புலம்பெயர் தேசங்கள் எங்கும் புதிய கருணாக்கள்

உலகின் மனிதாபிமானம் மிக்க நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் கடும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காக சிங்கள தேசம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அதன் முழு இலக்கும் புலம்பெயர் தமிழர்களை நோக்கியதாகவே உள்ளது.

இலங்கைத் தீவினுள்ளே சிங்கள அரசின் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கையினையும் எதிர்த்து நிற்கும் பலம் ஈழத் தமிழர்களுக்கு இப்போது கிடையாது. இப்போதும் அவர்களுக்கான அரசியல் பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் அளவிற்குப் பலமற்றவர்களாகவே நாட்டின் உள்ளேயும் வெளியேயும் அலைய வைக்கப்படுகிறார்கள். ஆதலால், சிங்கள தேசம் தமிழ் மக்கள் குறித்தோ, அவர்களது அரசியல் பலம் குறித்தோ அலட்டிக்கொள்ள வேண்டிய நிலையில் இப்போதும் இல்லை என்பதே யதார்த்தம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் சிங்கள தேசத்தை அச்சப்படுத்தும் சக்தியாகப் புலம்பெயர் தமிழர்களின் பலம் மட்டுமே உள்ளது. அதனைச் சிதைப்பதற்கும், அழிப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் சிங்கள தேசம் மேற்கொண்டு வருவதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்ச்சி நிரலின்படியான நிகழ்வு ஒன்றே தற்போது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொதி நிலையை உருவாக்கியுள்ளது.

சிங்கள தேசத்திற்கு இரகசிய பயணத்தை மேற்கொண்டு, மீண்டும் தத்தமது புலம்பெயர் நாடுகளுக்குத் திரும்பிய 9 பேர் கொண்ட குழுவினர் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களின் கொதி நிலைக்கு எரிசக்தியாக உள்ளனர். இந்தக் குழுவினரின் சிறிலங்காப் பயணம் இன்னொரு உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இதுவரை காலமும் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் குறித்து, இந்தப் பயணத்தை மேற்கொண்டு திரும்பியவர்கள் வெளியிடும் மாறுபாடான கருத்துக்கள் அதிர்ச்சிகள் நிறைந்தனவாகவே உள்ளன.

கே.பி. அவரது எதிரிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். கே.பி. சிறிலங்காப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். கே.பி. சிங்களச் சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். போன்ற அவரது விசுவாசிகளின் பரப்புரைகளுக்கும், கே.பி. குறித்து மக்கள் மத்தியில் எழுந்திருந்த பல சந்தேகங்களுக்கும் இந்த 9 பேரது பயணம் பல விடைகளைக் கொடுத்துள்ளது.

கே.பி. நலமாக இருக்கிறார். கே.பி. வசதியாக இருக்கிறார். கே.பி. சந்தோசமாக இருக்கிறார். கே.பி. சிங்கள அரசின் மரியாதைக்குரிய விருந்தினராக இரக்கிறார். கே.பி. சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண அவர்களுடன் 2006 முதலே தொடர்பில் இருந்துள்ளார்.

கே.பி. அவர்களிடம் இராணுவ அதிகாரிகள் மிகுந்த மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். கே.பி. சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும், போர்க் குற்றவாளியுமான கோத்தபாய ராஜபக்ஷவை ஆரத் தழுவ முற்பட்டார் என்ற செய்திகளெல்லாம் ஊடகங்கள் ஊடாக வந்து குவிந்து கொண்டே உள்ளன.

இவற்றையெல்லாம் வெளியிடுபவர்கள் வேறு யாரும் இல்லை. திரு. கே.பி. அவர்களுடன் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தொலைபேசித் தொடர்பில் இருந்தவர்கள். திரு. கே.பி. அவர்கள் தனக்கு நெருக்கமானவர்களாக, தன்னால் நம்பக்கூடியவர்களாகத் தமது பல நூறு ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து பொறுக்கி எடுத்து, கொழும்புக்கு அழைத்து, விருந்து வைத்துத் தன் விருப்பங்களை நிறைவேற்ற அழைத்தவர்கள்தான் இந்தக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

ஒருவர் வெளியிடும் கருத்துக்கும், மற்றவர் வெளியிடும் கருத்துக்குமிடையே அதிக வித்தியாசங்கள் இல்லாதிருப்பினும், சிலர் உண்மைகளை மறைத்து, கே.பி.யைக் காப்பாற்ற முயல்கிறாhகள் என்றே புலம்பெயர் தமிழர்கள் நம்புகிறார்கள்.

