‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக.
ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு.
பனைமரத்தோடு அண்டி வைக்கப்பட்டிருந்த அந்த அலுமாரிக்குள் கடைசிநாட்களில் போராளிகளாகியவர்களது நகைகள் இருந்தன.
‘இதிலயே போட்டிட்டும் போகலாம். அல்லது நகைகளை எடுத்து எல்லாருக்கும் போட்டுக்கொண்டுபோகவும் குடுக்கலாம்.’ என்றேன்.
‘அது சனத்தின்ரது. என்ர கையால எடுத்து ஒருதருக்கும் குடுக்கமாட்டன். அப்பிடி குடுத்தனெண்டால் இவளநாளும் நான் நேர்மையாய் வாழ்ந்ததுக்கும் அர்த்தமில்லாமல் போயிரும்’ என்றாள் சந்தியா.
சரிதான் அதிலொன்றை நான் போட்டுக்கொண்டுபோக உண்மையிலேயே அந்த நகைக்குச் சொந்தக்காரி நின்று அது என்னுடையது என்றால் எனக்கு எப்படியிருக்கும்? கள்ளியைப்போல பார்க்கப்பட மாட்டேனா? யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும்.
எனக்கும் வேண்டாம் என்றது என் மனம். திறப்பை அந்த காப்பகழிக்குள்ளேயே விட்டெறிந்தாள் சந்தியா.
‘சந்தியா நான் காயப்பட்டால் என்னோட மினக்கெட வேணாம். நான் குப்பி கடிக்கிறன். தப்பித்தவறி மயங்கிட்டன் என்றால் என்னை கடிக்க வையுங்க’ என்று அவளிடம் சொன்னேன்.
‘ஓமக்கா. குப்பிய கொண்டுதான் போகனும். ஆமிக்காரர் எங்களை எப்பிடி நடத்துவாங்களோ தெரியாது. சிக்கலெண்டால் உடன கடிப்பம் என்னக்கா.’ என்றாள் சந்தியாவும். ஏனோ கால்கள் அவ்விடத்தைவிட்டு அசைய மறுத்தன.
படையினர் மிகமிக நெருங்கி வருவது புரிந்தது. தறப்பாள் விரிப்புகளோ பனைகளோ இல்லாவிட்டால் நேருக்குநேர் காணக்கூடிய தூரத்தில்தான் நிற்கிறோம்.
‘போகலாம் அக்கா. முதல்ல இவடத்த விட்டு மாறுவம்’ என்றபடி சந்தியா தன் பொய்க்காலை ஊன்றி மேலே ஏறினாள். அடுத்த காப்பகழிகள் வெறுமையாய் கிடந்தன.
சில காப்பகழிகளில் போராளிப்பெண்கள் நிற்கிறார்கள் என்பது பேச்சொலியில் புரிந்தது. நானும் பதுங்குகுழியைவிட்டு வெளியேறினேன். அவள் முன்னேயும் நான் பின்னேயுமாக நடக்கத்தொடங்கினோம்.
சேறையும் சகதியையும் மனித அரியண்டங்களையும் கடந்து பலநூறு தறப்பாள் விரிப்புகளையும் தாண்டி வீதிக்கு வந்தோம்.
வட்டுவாகல்வீதி மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. இலட்சக்கணக்கான எறும்புகளைப்போல ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு நகர்ந்தார்கள். ஆங்காங்கே கிடந்த பிணங்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.
வெடிகள் அவர்களை விரட்டிக்கொண்டே வந்தன. ஓட்டமும் நடையுமாக முண்டியடிக்கும் சனங்களின் செயலில் பதற்றம் மட்டுமே அப்பட்டமாய் தெரிந்தது.
பின்னுக்கு என்னதான் தெரிகிறது என்று திரும்பிப்பார்த்த என்னால் நம்பவே முடியவில்லை.
இதென்னதிது ஆங்கில திரைப்படமா அல்லது கனவா? என்று அருண்டு போகுமளவுக்கு இருந்தது நான் கண்ட காட்சி.
‘சந்தியா பின்னுக்கொருக்கா பாருங்க’ என்றேன் அதிர்ச்சியாய்.
என்னிலும் பதற்றம் அப்பியது. ஒருவர் கையை ஒருவர் இறுகப்பிடித்துக்கொண்டு நின்று பார்த்தோம். பாரிய புகைமண்டலம் ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.
கன்னங்கரேலென்ற புகையின் திரட்சியில் தூசுதும்புகளைப்போல நெருப்புத்துண்டுகளும் பறப்பது தெரிந்தது. உண்மையிலேயே என்னால் நம்பமுடியவில்லை. திரைப்படங்களில்கூட இப்படி பயங்கரமான காட்சியை நான் கண்டதில்லை.
புகையாலான அடர்த்தியாக இருந்த அந்த கரியபோர்வை எங்களைநோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. சுருள்சுருளாக கிளம்பியபடி வரும் அந்த புகைமண்டலம் பார்க்க பயங்கரமாய் இருந்தது. தாமதித்தால் அதற்குள் சிக்கி மூச்சுத் திணறித்தான் சாகவேண்டி வரும்.
