இந்திய சிறிலங்கா ஆட்சிபீடங்களின் துருப்புச்சீட்டு சிவாஜிலிங்கம்!!

Shivajilingham-mahinda-sonia

தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்தவிடயம்.

இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகளும், சிறீலங்காவின் தற்போதைய அரச பீடமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்பாய் சிவாஜிலிங்கத்தின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் எமக்குக் கிட்டியுள்ளன.

சிறீலங்காவின் தேர்தல் களத்தில் எதிர் எதிர்த் தரப்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் சராசரியான சம பலத்துடன் கூடிய போட்டி நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களுக்கே உண்டென்பதை இந்தியாவும் சிறீலங்காவும் நன்கு விளங்கிக் கொண்டுள்ளன. ஆட்சிப் பீடத்தில் சரத் பொன்சேகா ஏறுவதை இந்தியா விரும்பவில்லை. காரணம்வேறு ஆனால் இலக்கு ஒன்று என்ற ரீதியில் மகிந்த தரப்பும் சரத்தின் வருகையை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே தமிழர் தரப்பின் வாக்குகளை மகிந்தவிற்கு இல்லாது விடினும் பறவாய் இல்லை சரத் பொன்சேகாவிற்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை முற்றாக தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த இந்திய மற்றும் சிங்கள ஆட்சிப் பீடங்கள் சிவாஜிலிங்கம் என்ற துருப்புச் சீட்டை தமது கைகளில் எடுத்துக் கொண்டன. தமிழ்த் தேசியத்திற்காகவே தொடர்ந்து போராடிவந்த சிவாஜிலிங்கம் சிறிலங்கா இந்திய ஆட்சி பீடங்களின் சதியை அறியாதவராக அவர்களின் வலையில் விழுந்துவிட்டதுதான் இன்னும் ஆச்சரியமாகவிருக்கிறது.

பெறுமதி மிக்க வாகனம் ஒன்றை வன்னிப் பகுதிக்கு கொண்டு சென்று விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல பத்து மணித்தியாலயங்களாக சிறீலங்காவின் இரகசிய பொலிசாரினால் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிவாஜிலிங்கம் இந்தியாவிற்குச் சென்று பின்னர் பல மாதங்களாக வெளிநாடுகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் மாறி மாறி பயணம் செய்த செய்திகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

இந்தக் காலப் பகுதியில் தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மை என்று இரு நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கூறப்படுகின்ற அந்த விடயத்தை கேள்விக்குறியாக்குகின்ற வகையிலான காரசாரமான மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி வந்த சிவாஜிலிங்கத்தால் எவ்வாறு இரு நாட்டில் இருந்தும் இலகுவாகத் தப்பிக்க முடிந்தது என்ற கேள்வி உங்களுக்கு எழவில்லையா?

பொங்கு தமிழ் நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சிறீலங்காவின் இரகசியப் பொலிசாரினால் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க வாய்பில்லை. ஆனாலும் சிவாஜிலிங்கம் திடீரென்று இலங்கைக்கு வரவும் அவருக்கு எந்த ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படவில்லையே. இதன் மூலம் சிறீலங்காவில் திடீர் ஜனநாயகம் முளைத்திருக்கிறதா? என்றெண்ணினால் அது நகைப்புக்குரியது.

இந்த விடயங்கள் அனைத்திற்கும் பின்னால் இரண்டு நாட்டு ஆட்சிப் பீடங்களும் இருக்கின்றமை தற்போது அம்பலமாகிவருகின்றது. சிவாஜிலிங்கத்தின் திடீர் நடவடிக்கை இதற்கு சான்று பகர்கின்றது. சிவாஜிலிங்கத்தினை அணுகிய சிங்கள ஆட்சிபீடம் தமிழ்த் தேசிய பற்றாளரை தந்திரமாக பயன்படுத்துவதன் மூலம் தனக்கு கிடைக்காத வாக்குகளை தனது எதிரிக்கும் கிடைக்ககூடாது என்பதில் கவனமாக செயற்படுகின்றது.

அதேவேளை இந்தியாவில் அவர் இருந்த வேளையில் அவரை இந்தியாவின் கொள்கை வகுப்பு சக்திகள் சந்தித்து அவரது தலையில் மிளகாய் அரைத்துள்ளனர். இந்த அரசுகளின் சதிகளை அறியாத சிவாஜிலிங்கத்திற்கு உசுப்பேத்திவிட இன்னொரு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் இணைந்துகொண்டார்.