நாங்கள் அல்லல்படும் எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகளை விடுவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம் கதை விடும் இந்தப் புதிய கருணாக்கள், இந்தப் பணியைச் செய்வதாகத்தானே இருபது வருடங்களுக்கும் மேலாக சிங்கள தேசத்திடம் அமைச்சராகக் குப்பை கொட்டும் டக்ளஸ் இன்றுவரை சொல்கிறார்.

அதற்கும் மேலாக, இவர்கள் எதை வெட்டிக் கிழிக்கப் போனார்கள் என்பது புரியாத புதிரல்ல. ஏற்கனவே, இவர்களது பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களும், கருணாவும், ஆனந்தசங்கரியும் இதைத்தானே சொல்லி வருகின்றார்கள். இதற்கும் மேலாக இங்கிருந்து சென்றவர்கள் எதைச் சாதிக்க முயன்றார்கள் என்பது எமது மக்களுக்குப் புரியாத விடயமல்ல.

புலம்பெயர் தேசங்கள் எங்கும் புதிய கருணாக்கள் உருவாக வேண்டும். அதன் மூலம், புலம்பெயர் தமிழர்களது பலம் சிதைக்கப்பட வேண்டும் என்ற சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல் ஒன்றும் எதிர்பார்க்கப்படாத அதிசயயமல்ல. அதனை உருவாக்காமல் விட்டுவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

ஒரு கெட்டதிலும், ஒரு நல்லது நடக்கும் என்பார்கள். இவர்கள் இப்போது போய் வந்தார்கள், அடையாளம் கண்டு கொண்டோம். இன்னமும் போவார்கள். அதனையும் கண்டு கொள்வோம். அதுவொன்றும் ஆச்சர்யமான விடயம் அல்ல. எங்கள் சூரியதேவனுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கருணாவை உருவாக்க முடிந்த சிங்கள தேசத்தால் இதுவொன்றும் சாத்தியமே அல்லாத சந்தனக் குளம் அல்ல. இங்கும் சாக்கடைகள் ஓடுகின்றன.

எமது மக்களை அழித்தவர்களிடமே எங்கள் வளங்களைக் கொடுத்து அந்த மக்களைக் காப்பாற்ற ஆலோசனை வழங்குகிறார்கள். எங்கள் தேசத்துப் புயல்களைச் சிதைத்தவர்களிடமே யாசகம் செய்து போராளிகளைச் சிறை மீட்கத் திட்டங்கள் போட்டுத் தருகிறார்கள்.
சிங்கள தேசத்தால் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர், அவர்கள் யுத்த கேடயங்களாகப் பாவித்ததாக உலகிற்கு அறிவித்த சிங்கள தேசம் தப்பி வந்த தமிழர்களுக்குப் புகலிடம் வழங்கி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருந்தால் இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களைப் புலிகள் என்பதால், யுத்த தர்மத்தையும் மீறிச் சுட்டுக் கொன்ற சிங்கள அரசு, பிடிபட்ட விடுதலைப் புலிகளை என்ன செய்தது என்பது ஆதாரங்களுடன் வெளி வராமல் விட்டிருந்தால், அப்போதும் இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

கொடூரமான பேரழிவு ஆயுதங்கள் கொண்டு, தமிழீழ மக்களை அவர்களது அரசியல் அபிலாசைகளுடன் ஆயிரம் ஆயிரமாய்... இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்து, அவர்களை மௌனமாக்கிய பின்னராவது, ஈழத் தமிழர்கள் கள முனையில் தோற்றுப் போனதை வெற்றி விழாவாகக் கொண்டாடாமல் தவிர்த்திருந்தால், இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் முகம் புதைத்து, மௌனமாகிப் போன தமிழர்கள் வாழ்விடங்கள் எல்லாம் பேய்களாக சிங்கள வெறியர்களை அனுப்பி, அவர்களது காவல் தெய்வங்களின் கல்லறைகளையாவது விட்டுவிட்டிருந்தால், இந்தக் கருணாக்கள் சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருக்க முடியும்.