‘அக்கா என்னக்கா இது! ஏனக்கா இப்பிடி இருக்கு?’ என்ற சந்தியாவின் குரல் நடுங்கியது. அந்த இராட்சத புகைக்கோளத்துக்குள் நின்று ஆயிரக்கணக்கான பேய்கள் எங்களை பிடித்து விழுங்க வருகின்றன என்பதைப்போன்ற அச்சம் கிளம்பியது.
நாலா பக்கமிருந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் சீறிவந்தன. நாங்கள் முதுகை வளைத்து குனிந்தபடி, விரைந்து நடக்க முயன்றுகொண்டிருந்தோம்.
சற்று நிதானமில்லாவிட்டாலும் நாயின் பிணத்திலோ ஆளின் பிணத்திலோ தடக்கிவிழ நேரும்.
வட்டுவாகல் வீதியிலும் வீதியை அண்டியுமே அனைத்து மக்களும் குழுமினார்கள். கடலின் கொந்தளிப்பையொத்த அவர்களின் கண்களில் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பேரேக்கம் தெரிந்தது.
விரட்டிக்கொண்டே வரும் கரும்புகையின் பயங்கரத்தை அவர்களால் சகிக்கமுடியவில்லை. அச்சமூட்டத்தக்க அந்த குரூர புகைமண்டலம் ஆகாயத்தை மேவிக்கவிழ்ந்து சூரியனை மறைத்துப்போட்டது.
‘அக்கா கெதியா போவம். போங்க போங்க’ என்றபடி எனது பையில் இறுக்கப்பிடித்துக்கொண்ட சந்தியா இப்போது என்பின்னால் இழுபட்டபடி வந்தாள்.
அவளுடைய வேகத்துக்கு பொய்க்கால் ஒத்துழைக்க மறுத்தது. அதை அடிக்கடி சரிப்படுத்திக்கொண்டே எட்டி நடந்தாள். எங்கேதான் போவது? யாரிடம்தான் விசாரிப்பது? எல்லோருக்கும் அதே கேள்விகள்தான்.
திணறிக்கொண்டிருக்கும் சனங்களை பார்க்க என்னவோபோல் இருந்தது. ஒருவிதமான குற்ற உணர்வு மனசுக்குள் கிடந்து இம்சைப்படுத்தியது.
ஓரமாக ஒதுங்கிநின்று அலைமோதும் மக்களை பார்த்துக்கொண்டு நின்றோம். அருகில் காயப்பட்ட போராளிகள் பலர் படுக்கையில் கிடந்தார்கள். யாரோ ஒரு அம்மா அவர்களுக்காக தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார்.
படுக்கையில் கிடந்த அத்தனைபேரின் கண்களும் ஆற்றப்படும் தேநீரின்மீதே இருந்தன. விடுதலைக்காக என்று இறுதிவரை போராடி தம்முடலின் சக்தியையெல்லாம் இழந்துவிட்டு எலும்பும் தோலுமாகத் தெரிந்த அந்த போராளிகளை பார்க்கப்பார்க்க நெஞ்சம் வெதும்பியது.
‘அக்கா போங்க போங்க. பயப்பிடாமல் போங்க. ஐ.நா.தான் உங்கள பொறுப்பெடுக்கும். யோசிக்க வேணாம்.’ என்றான் அருகில் வந்த ஒரு போராளி.
எனினும் விரக்தியும் வேதனையுமான சிரிப்பொன்று அவனது ஒடுங்கிய முகத்தில் விழுந்தது. ‘உண்மையாவா?’ என்றேன்.
நெருப்புக்குள் நின்ற இத்தனை நாட்களும் அந்த ஐ.நாவைத்தானே எதிர்பார்த்துக்கொண்டு நின்றோம். ‘ம். ஐ.சி.ஆர்.சி வந்து பாதுகாப்பாய் கூட்டிக்கொண்டு போகும். பயப்பிடாம போங்க’ என்றான்.
நம்பிக்கையாக. அவனுடைய வார்த்தைகள் ஆறுதலை ஏற்படுத்தத்தான் செய்தன. அப்படியென்றால் போகலாம்தான் என்றது மனது. ஆனாலும் என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருக்கத்தான் செய்தது. மேலும் சிறிதுதூரத்திற்கு நடந்தோம்.
வீதியோரமாய் குந்திக்கொண்டிருந்தவர்களில் எனக்குத்தெரிந்த குடும்பமொன்று இருந்தது. அவர்களின் வதனங்களோ ஆகாயத்தைவிட மோசமாக இருண்டுகிடந்தன.
தன் குழந்தைகள் இருவரையும் மடியில் வைத்துக்கொண்டிருந்த தந்தையான போராளியின் கண்களில் வெறுமை மட்டுமே இருந்தது.
அவரது கையில் இன்னும் கழற்றப்படாத இயக்கத்தகடு. ‘அண்ணா. தகட்ட கழட்டுங்க’ என்றேன்.