அவர் - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமல், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அவர்களின் இடங்கள் நிரப்பப்பட்ட போது அந்தக் கதிரைகளில் ஒன்றைப் பற்றிக் கொண்டவரான சிறீகாந்தா. இவர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தச் சென்ற போது கூடவே சென்றிருக்கின்றார். இவரே சிறீலங்காவின் அரச தலைப்பீடத்திற்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையிலான தரகர் பணி புரிந்தவர் என்ற உண்மையும் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

மகிந்தவோடு சமரச அரசியல் நடத்தினால்தான் தற்போதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியுமென அண்மைக்காலமாக சொல்லியும் அதற்கு ஏற்றவாறு செயற்பட்டும்வந்தவர்களில் ஒருவர் சிறிகாந்தா. தற்போது மறைமுகமாக மகிந்தவுக்கு உதவி செய்வதற்கு தானோ இவர் சிவாஜிலிங்கத்தை கூட்டமைப்பிலிருந்து கூட்டிச்சென்றார் என்ற கேள்வி எழவே செய்கின்றது.

தமிழ்த்தேசியத்தினை எவரும் விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாது! சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது அவருக்கு துணை நிற்கும் சிறீகாந்தாவிற்கோ மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் என்பது அவர்களை பெரிதுபடுத்தி மக்களால் வழங்கப்படவில்லை. மாறாக மண்ணிற்காய் விதையான உயிர்களுக்கான காணிக்கைகளாகவே மக்கள் தமது வாக்குகளை வழங்கினர் என்பதை இந்திய மற்றும் சிறிலங்காவின் அதிகார வர்க்கங்கள் புரிந்துகொண்டுள்ளன. அதனை சரியாக பயன்படுத்த மகிந்தவின் தந்திரபுத்தி பெருமளவில் உதவிசெய்திருக்கிறது. தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்திய ஒரு பிரதிநிதியின் மூலமே மகிந்த தனது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த முயற்சிப்பது இங்கு வெளிப்படையாகவே கண்டுகொள்ளலாம். தமிழ்த் தேசியத்தை உண்மையாகவே பலப்படுத்தவேண்டும் என சிவாஜிலிங்கம் நினைப்பாரானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தனது பணியை முன்னெடுத்திருக்கவேண்டும். அதனைவிட்டு தமிழ்த் தேசிய சக்திகளை பல முனைகளில் உடைக்கும் எதிரிகளின் சதிகளுக்கு துணைபோனவராகவே அவர் வரலாற்றில் இனங்காணப்படுவார்.

ஒருமித்த குரலில ஓங்கி எழுப்பவேண்டிய உரிமைக்குரலை ஒவ்வொரு கூறாக உடைக்கும் இந்த முயற்சிகளை தமிழ்மக்கள் இனங்கண்டுள்ளார்கள். இதனை சிவாஜிலிங்கம் போன்றவர்கள் புரிந்துகொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த சக்தியாக பயணிக்கமுன்வரவேண்டும். அதுவே காலத்தின் தேவை.

- இராவணேசன்

sivajalingam-thuroki1

பின்குறிப்பு:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு சில நாட்களுக்குள் வழங்கிய நேர்காணலின் சில பகுதிகள்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பிற்குள் நிலவுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஒன்றாகவே செயற்படும். ஆனால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகள் உண்டு. அவையாவும் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்.

கட்சியில் உள்ள குறிப்பிட்ட ஒருசிலர் தாம் எடுக்கும் முடிவுகளை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் திணிக்கவோ மக்களை விருப்புக்கு மாறாக வழிநடத்தவோ முடியாது. அவ்வாறு செயற்பட யாராவது முற்பட்டால் அவர்களை வரலாறு மன்னிக்காது.

சுயநல அரசியலுக்காக எமது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. இந்த ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தின் போது எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எவரும் மறந்துவிட முடியாது. இதை மறந்துவிட்ட நிலையில் கூட ஒரு சிலர் நடந்து கொள்வது வேதனை தருகின்றது. இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை நோக்காகக் கொண்டு செயற்பட்டாலும் மக்களின் வலியைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறானவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

இந்தியாவின் நலனுக்காக நாம் அரசியல் செய்ய முடியாது. இந்தியாவின் சதி முயற்சியினாலேயே நாம் இன்று இந் நிலைக்கு வந்துள்ளோம். இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இந்தியா தனது நலனைக் கருத்திக் கொண்டு யாருக்கு ஆதரவு வழங்க வேண்டுமென கூட்டமைப்புக்கு உத்தரவிடலாம்.

ஆனால் நாம் அதற்கு இசைந்து போக முடியாது. எனினும் இந்தியாவின் சொல்லைத் தட்ட முடியாது எனத் தெரிவித்து அல்லது இராஜதந்திர காய் நகர்த்தல் எனக் கூறி எமது கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒரு சிலர் இந்தியாவின் உத்தரவுக்கு இணைந்து போக முற்படலாம். ஆனால் அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அது பாதகமான நிலையையே ஏற்படுத்தும்.


Comments