ஆனால், எதுவும் நடக்கவில்லையே! சிங்கள இனவெறிச் சிந்தனையில் எந்த மாற்றமும் நிகழவில்லையே! எதற்காக இந்தச் சரணாகதி? ஒரு மாதத்தில் சாகப் போகின்ற தமிழர்களின் விதியை ஒரு வருடம் தள்ளி வைக்கும் இரக்கத்தினால் வந்த முடிவா? முள்ளிவாய்க்காலில் தப்பி வந்து முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த எம் உறவுகள் ''இங்கே வந்து இத்தனை சீரழிவு படுவோம் என்று தெரிந்திருந்தால், அங்கேயே செத்துத் தொலைத்திருப்போமே'' என்றல்லவா அலறினார்கள். அந்த அவலத்திற்குள் அத்தனையும் பறிக்கப்பட்டவர்கள் இப்போதும் வாழ்கிறார்கள் என்ற அர்த்தத்தினாலா இந்த முடிவு?

கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சிங்களம் தீர்மானித்த அத்தனை புலிகளும் விதம் விதமாய்க் கொல்லப்பட்ட பின்னர், உலக நாடுகளுக்குக் கணக்குக் காட்டுவதற்காய் இறுதியாகக் காட்டப்பட்ட பத்தாயிரம் போராளிகளுக்காகவா எங்கள் மாவீரர்களும், மக்களும் கல்லறைகளை நிறைத்தார்கள்? அவர்கள் கனவுகளுக்குப் பதில் என்ன? எப்படியும் வாழலாம் என்று உங்களைப்போல் வாழ்ந்தவர்களா அவர்கள்? எதற்காகவும் எதனையும் விற்கலாம் என்ற மானமிழந்தவர்களா அவர்கள்? இறுதிப் போர்க் களத்திலும், தன் உயிர் உள்ளவரை போராடிய மாவீரர்கள் இதற்காகவா அநாதைப் பிணமானார்கள்? இருக்கின்ற இரண்டு விமானங்களும் பயனற்று எதிரியிடம் சென்றுவிடக் கூடாது என்று கொழும்புவரை பறந்து, அதிரவைத்து அழிந்தார்களே அந்த வான் புலிகள், அவர்கள் எதை நம்பி இந்த முடிவை எடுத்தார்கள்? இத்தனைக்குப் பின்னரும் சரணடைதல் என்பது, ஈனத்தனத்தின் அதி உச்சம். சரணடைதல் ஊடாக சிங்களத்திடம் மாற்றம் உருவாகும் என்பது பைத்தியங்களின் கற்பனை.

நீதி, நேர்மை, மனிதாபிமானம் ஊடாகவே மாற்றங்கள் உருவாக வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அத்தனை காரணங்களும், பொறுப்பும் சிங்களத்திடமே உள்ளது. அதனைச் சீர் செய்ய இத்தனை வருடங்களின் பின்னரும் அதனிடம் எதுவுமே இல்லை என்பதே, இந்தப் போராட்டத்தை அன்னமும் தொடர வைக்கின்றது. சின்னதாக, சிறிதாக எந்த மாற்றத்தையும் அனுமதிக்காத சிங்களத்திடம் புலம்பெயர் தமிழர்களது பலத்தையும் இழப்பதற்கு நீங்கள் எதனைப் பெற்றீர்கள்? எவ்வளவு பெற்றீர்கள்? என்பதே இப்போது விடை தெரிய வேண்டிய கேள்வியாக உள்ளது.

- அதியமான்-

Comments