பட்டென சிவப்பேறிய அவரது கண்களில் நீர்முட்டியது. பற்களை இறுகக்கடித்து தன் உணர்வின் கொதிப்புகளை அவர் அடக்குவது புரிந்தது.
அவருடைய மனைவி துயரார்ந்தவளாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். சோகம் எங்களின் தலைகளை நிலத்தைப்பார்க்க குனியவைத்தது.
கையாலாகாதவர்கள் ஆனோமே என்ற விரக்தி எங்களை பேசாமடந்தைகளாக்கியது.
வீதிக்கு முதுகு காட்டியபடி குந்திக்கொண்டிருந்த என்னை பின்புறத்தில் இருந்து யாரோ தோளில் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் என் பழைய சிநேகிதி கிருபா.
என்னை இழுக்காத குறையாக எழுப்பி தன்னுடன் அழைத்துச்சென்றாள். சந்தியாவும் என்னோடேயேதான் வந்தாள்.
எங்கள் இருவரையும் தங்களது பதுங்குகுழியருகே இருத்திய கிருபா சுகம் விசாரித்தாள். பெரிய மனுசிமாதிரி எனக்கு அறிவுரை சொன்னாள்.
‘எங்க நிண்டாலும் பங்கர் இல்லாத இடத்தில நிக்கக்கூடாது. அதில மாதிரி வெறும் இடத்தில இருக்கக்கூடாதக்கா. இந்த பங்கருக்கு பக்கத்திலயே இருங்க. சரியா.’ நான் ஆமென்று தலையை ஆட்டிவைத்தேன்.
அவளது உறவினர்கள் மொத்தப்பேரும் இரண்டு காப்பகழிகளில் இருந்தார்கள். அவ்விடத்தில் நின்ற ஒரேயொரு பனைமரத்தோடு தலைவைத்து படுத்திருந்த கிருபாவின் தந்தை நெஞ்சில் வானொலிப்பெட்டியை வைத்து மாறிமாறி செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார்.
காப்பகழிக்குள் குந்திக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பதும் தேநீர் தயாரித்து கொடுப்பதும் கிருபாதான்.
எங்களுக்கும்கூட பால்தேநீர் ஆற்றித்தந்தாள். வயிராற சாப்பிட்டு நாட்கணக்காகிவிட்டதுதான். ஆனாலும் வயிற்றில் பசியே இல்லை.
அந்தத்தேநீர் அமுதத்தைவிடவும் இனிமையாக இருந்தது. பருகிவிட்டு அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தோம்.
எதுவுமே பேசாமல் யோசனையோடு இருந்த எங்களுக்கு கிருபாவின் தந்தையாரும் துணைவரும் மாமியாரும் என மாறிமாறி ஆறுதல் வார்த்தைகளை சொன்னார்கள்.
அவளின் ஒரே மகன், சின்ன மகன்கூட என்னை ஞாபகப்படுத்தி புன்னகைத்தான். எத்தனை அழகாக இருந்த குட்டிப்பையன் அவன்.
எப்படியோ தெரிந்தான். அவனுடைய கன்னத்தசைகளையே காணவில்லை. அந்தச் சின்னஞ்சிறுவனின் புன்னகையில்கூட துயரம் வழிந்தது.
நாங்கள் இருந்த காப்பகழிக்கும் படையினர் நின்ற இடத்திற்கும் குறைந்தது அரை கிலோமீற்றர் தூரந்தன்னும் இருக்கவில்லை.
காப்பகழிகளில் இடம்பிடித்துக் கொண்டவர்கள் அடிக்கடி எழுந்து வீதியில் அலைமோதும் சனக்கூட்டம் நகர்கிறதா இல்லையா என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டேதான் இருந்தார்கள்.
எங்களையே உருக்கி வார்த்துவிடக்கூடியதாய் வெக்கை வாட்டியது. அடிக்கடி சீறிப்பாயும் சன்னங்கள் எங்கள் தலைகளை துளைத்துவிடாமல் குனிந்து குனிந்து குந்திக்கொண்டிருந்து நேரத்தை போக்கினோம்.
மாலைநேரம். மணி நான்கை எட்டியது. சனக்கூட்டம் நகரும் ஆற்றைப்போல விரைந்தது. வீதியோரம் நின்றவர்கள் திடீரென இரைந்தார்கள்.
‘ஆமி. ஆமி வாறான். வாறான்’ என்ற சொற்களில் பதற்றம், பயம், நிம்மதி, கலக்கம், சந்தோசம் என்ற எல்லாமும்தான் தெரிந்தன. என் கண்களில் பச்சை சீருடை தெரிந்ததும் கரம் தன்னிச்சையாய் குப்பியை பற்றியது.
அடுத்த கணம் என்னை யாரோ பிடித்து விழுத்தினார்கள். கிருபா கிறீச்சிட்டாள், ‘அந்த குப்பிய முதல்ல கழட்டுங்க மாமி’ என்று.
