னஞ்சல்கள் மூலமாக உங்கள் வீடுகளுக்குள்ளும் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள்.

நேற்றுவரை தேசிய விடுதலைப் போரின் பங்காளிகளாக எம்மால் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் இன்று எப்படி மாறிப் போனார்கள்? நேற்றுவரை எங்கள் மக்கள் மத்தியில் விடுதலைக்கான அவசியத்தை வலியுறுத்தி, விடுதலைப் போருக்கு வளம் திரட்டியவர்கள் இன்று சிங்கள தேசத்தின் இன அழிப்பை நியாயப்படுத்தி வளம் சேர்க்கும் வள்ளல்களாக மாறியது எப்படி?

தமிழீழ விடுதலைப் போருக்காய் நாம் இழந்தது கொஞ்சமா...? இலட்சக்கணக்கான எம் மக்களைப் பறி கொடுத்தோம்... பல்லாயிரக்கணக்கான போராளிகளைப் பறி கொடுத்தோம்... எங்கள் தேசத்தின் அத்தனை வளங்களையும் எதிரியிடம் இழந்தோம்... ஆனாலும், விடுதலைப் போருக்கான எந்த நியாயங்களையும் இன்றுவரை நாம் இழக்கவில்லையே...

முன்னரிலும் பார்க்க இப்போது எங்கள் மக்கள் அவலப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். முன்னரிலும் பார்க்க இப்போது எங்கள் மக்கள் அழிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். வதை முகாம்கள் மூடப்படவில்லை... சிறைச்சாலைகள் திறக்கப்படவில்லை... குறைந்த பட்சமாக, எமது மக்கள் இயல்பாக வாழ அனுமதிக்கப்படவில்லை...

ஆனாலும், சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து கொள்வது பற்றி இந்த ஞானிகள் தத்துவம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எங்கள் மக்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்படுகின்றார்கள்... எங்கள் மண் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுகின்றது... எங்கள் நாயகர்களின் கல்லறைகளும் சிதைக்கப்படுகின்றன... எங்கள் தேசத்தின் நினைவுச் சின்னங்களும் அழிக்கப்படுகின்றன... எங்கள் மக்களின் அழு குரல்கள் சிங்களச் சிப்பாய்களின் அணிவகுப்புக் காலோசைகளுக்குள் அடங்கிப் போய்விடுகின்றது... அவலங்கள் தொடர்கின்றன... இதில் எங்கிருந்து சமரசத்திற்கான தத்துவங்கள் உருவாக முடியும்?

'அவலத்தைத் தந்தவனுக்கே, அதனைத் திருப்பிக் கொடு' என்றார் எங்கள் தலைவர். 'அவலத்தைத் தந்தவனிடம் யாசகம் கேளுங்கள்' என்று உங்களிடம் யார் சொன்னார்கள்? இதற்காகவா நாங்கள் இத்தனையையும் இழந்தோம்...? இதற்காகவா களமாடிய இத்தனை மாவீரர்களை இழந்தோம்...? இதற்காகவா நாங்கள் இத்தனை தளபதிகளை இழந்தோம்...? இதற்காகவா நாங்கள் இத்தனை உறவுகளை ஈழ மண்ணில் புதைத்தோம்...?

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்... போராடி விடுதலை பெற்ற இனங்களின் தியாகங்களைப் படித்துப் பாருங்கள்... சமரசம் அற்ற சரணடைதல் என்பது மீளவே முடியாத நிரந்தர அடிமை நிலையையே எமது மக்களுக்கு உருவாக்கும். எதிரியின் சூழ்ச்சிக்கு கருணாவும், கே.பி.யும் பலியாகலாம்... புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் நீங்கள் பலியாகலாமா...? உங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லாத நிலையில், நீங்கள் எதிரியுடன் கை குலுக்கலாமா...?


எங்கள் தலைவன் சொன்னார் 'வரலாறே எனக்கு வழிகாட்டி' என்று. நெல்சன் மண்டேலாவின் வரலாற்றை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். கூண்டுக்குள் அடைக்கப்பட்டாலும் புலி எலியாக மாற்றம் பெறாது என்ற தத்துவம் புரியும். கை, கால்கள் கட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையிலும் அடங்க மறுத்து எதிரியால் சுட்டுக் கொல்லப்பட்ட விடுதலை வீரர்களின் ஒளித் தடத்தை இன்னொருக்கால் பாருங்கள்...

கட்டி வைக்கப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் தமிழீழ விடுதலையை மட்டுமே சுவாசித்த அந்த மாவீரனின் ஒளிப் படத்தை மீண்டும் ஒருக்கால் பாருங்கள்... வீர மரணம் அடைந்த பின்னரும், தமிழிச்சி என்பதால், அவள் ஆடை களைந்து அவமானப்படுத்தும் ஈனத்தனத்தை மீண்டும் தரிசியுங்கள்... உலகின் அத்தனை கொடுமைகளுக்கும் ஆளான எம் தேசத்து மைந்தர்களின் அவலங்களைக் கண்கொண்டு கவனியுங்கள்... இத்தனை கொடூரங்களும் உங்கள் மூலமான எங்கள் சரணடைதலுக்காகவா...?

அழிக்கப்பட்ட எம் மண்ணையும், எமது மக்களின் வாழ்வு நிலையையும் தரிசிக்க எலக அமைப்புக்களுக்கோ, ஊடகங்களுக்கோ, குறைந்த பட்சம் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் உங்களை அழைத்துச் சென்றதன் அர்த்தங்கள் ஒன்றும் புரியாத புதிர் அல்ல. எங்கள் போராட்டங்கள் மூலம் சிங்களத்தின் சுயரூபம் அம்பலப்படுத்தப்பட்டு வருவதால், அம்மணமாகிப்போல ராஜபக்ஷ சகோதரர்கள் உங்கள் மூலமாகத் தங்களை உடுத்திக்கொள்ள முயல்கிறார்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது.

சிங்கள தேசத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட உங்கள் வக்கிரங்கள் எங்களுக்கு நன்றாகவே புரிகின்றது. உங்களுக்கான வழங்கல்களும், வசதிகளும், சிங்களத்தின் வரவேற்பும் நிச்சயம் உங்களை உயர்த்தி வைக்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளோம்.

நீங்கள் விடுதலைப் பயணத்தின்போது பல உயரங்களைத் தொட்டவர்கள்... இப்போது, எமது மக்களின் துயரங்களின் ஊடாகப் பல கோடிகளைத் திரட்டும் உங்கள் கனவுகள் எங்களுக்குப் புரிகின்றது. எங்கள் மக்களை அல்ல, உங்களை மீட்பதற்கான உங்கள் திட்டங்களில் உள்ள சதிகள் எங்களில் பலருக்குப் புரிவது உங்களுக்கு கோபத்தைக் கொடுக்கலாம்... எங்களை அழிக்கவேண்டும் என்ற ஆசையையும் கொடுக்கலாம்... ஆனாலும் எங்கள் வேள்வி தொடரும்.

தமிழீழ மக்கள் இன்று வரை இழந்தது எதுவுமே வீணாகிப் போகாது, வீணாகிப் போக விடவும் மாட்டோம். போர்க் குற்ற விசாரணைகளையும், பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ளும் நிலையை மாற்றி, உங்கள் மூலமாகத் தம்மை விடுவிக்க முயலும் சிங்கள அரசின் சதிகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும்,

நாங்கள் வீழ மாட்டோம்!

நீங்கள் விரிக்கும் சதி வலைக்குள் நாம் சிக்கமாட்டோம்!!

நன்றி: ஈழநாடு

Comments