‘இஞ்சவிடு பிள்ள. விசர் மாதிரி முடிவெடாத. இனி எதுக்காக நீ சாகணும்? விடு அதை’ என்று அதட்டிக்கொண்டே என் கழுத்திலிருந்து கழற்றிய குப்பியை தானிருந்த காப்பகழிக்குள் புதைத்தார்.
‘எழும்பு. சனத்தோட சனமாய் நட’ என்று கைகாட்டி கட்டளையிட்டார் கிருபாவின் மாமி. முட்டிக்கொண்டுவந்த அழுகையை அடக்க முயன்றேன்.
‘யோசிக்காதை. எத்தினபேர் போயினம் பார். எழும்பு எங்களோட வா’ என்று உரிமையாய் சொன்னார் அந்தத் தாயார். நானும் ஒரு நடைப்பிணம்போல நகர்ந்தேன்.
வீதியில் ஆங்காங்கே சில பிணங்கள் கிடந்தன. அவற்றை விலக்கி சனக்கூட்டம் நகர்ந்தது. இராணுவச் சீருடைகள், சட்டித்தொப்பிகள், நீட்டிய துப்பாக்கிகள் சகிதமாக படையினரை தொகையாகக் கண்டபோது உள்ளம் பதறியது. செய்வதற்கு எதுவுமில்லை. சொல்வதற்கும் ஒன்றுமில்லை.
‘ஏ நங்கி என்னை கல்யாணம் கட்ரது’ என்று முகமாலை சோதனைச் சாவடியில்நின்று சமாதான காலத்தில் கேட்டவனை முறைத்ததைப்போல இனி எந்தப் படையினனையும் முறைக்க முடியாது.
அதைவிட அசிங்கமாய் கேட்டாலும்தான் இனிமேல் என்ன சொல்ல முடியும்? இந்தப்பயணம் எந்த நரகத்திற்கு கொண்டுபோய் விடப்போகிறதோ என்று பெருமூச்சு கிளம்பியது. பார்க்கும் இடமெல்லாம் படையினரே நின்றுகொண்டிருந்தார்கள்.
வந்துகொண்டிருக்கும் சனங்களை படையினர் நெருங்கவில்லை. எனினும் எட்டித் தொடமுடியாத இடைவெளியில் துப்பாக்கியை தயார்நிலையில் பிடித்தபடி சிலைகளைபோல நின்றார்கள்.
மக்கள் நடந்துவந்த சரசரப்பு சத்தத்தைதவிர அங்கொன்றும் இங்கொன்றுமாய் துப்பாக்கிச் சத்தமும் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. வந்துகொண்டிருந்த எங்களை வாங்க வாங்க என்று இருகரங்களையும் மேலே தூக்கி ஒரு இரட்சகனைப்போல அழைத்துக்கொண்டிருந்தவனை எனக்கு ஏற்கெனவே தெரியும்.
தன்னை புலனாய்வுத்துறை என்று சொல்லிக்கொண்டு, ‘சனங்களை பலவந்தப்படுத்துவதைப்பற்றி கவலப்பட ஒண்டுமில்ல. ஆக்கள பிடிச்சு களத்துக்கு தாங்க’ என்று சொல்லி, பரப்புரை பணியில் நின்ற போராளிகளுக்கு வடை வாங்கி கொடுத்தவன்தான் அவன்.
இப்போது பெரிய மீட்பனைப்போல நிற்கிறானே என்று யோசித்தபோதுதான் எல்லாமே புரிந்தது. அவனொரு சிங்களப்படை உளவாளியாக இருக்கக்கூடியவன் என்று. வடைகொடுத்த அன்றே தோழிகளுடன் கதைத்தது சரிதான்.
சந்தேகப்பட்ட அன்றே அவனை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அன்றைய நாட்களில் விசாரணைப்பகுதி என்று எதுவும் இருக்கவில்லையே.
படையினருக்காக போராளிவேடம் பூண்டு மக்களுக்கெதிரான செயல்களை செய்ய போராளிகளை தூண்டியவன். இப்படி கடைசிநாட்களில் கட்டாய ஆட்சேர்ப்பில்நின்ற பலரை, பச்சைசீருடையுடன் அந்த வீதியில் காணப்போகிறோம் என்பதை அப்போதுகூட நான் எதிர்பார்க்கவில்லை.
வட்டுவாகல் வீதியில் இருத்திவைக்கப்பட்ட சனங்களுக்காக மண்ணணை மீது நின்றவன் கொச்சை தமிழில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தான். “ஏ ஏ கொஞ்சம் கொஞ்சம் பேரா போங்க” என்று திடீரென சத்தமிட்டான்.
சொல்லத்தகாத வார்த்தைகளால் ஏசினான்தான் என்றாலும் குழந்தைகளோடு நின்றவர்களையும் கர்ப்பிணிகளையும் காயமடைந்தவர்களையும் முதலில் செல்ல அனுமதித்தான். தான் மனிதாபிமானம் உள்ளவன்தான் என்பதை செயலால் வெளிப்படுத்திய அவன் போராளிகளை படுகேவலாமாக பேசினான்.
“நாங்க உங்களுக்காக கஸ்ரப்படுறம். குளிக்காம நிக்கிறம். நித்திரை இல்லாம நிக்கிறம். பாருங்க எங்கள. நாங்க ஏன் இப்பிடி கஸ்ரம் படணும்? உங்களுக்காக தான்” என்றவன் தனது ஊத்தை உடையை தொட்டுக்காட்டினான்.
“பாருங்க இன்னும் பசி. சாப்பாடு இல்ல. வேற ஆமி தமிழ் தெரியாது. நான் மட்டும் நிக்கணும். உங்களுக்காகதான் நிக்கிறது” என்று அவன் தான் பசியுடன் நிற்பதாகவும் அது எங்களுக்காக தான் செய்யும் தியாகம் என்றும் சொன்னான்.
கொலைப் பட்டினி கிடந்த எங்களில் எவரையும் அவனது அந்த வார்த்தைகள் தொடவில்லை. விட்டால் காணும் என்று உள்ளே சென்றுவிடவே துடித்தார்கள் சனங்கள். அதனால் கொஞ்சப்பேர் போங்க என்றதும் பலநூறு பேராய் எழுந்து சென்றார்கள்.
படையினரின் கெட்ட வார்த்தைகளால் மட்டும்தான் அவர்களாலும் சனங்களை அடக்கிவைக்க முடிந்தது. இருபது முப்பது நிமிட இடைவெளி விட்டுத்தான் இருநூறு முன்னூறு பேர்களை அனுப்பினான். மற்றைய நேரங்களில் யாரையாவது ஏசிக்கொண்டுதான் இருந்தான்.
எலும்புந்தோலுமாய் ஆறாத காயத்துடன் ஓரமாய் எழுந்துநின்ற ஒருவனை அதட்டி இருத்திய படையினன், “நீ கொட்டி? நீ கொட்டி?” என்றான். எதுவுமே பேசாமல் நின்ற அவனை இருக்கச்சொல்லி அதட்டினான். “அங்க வா உன்னை கவனிக்கிறன்” என்று அசிங்கமாய் ஏசினான்.
நாம் என்ன பாவம் செய்தோம். சுதந்திரமாக வாழ விரும்பியது குற்றமா? விடுதலைக்காக போராடப்போனது குற்றமா? எங்களை கொல்லவந்தவர்களை எதிர்த்துப் போராடியதுதான் தவறா? எதற்காக இப்படி அடிமைகளாகிறோம்? விம்மிய மனதை கல்லாக்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.
அருகில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து செல்லும்போது நானும் எழுந்து மண்ணணையை கடந்தேன். வட்டுவாகல் பாலத்தில் கால்வைத்தபோது மனது வெறுமையாகிப்போனது.
பாலம் பல உடைவுகளோடேயே செப்பனிடப்படாமல் கிடந்தது. நான் சந்தியாவைவிட்டு விலகியேதான் நடந்தேன். அது எனக்கும்கூட வேதனையாகத்தான் இருந்தது. அவள் தலைமுடியை குட்டையாக வெட்டியிருந்ததாலும் பொய்க்காலுடன் நடந்ததாலும் படையினர் அவளை அடிக்கடி தடுத்து நிறுத்தினர்.
பாலத்தின் விளிம்புகளில் நின்ற படையினர் ஐதாகச்செல்லும் மக்களை அவதானித்துக்கொண்டேதான் நின்றனர். நான் தனியே செல்வது பாதுகாப்பானதா இல்லையா என்பது எனக்கு புரியவில்லை. பாலத்தின் கரையோடு நடந்தேன்.
பாலத்தில் மோதிய முல்லைக்கடலின் அலைகள் மெதுவாய் சலசலத்தன. இடப்புறமாய் நடந்த நான் அலைகளில் பார்வையை இறக்கினேன். முல்லைக்கடல் சோகமாய் அழுதுகொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தால் படையினரின் முகத்தை பார்க்கவேண்டி இருக்கும் என்பதால் அவர்கள் பார்வையால் விசாரிப்பார்கள். நான் பாலத்தின் தரையையே பார்த்துக்கொண்டு நடந்தேன்.
மோதிய அலைகள் என்னோடு ஏதோ பேசத்துடிப்பது போன்ற உணர்வு. அப்போதுதான் அவதானித்தேன். அங்கேயும் சில பிணங்கள் கிடந்தன. அவை பாலத்தில் அலைகளால் ஒத்துண்டபடி பொம்மைகளைப்போல மிதந்தன. ஏனோ நாற்றம் அடிக்கவில்லை. ஆனால் பிணங்கள் வெண்கட்டிகளைப்போலத் தெரிந்தன.
தொடர்ந்து பார்க்கப்பிடிக்காமல் நடையில் சற்று வேகத்தை கூட்டினேன். சந்தியாவை மறித்து எல் ரி ரி என்றவர்கள் இன்னுந்தான் அவளிடம் அவளுக்குப் புரியாத மொழியில் விசாரித்துக்ககொண்டு நிற்கிறார்களா இல்லையா என்று திரும்பிப் பார்க்க யோசனையாக இருந்தாலும் என்னையும் தடுத்து கதைகேட்டுவிட்டால் எவ்வளவு நேரம்தான் இன்னும் மெதுவாக நடக்க முடியும்?
பாலம் கடந்துவிட்டன கால்கள். மக்கள் இரண்டு வரிசைகளாகி வீதியில் இருபுறத்திலும் நடந்தார்கள். நூற்றுக்கணக்ககான படையினரது பார்வையும் எங்களை துளைத்தன. பாடசாலைக்கு அருகினில்நின்ற ஆலமரத்தடியில் கொஞ்சப்பேர் குந்திவிட்டனர். அதனால் என்னாலும் சந்தியாவுக்காக காத்திருக்க முடிந்தது.
சற்றுநேரம் தாமதித்தவாறு நின்ற என்னை யாரோ பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு. மெதுவாக பார்வையால் துழாவினேன். இராணுவத்தினன் ஒருவன் வைத்தகண் வாங்காமல் என்னையே அவதானித்துக்கொண்டு நின்றான்.
உடனேயே நான் நகர்ந்துகொண்டிருந்த வரிசையொன்றில் என்னை திணித்துக்கொண்டேன். அந்த வரிசை விரைவாக பாடசாலையை கடந்து நகர்ந்தது.
பொட்டல் வெளியில் கம்பிவேலி அடைத்து சிறிய பாதையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலியூடாக இரண்டு வரிசைகளாக மக்கள் நகர்ந்தார்கள்.
மெல்ல மெல்ல நகர்வதும் நிற்பதுமாக இருந்தோம். மாலை சூரியன் எங்களை பார்க்க பிடிக்காவன்போல முகத்தை தொங்கப்போட்டுக்ககொண்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தான்.
கண்ணுக்கு தெரியக்கூடிய தொலைவில் உழவியந்திரம் ஒன்று சென்றது. சற்றுநேரம் கழிய இன்னொன்று இன்னொன்று என்று நகர்ந்த உழவியந்திரங்களின் பெட்டிகளில் மக்களின் தலைகளும் தெரிந்தன. “காயப்பட்ட ஆக்களை மிசின்பெட்டிகளில் ஏத்துறாங்க” என்று சொன்னார் ஒருவர்.
பாத்திங்களா? அங்க எண்டா காயப்பட்டதுகள் இந்நேரம் செத்திருக்குங்கள்.” என்று அங்கலாய்த்தாள் இன்னனொரு பெண். எவ்வளவு சீக்கிரமாய் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள்.
காயப்பட்டவர்களுக்காக போராளிகளின் எத்தனை நூறு வாகனங்கள் ஓடியிருக்கும்? கயஸ்களும் பிக்கப்களும் ஏன் பஜிரோக்களும்கூட அவசரத்திற்கு ஏற்றிச்சென்றனவே.
போராளிகள் பயன்படுத்திய வாகனங்களயில் காயமடைந்தோரை ஏற்றாத வாகனம் ஏதும் உண்டா? என்னோடு இறுதி நாட்களில் அறிமுகமான அறிவுகூட நாளொன்றுக்கு நான்கு தடவைகளுக்கு குறையாமல்தான் கயஸ் வாகனத்தில் படிந்த குருதியை கழுவுவானே.
இத்தனைக்கும் அவன் வேலை மருத்துவம்கூட இல்லை. அவனெல்லாம் எதற்காக மாண்டு மாண்டு காயமடைந்தவர்களை எல்லாம் அடிக்கடி ஏற்றி ஏற்றிச்சென்று மருத்துவமனையில் இறக்கினான்.
எறிகணை வெடிப்புகளையும் சீறிவரும் சன்னங்களையும் பொருட்படுத்தாமல் ஓடுவானே. அவனைப்போல எத்தனை நூறு போராளிகள் மக்களுக்கு உதவினார்கள்.
அவர்கள் தம் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் செய்த உதவிகளை எல்லாம் இவ்வளவு சுலபமாக மறந்துவிட்டார்களா எம்மக்கள்?
இத்தனைக வசதிமிக்க அரசாங்கமே உழவூர்திப் பெட்டிகளில்தான் காயப்பட்டவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். இவையெல்லாம் ஏன் இந்த பெண்களுகப்கு புரியவில்லலை. எனக்கு வேதனையாக இருந்தது.
இருள் மெல்ல மெல்ல எங்களை சூழத்தொடங்கியது. படையினர் மின்குழிழ்களை எரியவிட்டு செயற்கை வெளிச்சத்தை பரப்பினர். முட்கம்பி பாதையின் ஊடாக சுமார் ஒருமணிநேரம் நடந்திருப்போம். அந்த பாதையின் முடிவில் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன.
முன்னைநாட் போராளிகள் பலர் நின்று அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.
“மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சாள்ஸ் அன்ரனி, ராதா மோட்டார் படையணி, கண்ணிவெடிப்பிரிவு, கணணிப்பிரிவு, புலனாய்வுத்துறை, அரசியல்துறை, சிறப்புப்படையணிகள் என எல்லாத்தில இருந்த ஆக்களும் வலப்பக்கம் போங்க. பேரை பதிஞ்சிட்டு உங்கட வீட்டுக்காரரோடையே போகலாம்”.
கீறல் விழுந்த ஒலிப்பதிவு நாடா மாதிரி ஆள் மாறி ஆள்மாறி இதையே சொல்லிக்ககொண்டு நின்றார்கள். அதையே கொஞ்சம் சத்தமா ஒலிபெருக்கியிலும் நான்கைந்து வசனங்களை கூடச் சேர்த்தும் சிங்கள குரலொன்று ஒலிபெருக்கியில் அறிவித்துக்கொண்டிருந்தது.
யுத்தம் முடிஞ்சிபோச்சு. பிரபாகரன் செத்தாச்சு. இனி பயம் வேணாம். எல்லாரும் கட்டாயமா பேர் பதிஞ்சிட்டு உங்கட ஆக்களோட அம்மா அப்பாவோட போங்க” என்பதை மணிக்கு நூறுமுறைசொல்லிக் கொண்டிருந்தார்கள். அது மேமாதத்தின் 16 ஆம் திகதி.
தண்ணீரை தாராளமாகக் கொடுத்தான். ஆனால் போத்தல் குடிநீர் போதவில்லை. முந்தியவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தண்ணீரை தேடிப்போகும் எண்ணம் எனக்கு வரவில்லை. அதற்காக தாகம் இல்லை என்றில்லை. ஓரமாக நினறு வருபவர்களை அவதானித்து கொண்டிருந்தேன்.
நாதன் எதிர்பார்த்துக்கொண்டிந்த சந்தியாவும் கங்காவுடன் வந்துசேர்ந்தாள். பின்னர் பதியும் இடத்திற்கு சென்றோம். பட்டப்பகல்போன்ற வெளிச்சத்த்ல் நிற்காமல் சிறிது மங்கலான இடத்திலிருந்து பதிபவர்களிடம் செல்லவே விரும்பினோம்.
முகங்களை பார்த்து எவரிடமும் கதைக்க விருப்பமில்லை. எனினும் நடந்துகொண்டிருந்த என்னை கையைப்பிடித்து நிறுத்தினான் ஒரு படையினன்.
“நான் பதியிறது. வாங்க. பேர் சொல்லுங்க” என்றபடி பதிவதற்கான காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தான். நான் பெயரை சொல்லமுன் படையினருக்கு முன்னேவந்து தொப்பென விழுந்தான் ஒரு பையன்.
“ஐயா தண்ணி தண்ணி” என்று குடிப்பதுபோல சைகைகாட்டி கெஞ்சினான்.
அவனுக்கு இருபுறமுமாக விழுந்துகிடந்த அவனது ஊன்றுதடிகள் எலும்பும் தோலுமாக இருந்த அவனது தோற்றம் மிகுந்த பரிதாபத்துக்குரியதாய் இருந்தது.
வேலிக்கு அப்பால் நின்ற படையினரிடம் பதிபவன் சிங்களத்தில் ஏதோ சொல்ல அவர்களுக்கு சொன்னவனை முறைத்துப்பார்த்து ஏசிவிட்டு சென்றார்கள்.
அதன்பின் அவனே எழுந்துசென்று சிறிய தண்ணீர்” போத்தல்கள் இரண்டை கொண்டுவந்தான். தண்ணீர்கேட்ட பையனோ தன்னை சமாளிக்க இயலாமல் நிலத்திலிருந்த புற்களை பிய்த்து நிலத்தை பிறாண்டினான் ஒரு பைத்தியகாரனைப்போல.
படையினன் தண்ணீரை நீட்டமுன் அதை பறித்தவன் மூடியை திறந்தான். திறபட மறுத்த மூடியை பற்களால் கடித்துப்பிடுங்கி துப்பினான். மடமடவென தண்ணீரை குடித்தான். அரைப்போத்தல் தண்ணீரையும் குடித்துவிட்ட அவன் பலமாக மூச்சுவாங்கினான்.
அவனுக்குபு குப்பென்று வியர்த்தது. பயங்கரமாய் மூச்சு வாங்கிவிட்டு மிகுதித்தண்ணீரையும் மளமளவென குடித்தான். அவனையே பார்த்துக்ககொண்டிருந்த படையினன் அடுத்த போத்தில் தண்ணீரை என்னிடம் தந்தான்.
“நன்றி” என்றபடி நானும் வாங்கிக்ககொண்டேன். அதன் மூடியை இலகுவாக கழற்ற முடியவில்லை. அல்லது அதை திறக்கும் சக்தி என் விரல்களுக்கு இருக்கவில்லை. அருகில் நின்ற இன்னொரு போராளிப்பையனிடம் நீட்டினேன்.
“குடிச்சிட்டு எனக்கும் தாங்க அக்கா” என்றபடி அவன் போத்திலின் மூடியை அகற்றிவிட்டு தந்தான். நானும் பருகிவிட்டு அவனிடம் கொடுத்தேன். அதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான்.
“தங்கச்சி பேர் சொல்லுங்க” என்றுகேள்விகளை கேட்கத் தொடங்கினான். எலும்பும் தோலுமாக படையினனின் அருகில்கிடந்த பையன் இன்னமும் அந்தரப்பட்டுக்ககொண்டிருந்தான்.
அண்மை நாட்களில்தான் காயமடைந்திருப்பான் போலும். குருதியிழப்பே அவனை அவ்வளவு சோர்வடைய செய்திருக்கிறது. நானும் பதிவை கொடுத்துவிட்டு சந்தியாவுக்காக காத்திருந்தேன். அவர்களும் பதிந்துவிட்டுவர நேரம் இரவு பத்து மணியை தாண்டிவிட்டது. மூவருமாகச் சென்று மக்களிடையே அமர்ந்துகொண்டோம். என்ன சொல்வதென்று புரியவில்லை.
பசியோ தாகமோ களைப்போ எதுவுமே தெரியவில்லை. ஆனால் எல்லாம் இருந்தனதான். என் சுடிதாரின் தோள்துண்டை விரித்து மூவரும் நிலத்தில் சரிந்தோம். வானம் இருளாகவே இருந்தது, கண்ணுக்கெட்டிய தூரம்வரை மின்குழிகள் எரிந்துகொண்டிருந்தன.
இருந்திருந்துவிட்டு வட்டுவாகல் தாண்டிய பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டுக்ககொண்டுதான் இருந்தன. எனக்கு தலைவலித்தது. மூளை களைத்துப்போனதால் ஏற்பட்ட வலி. கண்களை மூடிக்கொண்டு அமைதியாக கிடக்கத்தான் முயன்றேன்.
அந்த இரவு மிகவும் கொடியதாய் இருந்தது. இப்போதைக்கு விடியமாட்டேன் என்றது. நித்திரையுமில்லாத விழிப்புமில்லாத அரைமயக்க நிலையில் கிடந்த என் கால்கள் வலித்தன. நாரி அறுந்துவிடுமளவுக்கு உளைந்தது.
சற்றே திரும்பக்கூட இடமற்று நெருங்கிக்ககொண்டு கிடந்த என் உடலால் வேதனையை தாங்கிக்ககொள்ள முடியவில்லை. தாங்க இயலாமல் கண்களில் வழிந்த துயரத்தை துடைத்தபடியே அந்த நீண்டதான இரவை கழித்தேன்.
அடுத்தநாள் விடிந்துவிட்டது. 17.05.2009 பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் வெட்டைவெளி முழுவதையும் நிறைத்துக்கிடந்தார்கள்.
அழுக்கு ஆடைகளோடு குழப்பமான உணர்வுகளோடு நின்ற அவர்களில் எவரும் எவருடனும் எதுவும் பேசிப்பகிரவில்லை. ஆளாளுக்கு தண்ணீர் தேடியும் உணவு தேடியும் அலைந்தார்கள்.
உடலால் இயங்கக்கூடிய மனிதர்கள் ஆயிரக்கணக்கானோரிடையே அடிபிடிப்பட்டு அவற்றை கொண்டுவந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் உணவுப் பொதிகளுடனோ தணணீர் போத்தில்களுடனோ போவதையும் வருவதையும் காணமுடிந்தது.
சிலர் தம் உடைகளையும் நனைத்துக்கொண்டு சென்றார்கள். “ஒரு போத்தில் தண்ணிக்காககூட இரத்தம் சிந்தவேண்டி இருக்கு” என்றபடி எங்களை கடந்து சென்றவரை அவதானித்தேன். அவரது கெண்டைக்காலில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது.
கொஞ்சத் தண்ணீருக்கு தொகையானவர்கள் போட்டி போடுவதால் ஏற்படும் தகராறுகளை போக்க படையினர் வரிசையில் நிற்கச் சொன்னார்களாம். வரிசையில் நின்றால் கிடைக்காதென்று அதை குழப்பிக் கொண்டு நின்ற அனைவருக்கும் மட்டையடி விழுந்ததாம்.
இப்படியான கதைகள் கேள்விப்படவே தண்ணீர் வேண்டாம் என்றுவிட்து என் உள்ளுணர்வு. இடிபட்டுப்போய் ஒரு குவளை தண்ணீரைகூட எடுத்துவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அடடா பதியும் இடத்தில் தந்த போத்தலையாவது கொண்டு வந்திருக்கலாமே என்று கவலையாக இருந்தது,
தொடரும்…………….
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 1
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 2
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 3
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 4
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 5
- வன்னி இறுதி நாட்கள் ஒரு நேரடி சாட்சியின் அனுபவம் 6
Comments